தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 15 april 2014

வடமராட்சியைச் சேர்ந்த உள்ளுர் செய்தியாளர் சிவஞானம் செல்வதீபனை அடையாளம் தெரியாதவர்கள் தாக்குதல்

சித்திரைப் புத்தாண்டு தினமாகிய நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம், வடமராட்சியைச் சேர்ந்த உள்ளுர் செய்தியாளர் சிவஞானம் செல்வதீபனை அடையாளம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியதை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்திருக்கின்றது.
அவரைத் தாக்கியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும், யாழ் செய்தியாளர்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கும் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரியிருக்கின்றது.
வடமராட்சி பிரதேசத்தின் செய்தியாளராக வீரகேசரி மற்றும் தினக்குரல் ஆகிய பத்திரிகைகளுக்கு அவர் பணியாற்றி வருகின்றார்.
இரவு எட்டரை மணியளவில் தனது தாயாரைப் பார்த்து விட்டு, தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது செல்வதீபன் தாக்கப்பட்டுள்ளார்.
வெளிச்சமில்லாமல் அவரைப் பின் தொடர்ந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் யாழ் புறாப்பொறுக்கி வல்லைவெளியில் வைத்து, ''செய்தியாளரா நீ'' எனக் கேட்டு இரும்புக்கம்பியினால் பிடரியிலும் இடுப்பிலும் தாக்கியுள்ளதாக நெல்லியடி காவல்துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது.
திடிரென நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக காயமடைந்து, நிலைகுலைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அவரை மேலும் தாக்குவதற்கு அவர்கள் முயன்றுள்ளார்கள். எனினும் செல்வதீபன் தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்து பற்றைக்குள் ஓடித் தப்பியுள்ளார்.
அதேநேரம் அந்த வீதி வழியாக வந்தவர்களும், யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறைக்குச் சென்று கொண்டிருந்த பேரூந்து ஒன்றும் செல்வதீபனின் சேதமாக்கப்பட்ட மோட்டார் சைக்கிளைக் கண்டு அவ்விடத்தில் கூடியுள்ளனர்.
இதனையடுத்து மறைவிடத்தில் இருந்து வெளியில் வந்த செல்வதீபன் மந்திகை வைத்தியசாலையக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து நெல்லியடி காவல்துறையினர் செய்தியாளர் சிவஞானம் செல்வதீபனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து, விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து முன்னர் காணாமல் போயிருக்கும் தனது சகோதரன் தொடர்பாக தனது தாயாருடன் இணைந்து செல்வதீபன் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகள் நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றிடம் சாட்சியமளித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக அடையாளம் தெரியாதவர்கள் தன்னைப் பின்தொடர்வதாகவும், தனக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்ததாகவும், தனது சகாக்களிடம் அவர் கூறியிருந்தாகத் தெரிவித்தார்.
வடக்கில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதும், அவர்கள் தாக்கப்படுவதும் வழமையான நிகழ்வாகியிருக்கின்றது. இதனால் அங்கு ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது என்பதை, அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் கே.ஜெயேந்திரன், இத்தகைய சம்பவங்கள் இனிமேலும் நடவாதிருப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளரை கூட்டமைப்பினர் நேரில் சென்று பார்வை
கடந்த 14.04.2014 திங்கட்கிழமை புத்தாண்டன்று வல்லை வெளிப்பகுதியில் கடுமையாகத்தாக்கப்பட்டு, மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாணசபை உறுப்பினர்களான வே.சிவயோகன், க.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், ச.சுகிர்தன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
இச்சம்பவத்தைக்கண்டித்து வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில்,
போர் முடிந்த பின், தமிழருக்கு வட- கிழக்கில் எவ்வித பிரச்சனைகளும் இல்லை. வடக்கில் வசந்தம் வீசுகிறது என அரசாங்கம் உலகை ஏமாற்றி பொய்யுரைத்து வருகிறது. ஆனால் ஒழுங்கற்ற மீள்குடியேற்றமும், உதவிகள் வழங்கப்படாமை, துரித சிங்களமயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம் என்பனவே இடம்பெறுவதுடன், மக்கள் சொல்லொணாத்துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
இவ்வாறான மக்களின் துன்ப துயரங்களையும், அரசாங்கத்தின் பொய்ப்பித்தலாட்டங்களையும் தெட்டத்தெளிவாக ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் வெளியுலகத்துக்கு வெட்டவெளிச்சமாக்கி வருகிறனர்.
இது தனது நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான செயற்பாடு என்பதால் அரசு ஊடகவியலாளர்கள் மீது வன்மத்துடன் காழ்ப்புணர்வு கொண்டதனால் காலத்துக்குக்காலம் ஊடகவியாலாளர்கள் மீதும், ஊடகங்கள் மீதும் வன்முறைத்தாக்குதல்கள் அரசாங்கத்தினாலும், அரசாங்க ஆதரவு பெற்ற குழுக்களாலும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன என் நாங்கள் சந்தேகிக்கின்றோம்.
அதன் சமீபத்திய தொடர்ச்சியாகத்தான் புத்தாண்டு தினத்தன்று வடமராட்சி, கரவெட்டியைச் சேர்ந்த சிவஞானம் செல்வதீபன் , வயது 29 எனும் ஊடக நண்பன் மீது இனந்தெரியாதோர் என்ற போர்வையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஊடக சுதந்திரம் பேணப்படுகிறது, மனிஉரிமைகள் காக்கக்கப்டுகின்றன, தமிழர்கள் சர்வதேசத்துக்கு பொய் சொல்கிறார்கள் என்று கூறிவருவோர் இச்சம்பவத்தின் மூலம் மீண்டும் ஒருதடவை தங்களை அம்பலப்படுத்தியுள்ளனர்.
இத்தாக்குதல் மூலம் ஊடக சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரமும் மீறப்பட்டுள்ளதுடன், வடக்கில் வாழும் தமிழர்கள் எவ்வாறான அவல வாழ்வை வாழ்கின்றார்கள் என்றும் உலகுக்கு மீண்டும் எடுத்தியம்பும் சம்பவமாகவும் அமைந்துள்ளது.
ஆகவே பாதிக்கப்படும் மக்களின் குரலாக விளங்கும் செல்வதீபன் போன்ற ஊடக நண்பர்களின் மீதான இவ் வன்முறைத்தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதுடன், தாக்குதலாளிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தக்கேள்விக்கான பதில் காவல்துறைனராலேயே வழங்கப்பட வேண்டும். இத்தாக்குதலில் படுகாயமடைந்த நண்பன் சி.செல்வதீபன் வேகமாகக் குணமடைந்து முன்பை விடவும், வேகமாக தனது ஊடகப்பணியை மேற்கொண்டிட வேண்டும் என விரும்புகின்றேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.


Geen opmerkingen:

Een reactie posten