இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர்கள், இந்தியாவுக்கு திரும்பி செல்லும் பேச்சுக்கே இனி ஒருபோதும் இடமில்லை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சட்டசபை தீர்மானங்கள் பற்றி இந்நாட்டில் சிங்கள தீவிர அமைப்புகள் தெரிவித்து வரும் கருத்துகள் தொடர்பில் மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழக முதல்வர் கச்சதீவை மீளக்கோரினால் இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களை நாடு கடத்த வேண்டும் என்று இனவாதிகள் கூறுவதை நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது. இது முழங்காலுக்கும், மொட்டந்தலைக்கும் முடிச்சு போடுவதாகும்.
இந்தியாவுடன் கட்டிபிடித்து உறவு கொள்ளும் போது இந்நாட்டு சிங்கள மக்களும் வங்காளத்தில் இருந்து வந்த வட இந்தியர்கள் என சொல்லுவதும், பிறகு இந்தியாவுடன் சச்சரவு வந்தால் இந்தியா மீதுள்ள கோபத்தை இந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களிடம் காட்டி அதற்கு அவர்களை பலிக்கடா ஆக்குவதும், தொடர்ந்து நடந்து வரும் ஒரு இனவாத நாடகம்.
இதற்கு இனிமேல் இடம் கொடுக்க முடியாது. இந்த இனவாத நடிகர்களுக்கு பின்னால் இருக்கும் அரசாங்கம் இவர்களை கட்டுப்படுத்த வேண்டும். இந்த இனவாத கூச்சல்கள் தொடருமானால், இந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் பிரச்சினையையும், ஐநா சபையின் கவனத்துக்கு நாம் கொண்டு செல்ல வேண்டி வரும்.
இலங்கையில் வாழும் தமிழர்களிடம் கேட்டுக்கொண்டு கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி கொடுக்கவில்லை. அதேபோல் இன்று மீண்டும் கச்சதீவை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜெயலலிதா ஜெயராம் இங்கு வாழும் தமிழர்களை, குறிப்பாக இந்தியவம்சாவளி தமிழர்களை கேட்டுக்கொண்டு முன்வைக்கவில்லை.
இந்நாட்டில் வாழும் தமிழ் தலைவர்களையும், தமிழக தலைவர்களையும் கேட்டுக்கொண்டு இலங்கை, இந்திய அரசாங்கங்கள் ஒப்பந்தங்கள் செய்வது இல்லை.
எனவே இந்திய தமிழர்கள் என்ற பெயரில் இலங்கையில் வாழும் இலங்கை பிரஜைகளை இந்த கச்சதீவு விவகாரத்தில் தேவையில்லாமல் சம்பந்தப்படுத்த வேண்டாம் என கூறிவைக்க விரும்புகிறேன்.
இந்தியாவின் ஒரிசா, வங்காளம் ஆகிய பிராந்தியங்களில் இருந்தே சிங்கள இனத்தவர்கள் இலங்கைக்கு வந்து குடியேறினார்கள் என டெல்லியில் உள்ள இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் கூறியுள்ளார்.
இது இன்று இந்தியாவில் சர்ச்சைக்கு உரிய கருத்தாக மாறியுள்ளது. இந்த கருத்தின் மூலம் இலங்கையில் இன்று வாழும் அனைத்து மக்களும் ஏதோ ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்து இலங்கை வந்தவர்கள் என்று உண்மை உறுதியாகியுள்ளது.
எனவே இனியொருமுறை இலங்கை வாழ் இந்திய தமிழர்கள் என்ற இலங்கை பிரஜைகளை நாடு கடத்த வேண்டும் என்றால், இங்கு வாழும் சிங்கள மக்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டுதான் நாம் இந்தியா செல்ல வேண்டும்.
இந்நாட்டின் பூர்வீக குடிகளான வேடுவர்களுக்கு நாட்டை ஒப்படைத்துவிட்டு எல்லோரும் இந்தியா நோக்கி பயணமாக வேண்டும். இந்த நடைமுறை நியாயமானது அல்ல. அதுபோல் கச்சதீவு என்ற விடயத்துடன் முடிச்சுபோட்டு இந்திய தமிழர்களை நாடு கடத்த வேண்டும் என சொல்வதும் நியாயமானது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten