யாழ். ஊடக அமையத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
குறித்த சந்திப்பில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
வடக்கு மாகாண ஆளுநரும், சில அமைச்சர்களும் 30 வருடங்கள் தமிழர்கள் எதுவுமில்லாமல் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு உட்கட்டமைப்புக்கள் குறித்தும், பொதுவிடயங்கள் குறித்தும் எதுவும் தெரியாது என்ற தோரணையில் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் விடுதலைப் புலிகள் மக்களுடைய நலன்களை முதன்மைப்படுத்திய, மக்களை மதிக்கின்ற பல கட்டமைப்புக்களை உருவாக்கியிருந்தார்கள்.
உப்பு தொழிற்சாலை, பண்ணைகள், என படித்தவனும், படிக்காதவனும் வேலை பெற்றிருந்தான். யாரும் பட்டினியில் இருக்கவில்லை. ஆனால் இன்று க.பொ.த சாதாரணதரம் படித்தவனும், பட்டப்படிப்பு முடித்தவனும் வீதியில் நிற்கிறான்.
கிளிநொச்சி கனிஷ்ட பாடசாலைக்கு விடுதலைப் புலிகளின் நிதிப் பிரிவு இரண்டு மாடிக்கட்டிடங்களை அமைத்துக் கொடுத்தது. கரைச்சிப் பிரதேச சபைக் கட்டிடத்தை புலிகள் அமைத்தக் கொடுத்தார்கள்.
இப்படி ஏ-9 வீதியிலுள்ள பல கட்டிடங்களை புலிகள் அமைத்தார்கள். அதற்கு பின்னர் வெள்ளையடித்துவிட்டு இவர்கள் திறந்தார்களே தவிர, இவர்கள் அவற்றை கட்டிடங்களைக் கட்டவில்லை.
அதேபோல் உள்ளக வீதியில் எதுவும் இப்போதிருப்பதைப்போன்று படுமோசமாக இருக்க வில்லை. கிறவல் மண்ணைக் கொண்டு சிறப்பான வீதிகளை புலிகளின் கட்டமைப்பு அமைத்தது.
எனவே 30வருடங்கள் தமிழர்கள் எதையும் காணவில்லை, அவர்களுக்கு எதுவும் தெரியாது என்ற பேச்சை இந்த அதிமேதாவிகள் இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.
காணாமல்போனோர் தொடர்பாக….
காணாமல்போனோர் தொடர்பாக கடந்த வாரம் 36 தமிழர்களுடைய பெயர் விபரங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அதனையடுத்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் பலர் எங்களிடம் வந்து தங்கள் உறவுகள் எங்கிருக்கின்றார்கள், அவர்களுடைய விசாரணைகள் என்ன கட்டத்தில் இருக்கின்றன?என கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் அந்த பெயர் விபரங்களை வெளியிட்டவர்கள் மக்களுக்கு முழு விபரத்தையும் இதுவரை வழங்கவில்லை. எனவே தென்னிலங்கை முற்போக்கு சக்திகள் என தம்மை கூறிக்கொண்டு இந்த மக்களுடைய கண்ணீரிலும், அவலத்திலும் அவர்கள் அரசியல் நடத்த நினைக்கின்றார்கள்.
ஆனால் அத்தகையதொரு நிலையினை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். குறித்த பெயர் விபரங்களுடன் தொடர்புடையவர்கள் பற்றிய விபரங்களை உடனடியாக வெளியிடவேண்டும். என நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
தமிழீழம் குறித்து…..
தமிழீழ கோட்பாட்டை புலிகளோ, தலைவர் பிரபாகரனோ உருவாக்கவில்லை. அது விடுதலைப் புலிகளுக்கு முன்னர் ஜனநாயக வழியில் தமிழ் மக்களுடைய விடுதலைக்காக போராடி சிங்கள இனவாதிகளிடம் ஏமாற்றம் கண்ட மிதவாதிகள் இறுதியில் வேறு வழியில்லாமல் உருவாக்கியது.
எனவே தமிழீழம் புலிகளுடையதல்ல, ஆனால் கடந்த 30வருடம் உணர்ச்சிப் பெருக்குடன் விடுதலைப் புலிகள் அதனை சுமந்து சென்றார்கள் அவ்வளவுதான்.
ஜெனீவா தீர்மானம் குறித்து…..
ஜெனீவா தீர்மானம் ஏமாற்றமளிக்கின்றது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வெளிப்படையாகவும் தெளிவாகவும் கூறியிருக்கின்றார். இனிமேல் பேச்சுவார்த்தை ஒரு சர்வதேச மத்தியஸ்த்தத்துடனேயே இடம்பெறும் என்று. ஆனால் எனவே நாம் ஜெனீவா தீர்மானத்தை ஏற்றுக் கொள்வில்லை இலங்கை அரசின் மீது ஒரு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை தேவை.
வடமாகாணசபை தேர்தல் தொடர்பாக…
வடமாகாணசபை தேர்தலை இலங்கை அரசாங்கம் இப்போதைக்கு நடத்தப் போவதில்லை, முல்லைத்தீவில், வவுனியாவில், மன்னாரில் திட்டமிட்ட வகையில் சிங்கள மற்றும் முஸ்லிம் குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
இதற்கு தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் வழிகாட்டிகளாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த குடியேற்றங்கள் முழுமைப்படுத்தப்பட்டதன் பின்னர் தமிழர்களை சிறுபான்மையாக்கிவிட்டு வடக்கில் தேர்தலை நடத்தி தமிழர்களின் இருப்பை சீர்குலைப்பதற்கான முனைப்புக்களையே இன்றளவும் இலங்கை அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்.
ஏற்கனவே வடமாகாண சபைத்தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி தமக்கு எதனையும் தெரிவிக்கவில்லை என தேர்தல் ஆணையாளர் கூறியிருக்கின்றார்.
எனவே தேர்தல் இப்போதைக்குச் சாத்தியமில்லை. மற்றபடி ஜெனீவா மனிதவுரிமைகள் பேரவைக்கு தேர்தலை நடத்தப் போவதாக கூறியதெல்லாம் பொய்கள் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten