தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 13 maart 2013

வன்னியில் அடுத்த தலைமுறை மீது கைவைக்கிறது இலங்கை அரசு


வன்னியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள 250 முன்பள்ளிகளையும் இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. 
இந்த முன்பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள், குடிமக்கள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, இதுவரை 3500 ரூபா ஊதியம் பெற்று வந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாதாந்தம் 19,500 ரூபா ஊதியம் வழங்குவதாக கவர்ச்சியான வாக்குறுதி அளித்து அவர்கள் குடிமக்கள் பாதுகாப்புப் படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு குடிமக்கள் பாதுகாப்புப் படையின் சீருடை அணிந்த ஒளிப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
குடிமக்கள் பாதுகாப்பு அதிகாரிகள் என்ற பதவித் தரம் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் முன்பள்ளி ஆசிரியர்கள் இவ்வாறு குடிமக்கள் பாதுகாப்புத் திணைக்களத்தில் இணைந்து கொள்ளுமாறு சிறிலங்கா படைத்தரப்பினால் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இதுதொடர்பான ஆவணங்களில் ஒப்பமிட மறுப்பவர்கள் முன்பள்ளி ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பளிக்கப்படமாட்டாது என்றும் மிரட்டப்பட்டனர்.
குடிமக்கள் பாதுகாப்புத் திணைக்களத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள், தினமும் நண்பகல் 12 மணி வரை முன்பள்ளிகளில் பணியாற்ற வேண்டும் என்றும், அதன் பின்னர், குடிமக்கள் பாதுகாப்பு படைப் பிரிவினால் வழங்கப்படும் பணியை ஆற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மாதத்தில் முதலாவது, மூன்றாவது திங்கட்கிழமைகளில் குடிமக்கள் பாதுகாப்புப் படைப்பிரிவின் பணியகங்களில் ஒப்பமிட வேண்டும் என்றும் ஒருமுறை கையெழுத்திடத் தவறினால் மாத ஊதியத்தில் 4500 ரூபாவை இழக்க நேரிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விசுவமடுவில் உள்ள குடிமக்கள் பாதுகாப்புப் படைப்பிரிவின் 430வது படையணியின் தலைமையகமே, வன்னியிலுள்ள முன்பள்ளிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
அதுமட்டுமன்றி, வன்னியில் இந்தப் படையணி 250 முன்பள்ளிகளை ஆரம்பித்துள்ளதாகவும் பரப்புரைகளை மேற்கொண்டுள்ளது.
இந்தப் படையணியின் கட்டளை அதிகாரி கேணல் டபிள்யூ. டபிள்யூ. ரத்னபிரிய மற்றும் துணை கட்டளை அதிகாரி மேஜர் ரஞ்சித் மல்லவராச்சி ஆகியோர் இந்த பணிகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழரின் அடுத்த தலைமுறையை சிங்கள, பௌத்த பேரினவாதத் தலைமைக்கு கீழ்ப்படியத் தக்கவாறு முன்பள்ளிச் சிறார்களை வழி நடத்துவதே, இலங்கை பாதுகாப்பு அமைச்சின் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten