உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக் கொள்ளும் இந்தியா, காஷ்மீரில் அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள விவகாரம் விக்கிலீக்ஸ் மூலம் கசியத் தொடங்கியுள்ளது.
செஞ்சிலுவைச் சங்கத்தினர் 2002-ஆம் ஆண்டிலிருந்து 2004 வரையிலான காலத்தில் காஷ்மீரில் 177 முறை கைதிகள் முகாமுக்குச் சென்று 1491 கைதிகளைச் சந்தித்து, தனிப்பட்ட முறையில் 1296 பேரிடம் பேட்டியெடுத்துள்ளனர்.
இவற்றில் 852 பேர் தாங்கள் கடுமையாக வதைக்கப்படுவதாகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுவதாகவும், மொத்தத்தில் 171 பேர் தங்கள் மீது ஒன்று முதல் ஆறு வடிவங்களிலான சித்திரவதைகள் ஏவப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மின் அதிர்ச்சி கொடுப்பது, உத்தரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு வதைப்பது, கைதிகளின் கால்களின் மீது பலகையை வைத்து அதன் மீது நாற்காலியைப் போட்டு, அதில் சிறை அதிகாரிகள் அமர்ந்துகொண்டு கால்களை நசுக்குவது, கால்களை 180 டிகிரிக்குத் திருப்பி ஒடிப்பது, தண்ணீர் சித்திரவதை, பாலியல் வன்முறை – எனப் பல்வேறு கொடிய சித்திரவதைகளை ஏவியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2005-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிகாரிகளிடம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் இக்கொடுமைகள் பற்றி ஆதாரங்களுடன் ஆவணமாகச் சமர்ப்பித்துள்ளனர். இது, அமெரிக்க அரசுக்கு கேபிள் செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. இது தவிர, 2007-ஆம் ஆண்டில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்குமாறு கைதிகளை வதைத்து இந்திய இராணுவம் மனித உரிமை மீறல் குற்றங்களை இழைத்துள்ளதாகவும், இந்திய இராணுவம் போஸ்னியாவில் நடந்ததைப் போல இனப்படுகொலையில் ஈடுபடுகிறது என்றும் மற்றொரு கேபிள் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளோ, பாகிஸ்தானால் ஏவிவிடப்பட்டவர்களோ அல்ல என்றும், அவர்கள் காஷ்மீரின் சாமானிய குடிமக்கள்தான் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மைகள் அம்பலமானதும், தனது அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நடந்தவை என்று இவற்றைத் தட்டிக் கழிக்கிறார், முதல்வர் ஓமர் அப்துல்லா. காஷ்மீரின் போலீசு தலைமை இயக்குனரான எஸ்.எம்.சோஹய், இவை ஆதாரமற்ற அவதூறுகள் என்கிறார்.
அருந்ததி ராய், சையத் அலி ஷா ஆகியோர் மீது தேசத்துரோக வழக்கு போட்டு எச்சரிக்கும் இந்திய ஆட்சியாளர்களோ, விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தும் ஆவணங்களைப் பொய் என்று இட்லரின் கோயபல்ஸ் பாணியில் குற்றம் சாட்டி, தேசியவெறியைக் கிளறிவிட்டுத் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten