தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 juni 2013

இலங்கை மீதான பிடியை நழுவ விடுகிறதா இந்தியா?


கடந்த வாரம் சீனா சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு 2.2 பில்லியன் டொலரை அபிவிருத்தித் திட்டங்களுக்கான கடனுதவியாக வழங்க சீனா இணங்கியுள்ளது.
இந்தச் செய்தியை வெளியிட்ட ரொய்ட்டர்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் இது இந்தியாவுக்கு கவலையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்பதைக் குறிப்பிடவும் தவறவில்லை.
இலங்கையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அதிகரிக்கத் தொடங்கிய சீனாவுடனான நெருக்கம் போர் முடிவுக்கு வந்த பின்னர் இன்னும் அதிகமானது. இப்போது அந்த நெருக்கம் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு வலுவடைந்துள்ளது.
இலங்கையில் சீன முதலீடுகள் அதிகரித்து வருவதை இந்தியாவினாலோ, அமெரிக்காவினாலோ மட்டுமன்றி ஜப்பானால் கூட சகித்துக் கொள்ள இயலவில்லை.
இலங்கையில் அதிகரித்துள்ள சீன முதலீடுகள், தலையீடுகள் விடயத்தில் அதிகம் கவலை கொண்டுள்ள நாடு இந்தியா தான்.
சீனா குறித்து இந்தியா கொண்டுள்ள கவலை தனியே, இலங்கையின் மீதான தலையீடு மட்டுமல்ல. இந்தியாவைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், மாலைதீவு, இலங்கை, பங்களாதே�், மியன்மார் என்று பலநாடுகளிலும் சீனா தனது கால்களை ஊன்றி வருவதால் தான், இந்தியாவுக்கு அதிகமான கடுப்பு, கோபம், அச்சம் எல்லாமே.
தன்னைச்சுற்றி முத்துமாலை போன்ற வியூகத்தை சீனா வகுப்பதாக அச்சம் கொள்ளும் இந்தியா இதனை முறியடிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் இதுவரை பெரியளவில் வெற்றி பெறவில்லை என்பதே உண்மை. அதற்கு இலங்கை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டாலே போதும்.
இலங்கையில் சீனத் தலையீடுகள் குறித்து இந்தியா அதிகம் கவலை கொண்டுள்ள போதிலும்,சீனாவின் தலையீடுகளை தடுப்பதில் தொடர்ந்து தோல்வி கண்டே வருகிறது.
2.2 பில்லியன் டொலர் கடனுதவியுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் சீனாவில் இருந்து திரும்பியதை இதற்கான ஆதாரமாகக் கொள்ளலாம்.
ஏற்கனவே அம்பாந்தோட்டையில் துறைமுகம், விமானநிலையம் என்பவற்றை அபிவிருத்தி செய்ய சீனா எடுத்த நடவடிக்கை இந்தியாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.
இந்தத் திட்டங்களை சீனா மேற்கொள்ளத் தொடங்கியதும், அங்கு தனது துணைத் தூதரகம் ஒன்றை இந்தியா திறந்து கொண்டது,
இதன் மூலம் அம்பாந்தோட்டை குறித்து இந்தியா கொண்டுள்ள அச்சத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.
அதுமட்டுமன்றி பாரிய உட்கட்டுமான திட்டங்களில் கால் வைத்து வந்த சீனா இப்போது நடுத்தர, சிறிய திட்டங்களிலும் முதலீடுகளை செய்யத் தொடங்கியுள்ளது.
இது இந்தியாவுக்கு இன்னும் எரிச்சலூட்டும் விடயமாக மாறியிருந்த நிலையில் தான் இப்போது 2.2 பில்லியன் டொலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவுக்கு அதிகம் சினமூட்டுகின்ற விடயம் என்னவென்றால் வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தை சீனா கைப்பற்றியுள்ளதுதான்.
ஏனென்றால் தெற்கில் சீனாவின் முதலீடுகள், திட்டங்கள் குறித்து இந்தியா கவலைப்ஹபட்டாலும் வடக்கில் அந்த ஆதிக்கம் அவ்வளவாக விரிவடைய இந்தியா இடமளிக்கவில்லை. இதனால் தான் வடக்கிற்கான ரயில் பாதை புனரமைப்பு பணிகளை இந்தியாலே முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொண்டது.
ஆரம்பத்தில் இந்தியா வடக்கிற்கான ரயில் பாதையை மதவாச்சி தொடக்கம் தலைமன்னார் வரையும், வவுனியா தொடக்கம் பளை வரையிலுமே மேற்கொள்ள இணங்கியது. மதவாச்சி - தலைமன்னரை் வரையிலான ரயில் பாதையை அமைப்பதால் நேரடியாக இந்தியா பயனடையும்.
இராமேஸ்வரம் தலைமன்னால் கப்பல் சேவைக்கு அதன் மூலம் நன்மை கிடைக்கும். ஆனால் யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவையால் இந்தியாவுக்கு நேரடியான நன்மை அதிகம் கிடைக்காது.அதனால் தான் பளை வரை ரயில் பாதையை அமைப்பதற்கே அது முதலில் இணங்கியது.
அதற்கு அப்பால் பளை தொடக்கம் காங்கேசன் துறை வரையில் ரயில் பாதையை அமைக்க சீனா இணங்கியதும் இந்தியா விழித்துக் கொண்டது.
