தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 maart 2013

கண்டனத் தீர்மானமா? கண்துடைப்புத் தீர்மானமா? - பழ. நெடுமாறன்


அடங்காத மாணவர் போராட்டங்கள்! அமைதியானது ஜெனிவா!
[ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 02:48.11 AM GMT ] [ விகடன் ]
ஈழத் தமிழ் மக்களுக்காக​தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தீவிரமாக இருந்தாலும்... திருச்சி சட்டக் கல்லூரி மற்றும் பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி மாணவர்கள் 10 நாட்களைக் கடந்தும் போராட்டத்தை விடாப்பிடியாகத் தொடர்ந்தனர்.
சுட்டெரிக்கும் வெயில், தணலாய் கொதிக்கும் தரை, இவற்றைப் பொருட்படுத்தாமல் மார்ச் 12 அன்று தரையில் ஒரு துணி விரிப்பைப் போட்டு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர் திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள்.
அவர்கள் போராட்டத்தைத் தொடங்கியபோது, 'ஓரிரு நாளில் முடித்துவிடுவார்கள்’ என அனைவரும் எதிர்பார்த்தனர். 13 தினங்கள் தொடர்ந்த உண்ணாவிரதப் போராட்டத்தைப் பார்த்து அரசியல் இயக்கத் தலைவர்கள் அசந்தேபோனார்கள்.
வைகோ, நெடுமாறன், திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை போனில் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவித்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தை மார்ச் 24 அன்று மாலை முடித்துக்கொண்டு, போராட்டத்தை வேறு வடிவில் எடுத்துச் செல்லப்போவதாக அறிவித்துள்ளனர்.
அன்று திருச்சியில் கூடிய தமிழக அளவிலான தமிழீழத்துக்கான மாணவர் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் இந்த மாணவர்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதால், உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ள முன்வந்தனர்.
ஆர்.டி.ஓ., போலீஸ் துணை கமிஷனர், கல்லூரி முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் கேட்டுக்கொண்டபோதெல்லாம் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்த மாணவர்கள், சக மாணவர்களின் வேண்டுகோளுக்கு மட்டும் மனம் இறங்கினர்.
உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் வெயிலில் வாடுகிறார்களே என்பதற்காக, ஷாமியானா பந்தலுக்கு ஏற்பாடு செய்தோம். ஆனால், அதற்கு வாடகை கொடுக்க காசு இல்லாததால், ஏழாம் நாளே பந்தலைப் பிரித்துச் சென்றுவிட்டார்கள்.
எந்தக் கட்சியினரிடமும் காசு வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததால், கடும் வெயிலைப் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தோம்'' என்றார் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பாரதி லிங்கம்.
அவரே தொடர்ந்து, ''மே 1-ம் தேதிக்குள் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை இந்திய அரசு அகற்ற வேண்டும் அப்படி செய்யத் தவறினால், மாணவர் சக்தி அந்த அலுவலகத்தை அகற்றும்'' என்று எச்சரித்தார்.
பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி மாணவர்கள் 25 பேர், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள திலீபன் அரங்கில் கடந்த 11-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். 5-வது நாள் அதனை தொடர் உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றி, தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உண்ணாவிரதத்தில் அமர்ந்தனர்.
தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு என்கிற பெயரில் போராடிய இவர்களுக்கு ஆதரவாக நகரில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் போராட்டம் நடத்தினர். 10 நாட்களாகத் தொடர்ந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க 20-ம் தேதி முடிவுக்கு கொண்டு வந்தனர்.
பல்கலைக்கழகத் தேர்வுகள் தொடங்கிவிட்ட நிலையில், 'கல்வி பாதிக்காத வகையில் அடுத்தக் கட்டப் போராட்டம் தொடரும்’ என்று அறிவித்துள்ளனர். அந்தப் போராட்டங்களாவது இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதோர் விடிவை ஏற்படுத்தித் தரட்டும்!

