அமெரிக்கத் தந்திரம் ஜெனிவா தீர்மானம்! ரஜீவ விஜேசிங்க ஒப்பாரி
ஐ.நா மனிதஉரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம், அமெரிக்காவின் தந்திரமான செயற்பாடு என்று, ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். அல்ஜெசீரா இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர், இந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்கள் தீர்மானத்துக்கு தேவையற்றவை. வஞ்சனையான சில நோக்கங்களுடன் அமெரிக்கா இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களில் மறுசீரமைப்பு மற்றும் இனப்பிரச்சினை தீர்வு போன்ற விடயங்களை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே மேற்கொண்டு வருகிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த அமைப்புகளை பலவீனப்படுத்தும் என்று கருதப்படுகிறது. அதேநேரம் அதிகாரப்பகிர்வு நாட்டை பிளவுபடுத்தும் என்று உள்நாட்டில் உள்ள அடிப்படைவாத அரசியல்வாதிகள் கருதுகின்றனர். இந்த இரண்டுக்கும் இடையிலான தீர்வு ஒன்றை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இதற்கு பிராந்திய நாடுகளுடன் இணைந்து இலங்கை செயற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்
60 பேரிடம் ஐ.நா விசாரணை வீடியோ கொன்பிரன்ஸ்! மூலம் என்கிறது சகோதர ஊடகம்
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க உள்ளார் என்று சகோதர சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் வாரத்தில் இந்த விசாரணை ஆணைக்குழு பணிகளை ஆரம்பிக்க உள்ளது. வீடியோ கொன்பிரன்ஸ் முறையின் ஊடாக வடக்கில் உள்ள சாட்சியாளர்களிடம் தகவல்கள் திரட்டப்பட உள்ளது. இந்த ஆணைக்குழுவில் மூன்று உறுப்பினர்கள் அங்கம் வகிக்க உள்ளனர். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்ட 60 பேர் அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, சாட்சியாளர்களின் சர்வதேச தொடர்புகளை துண்டிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா ஆணைக்குழு விசாரணை மூலம் படையினரையும் அரசியல்வாதிகளையும் குற்றவாளியாக்க முயற்சிக்கப்படுவதாகவும், குற்றவாளியாக்கப்படும் அதிகாரிகள் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய முடியாத வகையில் தடைகள் விதிக்கப்படக் கூடுமென சிங்களப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten