‘மாணவருலகம் போராட்டங்களில் ஈடுபடுவதை நான் தடுக்க வேண்டும் என்று சிலர் வற்புறுத்துகின்றனர். அவர்களுக்கு ஏமாற்றத்தை வழங்குவதற்காக வருந்துகிறேன். உலகம் முழுவதும் மாணவர்கள் போராடுகின்றனர். சீனாவிலும், எகிப்திலும் உருவான தேசிய இயக்கங்களுக்கு மாணவர்கள் தங்கள் பங்களிப்பைத் தந்துள்ளனர்.
இந்திய மாணவர்களிடம் அந்த உணர்வையே நான் எதிர்பார்க்கிறேன். பள்ளிகளிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் வெளியேறி, அவர்கள் சிறை புகும் துணிவுடன் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்க முன்வர வேண்டும்’ என்றார் மகாத்மா காந்தி. அந்தக் குரலே இப்போதும் எதிரொலிக்கிறது.
தமிழக மாணவர்களின் போராட்ட வரலாற்றில் முக்கியமான மூன்று திருப்புமுனைகள் உண்டு. அவர்கள் முதலில், இந்தித் திணிப்புக்கு எதிராக 1965 ஜனவரியில் களமிறங்கினர். அவர்களது சாதனை மகத்தானது. தமிழக மாணவர்களின் போராட்டத்தால்தான் இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தித் திணிப்பு நிகழ்வது நிறுத்தப்பட்டது; இந்தியோடு ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடர்கிறது.
இந்தியை இந்தியாவின் ஒரே தேசிய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் அரசமைப்புச் சட்டத்தில் அரங்கேற்ற நடந்த முயற்சிகள் அளப்பரியவை. ‘சகிப்புத்தன்மையற்ற இந்தப் போக்கு வலிமைமிக்க மத்திய அரசின் கீழ் இந்தி பேசாத மக்களை அடிமைகளாக்கிவிடுமோ என்று அஞ்சுகிறேன். இந்தி மொழி பேசும் நண்பர்களே…
உங்களுக்கு முழு இந்தியா வேண்டுமா? அல்லது, இந்தி பேசும் இந்தியா போதுமா என்று முடிவெடுங்கள்’ என்றார் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. சமீபத்தில் மாநிலங்களவையில் அறிவார்ந்த திருச்சி சிவா, மன்மோகன் சிங் அரசைப் பார்த்து, ‘உங்களுக்கு இலங்கை வேண்டுமா? தமிழ்நாடு வேண்டுமா?’ என்று கேட்டதற்கு முன்மாதிரியாக அன்று அமைந்தது டி.டி.கே.வின் முழக்கம்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் மாணவர்கள் தீவிரமாகக் களமாடியபோது லால்பகதூர் சாஸ்திரியின் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சி.சுப்பிரமணியமும், ஓ.வி.அளகேசனும் ராஜினாமா செய்தனர்.
அவர்களுடைய ராஜினாமாவை ஏற்கும்படி அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர். இராதாகிருஷ்ணனிடம் சாஸ்திரி பரிந்துரைத்தபோது, ‘இந்தியாவின் ஓர் அங்கமாகத் தமிழ்நாடு இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?’ என்று நேர்படக் கேட்டார் அந்த மாபெரும் தத்துவ மேதை. அதற்குப் பின்புதான் சாஸ்திரி, ‘இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சிமொழியாக நீடிக்கும் என்ற நேருவின் உறுதிமொழி காலவரையறையின்றிக் காக்கப்படும்’ என்று அறிவித்தார்.
பெரியார், திரு.வி.க., மறைமலை அடிகள், அண்ணா, நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள் போராடியும், மூவாலூர் ராமாமிர்தம், டாக்டர் தர்மாம்பாள் உட்பட 73 பெண்கள் 32 கைக்குழந்தைகளுடன் சிறை சென்றும், நடராசன் – தாளமுத்து இருவரும் சிறையில் உயிர்நீத்தும், 1937 முதல் 1965 வரை திராவிட இயக்கங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் முற்றாக விலக்கப்படாத இந்தித் திணிப்பு, மதுரையில் கொழுந்துவிட்டு மாநிலம் முழுவதும் மாணவர்களால் பெருந்தீயாய் வளர்த்தெடுக்கப்பட்ட பிறகுதான் முடிவுக்கு வந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வெற்றி, மாணவர்களின் மகத்தான சரித்திரச் சாதனை.
மாணவர்கள் தங்கள் இனவுணர்வை 1983-ல் தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் வெளிப்படுத்திய விதம் இன்றளவும் மறக்க முடியாத ஒன்று. இலங்கையில் 13 சிங்கள ராணுவத்தினர் விடுதலைப்புலிகளால் வீழ்த்தப்பட்டதற்கு எதிர்வினையாற்றப் புறப்பட்ட சிங்களர்கள், அரசின் ஆதரவோடு நடத்திய ஊழிக் கூத்தில் 3,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 50 ஆயிரம் தமிழ்க் குடும்பங்கள் கொழும்புவில் அனைத்தும் இழந்து, அகதி முகாம்களில் அடைபட்டனர்.
இலங்கைத் தமிழர் வாழ்வில் என்றும் மறக்க முடியாத ‘கறுப்பு ஜூலை’ மாதத்தில் மாணவர்கள் தன்னெழுச்சியாய் தமிழகத்தில் அணி திரண்டனர்; மக்கள் அவர்களுடைய போராட்டத்தை ஆசீர்வதித்தனர். ‘பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு’ என்ற பாவேந்தரின் இலக்கிய வரிக்கு மாணவர்கள் அன்று இலக்கணமாயினர்.
இப்போது…..
வீரத்தின் விளைநிலம் பிரபாகரனின் 12 வயது பிள்ளை பாலச்சந்திரன் மரணத்தைத் தழுவும் நிலையில் எடுக்கப்பட்ட மூன்று படங்கள் ஒட்டுமொத்த மக்களின் ஆன்மாவையும் அதிரச்செய்தது. வியட்நாம் போரில் ஒரு சின்னஞ் சிறுமி ஆடையின்றி அழுத விழிகளுடன் ஓடும் கோலத்தை வெளிப்படுத்திய ஒரேயரு நிழற்படம் அமெரிக்காவுக்கு எதிராக உலக மக்களை அணிதிரளச் செய்தது போன்று, குழந்தைமை கலையாத பாலச்சந்திரனின் அழகு முகத்தில் கனத்துக்கிடந்த ஆதரவின்மையும், வேதனை விழுங்கிய வெறித்த பார்வையும், ஐந்து குண்டுகளை மார்பில் தாங்கி மண்ணில் சரிந்துகிடந்த கோலம் தீட்டிய சோகச் சித்திரமும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக்கிடந்த தமிழகத்தின் மனச்சான்றை உலுக்கிவிட்டது.
stu மாணவர்கள் மூன்றாவது முறை இனநலன் காக்க அணி திரளத் தொடங்கினர். லயோலா கல்லூரி மாணவர்கள் முன்வந்து ஏற்றிவைத்த இனவிளக்கு இன்று வரை அணையாமல் இருள் கிழித்து ஒளிச்சுடரைப் பரப்பி வருகிறது.
மாணவர்கள் இதுவரை நடத்திய போராட்டங்களின் பின்புலமாக அரசியல் கட்சிகள் இருந்துவந்தன. அரசியல் தலைவர்களின் பதவி ஆசைக்கும், பழிவாங்கும் போக்குக்கும் மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் பயன்பட்டன. ராஜாஜி 1937-ல் கொண்டுவந்த இந்தியை எதிர்த்துப் பல்வேறு வடிவங்களில் படை நடத்திய பெரியார், 1965-ல் மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போரை ஆதரிக்கவில்லை. பள்ளிகளில் இந்தியைப் புகுத்துவதில் தீவிரம் காட்டிய ராஜாஜி பின்னாளில், ‘இந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 17-வது பகுதியை அரபிக் கடலில் வீசியெறியுங்கள்’ என்று அறைகூவல் விடுத்தார்.
தி.மு.கழகத்தை 1967-க்கு முன்பு பெரியாருக்குப் பிடிக்கவில்லை. அதனால், தி.மு.க-வின் பின்புலத்தில் இயங்கிய மாணவர் போராட்டத்தைப் பெரியார் எதிர்த்தார். ராஜாஜிக்கு நேருவையும், காமராஜரையும், காங்கிரஸையும் பிடிக்கவில்லை. அதற்காக, இந்தியை எதிர்த்த மாணவர் போராட்டத்தை ராஜாஜி ஆதரித்தார். மாணவர் போராட்டத்தைப் பயன்படுத்தி அண்ணா ஆட்சியைக் கைப்பற்றினார்.
ராஜாஜி, காங்கிரஸ் மீது பழிதீர்த்துக்கொண்டார். இந்தச் சூழல் இப்போது இல்லை. இன்று, மாணவர்கள் எந்த அரசியல் கட்சியின் வலையிலும் விழவில்லை. இந்தி எதிர்ப்புப் போரில் பெரிதாக உருவெடுத்த வன்முறையின் நிழல் கூடத் தங்கள் மீது படிய அவர்கள் இப்போது அனுமதிக்கவில்லை. அவர்கள் முன்னெடுத்திருப்பது அப்பழுக்கற்ற காந்தியப் போராட்டம்.
மாணவர்களின் மூன்றாம் கட்ட இந்தப் போராட்டம் மத்திய, மாநில அளவில் மிகப் பெரிய மாற்றங்களைச் சாதித்திருக்கிறது.
1. அமெரிக்கத் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியது.
2. சுவரில் ஒட்டிய பல்லியைப் போல் கடந்த ஒன்பது ஆண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பசை போட்டு அமர்ந்திருந்த தி.மு.கழகம், இனி காங்கிரஸோடு கைகோத்து நின்றால் காலநடையில் காலாவதியாகி விடுவோம் என்ற கலக்கத்தில் பதவி மேனகையின் கவர்ச்சியிலிருந்து விடுபட மனமில்லாமல் விடுபட்டு, நவீன விசுவாமித்திரனாய் நடுத் தெருவில் நாடகம் போட வந்து நின்றது.
3. இனப்பற்றோ, மொழியுணர்வோ, சமூகப் பிரக்ஞையோ சிறிதுமின்றிப் பதவிப் பல்லக்கில் அமர்ந்து பவனி வருவதற்காகவே அரசியல் நடத்தும் காங்கிரஸ்காரர்கள் ஆதரிப்பாரின்றி அனாதைகளாக மாறிப்போயினர்.
4. ஈழத் தமிழர் நலனுக்காக அதிகமாகக் குரல் கொடுப்பது யார் என்ற போட்டியில் இரண்டு கழகங்களையும் இறங்கச் செய்தது.
5. ஐ.பி.எல் போட்டியில் இலங்கை வீரர்கள் சென்னையில் இடம்பெறாமல் செய்தது.
6. தமிழீழம் காண ஐ.நா.சபை மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தவும், இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்கவும், இலங்கையை நட்பு நாடென்று கூறாதிருக்கவும் இந்திய அரசை நிர்ப்பந்தித்து நம் சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றியது.
7.காமன் வெல்த் நாடுகளின் கூட்டம் இலங்கையில் நடக்கலாகாது என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதும் அளவுக்கு இலங்கை எதிர்ப்பலையை மாநிலம் முழுவதும் சூறாவளியாய் வீசச் செய்தது. இதுபோன்ற சரித்திரச் சாதனைகளை எந்த அரசியல் கட்சியும், எந்த இனவுணர்வாளரும் இன்று வரை சாதிக்கவில்லை.
எல்லாம் சரி. இனி மாணவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? நீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம் ஜெனிவாவில் அரங்கேறிவிட்டது. போர்க் குற்றங்கள், இனப்படுகொலை என்ற பதப் பிரயோகங்கள்கூட இடம்பெறாத அந்தத் தீர்மானத்தால், ஈழத் தமிழருக்கு எந்த நலனும் வாய்க்காது. மாணவர்கள் மிகுந்த புரிந்துணர்வுடன் அமெரிக்கத் தீர்மானத்தை ஆரம்பத்திலேயே புறக்கணித்துவிட்டனர்.
stu2 இலக்கு மிகச்சரியானது. ஆனால், அதை அடைவதற்கான பயணம் நீண்டது. ‘ரோம் ஒரு நாளில் கட்டப்பட்டது அல்ல’ என்பதுபோல், ஈழம் ஒரே நாளில் சாத்தியமாவது அல்ல. இன்று வளர்த்தெடுக்கப்பட்ட இனவுணர்வு நெருப்பு, சாம்பல் பூத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மனித உரிமைகள் அமைப்பின் கூட்டம் அடுத்த நான்கு மாதங்களுக்குப் பிறகே நடக்கும். காமன்வெல்த் கூட்டம் இலங்கையில் நடக்க இடையில் ஏழு மாதங்களுக்கு மேல் இருக்கின்றன. மாணவர்கள் இந்த இடைவெளியைத் தங்கள் நலனுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேர்வுகள் முடியட்டும்.