http://www.tamilwin.net/show-RUmryDRbNZkx0.html

கண்டனத் தீர்மானமா? கண்துடைப்புத் தீர்மானமா? - பழ. நெடுமாறன்
[ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 03:08.28 AM GMT ] [ விகடன் ]
தமிழர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்​தினரைத் திரும்பப் பெற வேண்டும், இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் குறித்து நம்பகமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், இப்படி முக்கியமான கோரிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜெனிவாவில் கூடிய கூட்டத்தில் 38 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக முன்​வைத்தார்.
இந்தச் செய்தி வெளியானபோது உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்களில் நம்பிக்கை ஒளி படர்ந்தது.
அந்த அறிக்கையில் வேறு முக்கியமான அம்சங்கள் என்ன இருந்தது தெரியுமா?
இலங்கையில் போர் நடைபெற்ற வேளையில் வயதானவர்களும் சிறுமிகளுமாக ஆயிரக்கணக்கான​வர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையையும் இலங்கை அரசு  மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் போருக்குப் பிறகும் ஆள் கடத்தல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.
தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சிங்கள இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிவில் நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகி​றார்கள். இதன் விளைவாக அங்கு வாழும் தமிழ்ப் பெண்களுக்கு பாலியல் வன்முறை அச்சம் நிலவுகிறது.
போருக்குப் பின் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகள், மீள் குடியமர்த்தல் போன்​றவை நிறைவேற்றப்படவில்லை. இலங்கை அரசின் தேசிய செயல்திட்டத்திலும் அவை புறக்​கணிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் போர் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
மனித உரிமை மீறல்கள் குறித்து விசா​ரணை நடத்துவதாகக் கூறிய இலங்கை அரசு முழுமையான விசாரணை எதுவும் நடத்தவில்லை. இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்தும் பணியையும் செவ்வனே செய்ய​வில்லை. 2006-ம் ஆண்டு அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை.
சிறுபான்மையினரான தமிழர்​களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும். தமிழர்களின் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இராணு​வத்தினரைத் திரும்பப் பெறவேண்டும். இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்​கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிறது அந்த அறிக்கை.
ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளை உள்ளடக்கிய தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு அமெரிக்கா தவறிவிட்டது.
அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தில் ஆணையரால் குறிப்பிடப்பட்ட முக்கியமான ஆலோசனைகள் இடம்பெறவில்லை. நீர்த்துப்போன தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இதற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு இருந்தது.
அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் இதுதான். 'இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள இராணுவத்தினரை உடனே அகற்ற வேண்டும். போரின்போது தமிழர்கள் பலர் காணாமல்போனது கவலை அளிக்கிறது.
இலங்கை அரசு நியமித்த நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை முழுமை​யாக நிறைவேற்றும் திட்டம் இலங்​கை அரசுக்கு இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வாதாரம், நீதி, நல்லிணக்கம் முழுமையாகச் செய்யப்படவில்லை. போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும்.’ - இவைதான் அமெரிக்கத் தீர்மானத்தின் சாராம்சம்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சார்பில் இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகி வருவது குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கியமாக வலியுறுத்தப்பட்டன.
ஆனால் இந்த இரண்டு கோரிக்கைகளையும் அமெரிக்கத் தீர்மானம் புறந்தள்ளி விட்டதுடன், அதற்கு எதிராகவும் அமைந்து விட்டது. அமெரிக்கத் தீர்மானம் போர்க் குற்றங்கள் குறித்த சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை என்பதை ஏற்கவில்லை. மாறாக இலங்கையே அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்கிறது.
இலங்கையின் வடக்கு மாநிலத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளும் மனித உரிமைகளும் நிலை​நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்துகிறதே தவிர, கிழக்கு மாநிலத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. இதன் மூலம் கிழக்கு மாநிலம் சிங்களவர்களுக்குச் சொந்தமானது என மறைமுகமாக அமெரிக்கத் தீர்மானம் கூறுகிறது.
வடக்கு மாநிலத்தில் மாகாண சபைக்கான தேர்தல் சுயாதீனமாக நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் கூறுவது கொடுமையான வேடிக்கை. ஏனெனில் வடக்கு மாநிலத்தில் வாழ்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு இன்னமும் அகதிகளாக அலைந்து திரிகிறார்கள்.
தமிழர் பகுதிகளில் வேகமாகவும் தங்குதடையில்லாமலும் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. வடக்குப் பகுதி இராணுவமயமாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் சுதந்திரமான தேர்தல் எப்படிச் சாத்தியமாகும்? ஒரு போலியான தேர்தலை நடத்துவதற்கு சிங்கள அரசுக்கு அமெரிக்கத் தீர்மானம் உதவுகிறது.