சீனாவிடம் அதனை ஒப்படைக்க வேண்டாம் என்றும்,அதனைத் தாமே செய்து தருவதாகவும் உறுதியளித்தது.
சீனாவிடம் அந்தப் பணி ஒப்படைக்கப்பட்டால் வடக்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்று கருதியது,
எனினும் வடக்கில் அபிவிருத்திப் பணிகளிலிருந்து சீனாவை முற்றுமுழுதாக அகற்றுவதில் இந்தியாவினால் வெற்றிபெற முடியவில்லை.
ரயில் பாதை அமைப்பை இந்தியா கவனித்துக் கொண்டாலும்வீதி அமைப்பு பணிகளை சீன நிறுவனங்களே மேற்கொள்கின்றன.
அதனை இந்தியா விரும்பாவிட்டாலும் அவற்றை சீனாவிட் இருந்து தட்டிப் பறிக்னக வேண்டுமானால் இன்னும்ஏராளமான நிதியை இலங்கைக்கு கொட்டிக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் அது இந்தியாவினால் முடியாத காரணத்தினால் தான் ஒதுங்கி நின்றது.
எனினும் வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை என்பது மிகவும் முக்கியத்துவமானது. இது சீனாவின் கையில் போயிருப்பதை இந்தியாவினால் அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது.
சீன அபிவிருத்தி வங்கியே அதில் முதலீடு செய்யவுள்ளது. அதுவும் சாதாரண தொகையல்ல.  1.5 பில்லியன் டொலர்.
இந்தத் தொகையைக் கடனாகக் கொடுத்து திட்டத்தை நிறைவேற்றுகின்ற நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் இல்லை. இது தான் இந்தியாவுக்கு உள்ள மிகப் பெரிய சிக்கல்.
இலங்கை மீதான சீன ஆதிக்கத்ததை மட்டுமன்றி இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளின் மீது சீனா செலுத்தும் செல்வாக்கை உடைப்பதற்கும் இந்தியாவுக்குள்ள மிகப் பெரிய சிக்கல் நிதி தான்.
சீனாவின் பொருளாதாரம் உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக மாறிவரும் நிலையில் அது தனது உலகளாவிய செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக வெளிநாடுகளில் அதிகம் முதலிடுகிறது.
இப்போது சீனா தனது ஆதிக்கத்தை விரிவாக்குவதற்கு கையாளும் ஒரே உத்தி படைபலமல்ல. பொருளாதார ஆதிக்கம் தான்.
தெற்காசியாவில் இலங்கை, மியன்மார், பாகிஸ்தான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான், பங்களாதே�், நேபாளம் என்று பல நாடுகளின் மீது சீனா இந்த மூலோபாயத்தைக் கையாள்கிறது. சீனாவின் இந்த மூலோபாயம் தனியே ஆசியாவுக்கானது என்று கருதக்கூடாது.
சீனாவின் வலையில் சில தென்அமெரிக்க நாடுகள் சிலவும், ஆபிரிக்க நாடுகள் சிலவும் வீழ்ந்து போயுள்ளன என்பது இரகசியமான விடயமல்ல.
இலங்கையும் இந்த மூலோபாயத்தின் முக்கியமான பகுதியாக மாறியுள்ளது என்று கூறுவதைவிட மாற்றப்பட்டுள்ளது என்பதே பொருத்தமானது.
இருந்தாலும் இவை அனைத்தும் வர்த்தகம் சார்ந்த முதலீடுகள் தான் என்று இலங்கை அரசாங்கம் அவ்வப்போது அடித்துக் கூறத் தவறுவதில்லை.
இவை இந்தியாவைச் சமாளிப்பதற்கான வார்த்தைகள்.
கடந்த வாரம் சீனத் தலைநகரில் இது குறித்து செய்தியாளர்கள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் வெளிப்படையாகவே கேட்டனர். அதற்கு அவர் வழக்கம் போலவே சீனாவுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவு யாருக்கும் எதிரானது அல்ல. இந்தியா அதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இந்த வார்த்தையை இந்தியாவினால் நம்பமுடியாது. ஏனென்றால் வடக்கு எல்லையில் இந்தியாவுக்குத் தொடர்ந்து தொல்லைகளைக் கொடுத்து வருகிறது சீனா.
மீண்டும் இந்திய எல்லைக்குள் ஊடுருவி 5 கி.மீ. நீளமான வீதியை அமைத்துள்ளது அந்த நாட்டுப்படை.
தெற்கில் இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிகள் இந்தியாவை வேவு பார்த்து வருகின்றன.
இப்படியான நிலையில் இலங்கையில் பெரிய, சிறிய, நடுத்தரத் திட்டங்களையெல்லாம் தனது கைக்குள் போட்டுக் கொள்வதை இந்தியாவினால் வேடிக்கை பார்க்க முடியாது.
ஆனாலும் இந்தியாவின் இயலாமை அதனை எதுவும் செய்ய முடியாமல் தடுக்கிறது.
அதுதான் இலங்கை அரசுக்குச் சாதகமாக உள்ளது.
இல்லையென்றால் சீனாவுடன் இந்தளவு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு இந்தியா ஒருபோதும் இலங்கையை அனுமதித்திருக்காது.
ஹரிகரன்

Geen opmerkingen:

Een reactie posten