அதன் பிறகு, இந்திய அரசே ஈழத் தமிழர் உரிமை காக்க மனித உரிமை மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரவும், காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடக்காமல் தடுக்க இந்திய அரசு செயற்படவும் அறப் போராட்டம் மூலம் மாணவர்கள் மீண்டும் களமாடலாம். பாசறைக்குப் படை திரும்புவது, களைப்பு நீங்கி முன்னிலும் முனைப்பாகப் போராடுவதற்குத்தான். தொடர்ந்து போரில் ஈடுபட்ட அலெக்சாண்டரையும், நெப்போலியனையும் சோர்வு தழுவிக்கொண்டதை மாணவர்கள் சிந்திக்க வேண்டும். வெற்றி வேண்டுமெனில், வியூகங்கள் முக்கியம்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குப் பின், மாணவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து கை மீறியது. இன்றும் அந்த விபத்து நேர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. போராட்டத்தின் திசை மாறினால், வன்முறையாளர்களின் வலையில் விழ நேரிடும். தமிழீழம் கோரிக்கையோடு ‘தனித் தமிழ்நாடு’ என்ற கோஷம் கலந்துவிட மாணவர்கள் எந்த நிலையிலும் அனுமதிக்கக் கூடாது.
இந்தியத் தமிழராய் இருப்பதுதான் எல்லா வகையிலும் உயர்ந்தது. இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கூட்டணி, தமிழர் நலனுக்கு எதிராகச் செயற்படுவது மறுக்க முடியாத உண்மை. தேர்தல் களத்தில் அதற்குப் பாடம் புகட்ட நம்மிடம் ஜனநாயகம் தந்திருக்கும் ‘வாக்கு’ என்னும் வலிமையான ஆயுதம் இருக்கிறது. அதை 40 இடங்களிலும் நாம் பயன்படுத்துவோம். இனவுணர்வோடு செயலாற்ற உறுதி ஏற்போரை மட்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைப்போம்.
தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி மற்றும் சுயநிர்ணயம் ஆகியவற்றை அடைவதற்கும், அதற்கான போராட்டத்தைப் பாதுகாப்பதற்கும், முன்னகர்த்துவதற்கும் உரிய உயர்மட்ட ராஜதந்திரத்தைப் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் வகுத்தெடுப்பார்கள்.
ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசுத் துறையினர், கொள்கை நெறியாளர்கள், சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து ஈழம் நோக்கி அறவழியில் பயணிப்பதற்கான பணிகளில் அவர்கள் தொடர்ந்து ஈடுபடுவார்கள். அவர்களுக்கான ஆதரவை இந்திய அரசு வழங்குவதற்கான வழிமுறைகளைக் கண்டெடுத்துப் போராடுவதோடு மாணவர்கள் இப்போது நிறைவடைய வேண்டும்.
இப்போது மாணவர்கள் தன்னெழுச்சியாகத் தெருக்களில் கூடிக் குரல் கொடுப்பது, அவர்களுடைய அரசியல் விழிப்பு உணர்வை அடையாளப்படுத்துகிறது. சமூகத்தின் சகல தளங்களிலும் ஊடுருவி நிற்கும் ஊழல் பேர்வழிகளுக்கும், மதுக் கடைகளுக்கும் எதிராக இவர்கள் கிளர்ந்தெழ இன்னொரு போர்க்களம் காத்திருக்கிறது.
ஈழத்துக்குப் பிறகு, மாணவர்கள் பார்வை இந்தப் பக்கம் திரும்பும்போது பொன்விடியலைத் தமிழகம் சந்திக்கும். இனி மக்களின் மரியாதைக்குரியவர்கள், அரசியல் தலைவர்கள் இல்லை; மாணவர்களே!
-தமிழருவி மணியன்-
-ஜூனியர் விகடன்-
Geen opmerkingen:
Een reactie posten