வெற்று வாக்குறுதிகள் நிறைந்த இந்தத் தீர்மானத்​தில் கூறப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கு சிங்கள அரசுக்கு ஓர் ஆண்டு கால அவகாசத்தை அமெரிக்கத் தீர்மானம் அளித்திருப்பது அவல நகைச்சுவையின் உச்சக்கட்டம்.
கடந்த ஆண்டு நடந்த மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இதைப் போல ஓர் ஆண்டு கால அவகாசம் சிங்கள அரசுக்கு அளிக்கப்பட்டபோது எத்தகைய நிவாரண நடவடிக்கைகளும் அங்கு நடைபெற​வில்லை.
கடந்த ஆண்டு இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்ட அவகாசத்தில் மேலும் மேலும் தமிழர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்​பட்டனவே தவிர, நிலைமை சிறிதளவுகூட மாறவில்லை. இப்போது இன்னும் ஓர் ஆண்டு கால அவகாசம் அளிப்பது எஞ்சியுள்ள தமிழர்களை முற்றிலுமாக அழிப்பதற்கே உதவும்.
அமெரிக்கத் தீர்மானத்தை இலங்கை எதிர்ப்புத் தீர்மானம் என அழைப்பது மிகத் தவறானதாகும். உலகக் கண்டனத்தில் இருந்து இலங்கையைக் காப்பாற்றும் தீர்மானமே அது.
அமெரிக்கத் தீர்மானம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் இந்தியாவின் பங்கு என்பது சூழ்ச்சிகர​மானது. தான் நேரடியாக சம்பந்தப்படாமல் பின்னணியில் இருந்து இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவின் தீர்மானத்தை வடிவமைத்தது இந்தியாதான்.
இலங்கைப் பிரச்னை சம்பந்தமாக இலங்கை அரசுடன் பேசுவதற்கு வழக்கமாக அனுப்பப்படும் பிரதமரின் ஆலோசகர் சிவசங்கர் மேனன் இம்முறை அனுப்பப்படவில்லை. மாறாக அரசாங்கத்துடனோ காங்கிரஸ் கட்சியுடனோ எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத சுப்பிரமணியன் சுவாமியை, இந்திய அரசு தனது தூதுவராக இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பியது.
அவர் சென்று இந்தியாவின் கருத்தோட்டத்துக்கு ஏற்ப அமெரிக்கா தனது தீர்மானத்தை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தார். சுப்பிரமணியன் சுவாமி ஒரு தனி நபர். ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்ச, அமெரிக்காவின் வெளியுறவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசிய விவரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
ஒரு தனி நபருக்கு இவ்வளவு செல்வாக்கு அரசு வட்டாரங்களில் இருக்க முடியாது. இந்தியாவின் சார்பில் அவர் சென்றார் என்பதினால்தான் அவரைச் சந்தித்துப் பேச, இலங்கை, அமெரிக்க அரசு உயர் மட்டத்தினர் முன்வந்தனர்.
அது மட்டுமா? நாடாளுமன்றத்தில் முலாயம்சிங் யாதவ் போன்றவர்கள் இந்திய அரசின் இலங்கைக் கொள்கையைக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் மாறிவிட்டனர். இதற்குப் பின்னணி என்ன?
இந்தியாவில் இலங்கைத் தூதுவராக இருக்கும் பிரசாத் கரியவாசம், முலாயம் சிங் மற்றும் பல்வேறு வட மாநில முதல்வர்களை எல்லாம் சந்தித்துப் பேசி சிங்கள அரசின் நிலைக்கு ஆதரவாக அவர்களை மாற்றியிருக்கிறார்.
வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் டெல்லியை விட்டு வெளியேச் செல்ல வேண்டுமானால்கூட இந்திய அரசின் அனுமதி தேவை. மாநில முதலமைச்சர்களைச் சந்திப்பதற்கும் இந்திய அரசு அனுமதிக்க வேண்டும். ஆக, இந்திய அரசுதான் அவருக்கு இத்தகைய ஆலோசனைகளை வழங்கி, எதிர்க்கட்சித் தலைவர்களையும் முதல்வர்களையும் சந்தித்துப் பேசச் செய்திருக்கிறது.
ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கடும் எதிர்ப்பும், இதுவரை கூட்டணிக் கட்சியாக இருந்த தி.மு.க. வெளியேறியதும் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தவில்லை. அதைப்போல, உதட்டளவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசும் அமெரிக்காவும் இந்தப் பிரச்சினையில் இரட்டை வேடம் போடுகிறது.
அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் நிலைப்பாடு என்பது ஈழத் தமிழர் பிரச்னையைப் பயன்படுத்தி இலங்கை அரசை மிரட்டி சீனாவிடமிருந்து பிரிக்க நினைக்கிறது. இலங்கையிலும், குறிப்பாக இந்துமாக்​கடலிலும் சீனாவின் ஆதிக்கம் ஏற்படுவது தன்னுடைய உலகளாவிய நலன்களுக்கு எதிரானது என அமெரிக்கா கருதுகிறது.
இந்தியாவும் தனது தென்னாசிய நலன்​களைப் பொறுத்தவரையில் சீனாவின் தலையீட்டை விரும்பவில்லை. எனவே, அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தி ராஜபக்ச அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, சீனாவின் பிடியிலிருந்து அவரை மீட்பது ஒன்றே அவர்களது நோக்கம்.
ஏனெனில், அமெரிக்காவின் இந்துமாக் கடலின் நலன்களும் இந்தியாவின் பிராந்திய அரசியல் பொருளாதார நலன்களும் முக்கி​யமே தவிர, ஈழத் தமிழர்களின் வாழ்வு அவர்களுக்கு முக்கியமல்ல.
ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலை, போர்க் குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவை குறித்து எவ்வளவோ உண்மைகளை வெளிப்படுத்தியும்கூட, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களின் அரசியல், பொரு​ளாதார நலன்களை மட்டுமே மனதில்கொண்டு ராஜபக்சவின் இரத்த வெறிக்கு ஈழத் தமிழர்களைக் காவு கொடுக்கத் துணிந்து விட்டன என்பதைத்தான் அமெரிக்கத் தீர்மானம் எடுத்துக்காட்டுகிறது.
எனவே, இது கண்டனத் தீர்மானம் அல்ல... கண்துடைப்புத் தீர்மானம்!

Geen opmerkingen:

Een reactie posten