தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 maart 2013

ராஜபக்சக்களுடன் 14 படை அதிகாரிகளும் போர்க்குற்ற விசாரணைக்கு முகங்கொடுக்க நேரிடும்!


போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவொரு நம்பகமான உள்ளக விசாரணைகள் நடத்தப்பட்டாலும், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ச, மற்றும் 14 இராணுவ அதிகாரிகள் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என்று இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றின் புதுடெல்லி சிறப்புச் செய்தியாளரான, வெங்கட் நாராயண் இதுகுறித்து எழுதியுள்ளதாவது-
2009ல் நான்காவது கட்ட ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் தனது பாதுகாப்புப் படைகளால் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் குறித்த நம்பகமான சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற அனைத்துலக சமூகத்தின் கோரிக்கையை இலங்கை தொடர்ந்தும் புறக்கணிக்கும் என்று புதுடெல்லியில் உள்ள இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனென்றால், இந்த விசாரணைகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரரும், பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்ச, மற்றும் குறைந்தது 14 உயர் இராணுவ அதிகாரிகள் வகித்த முக்கியமான பங்கை வெளிப்படுத்தி விடும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது நெருங்கிய சகாக்களும் கொல்லப்பட்டதுடன் முடிவுக்கு வந்த, மூன்று பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரின் இறுதிக்கட்டத்தில், குறைந்தது 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நாவும் சுதந்திர வட்டாரங்களும் மதிப்பிட்டுள்ளன.
இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த வியாழக்கிழமை இரண்டாவது ஆண்டாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அனைத்துலக சமூகம் கோரியுள்ளது.

இலங்கையில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால், பாதுகாப்புப் படைகளின் பிரதம தளபதி என்ற வகையில், விசாரணை செய்யப்படுவோரின் பட்டியலில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முதலிடத்தில் இருப்பார்.
அடுத்ததாக, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச இருக்கக் கூடும்.
அவர், ஜனாதிபதியின் சகோதரர் என்ற நெருக்கத்தைப் பயன்படுத்தி, விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு என்னென்ன ஆயுதங்கள், கருவிகள் தேவையோ அவற்றையெல்லாம் வாங்கிக் கொடுத்தார்.
போரில் விடுதலைப் புலிகளை முற்றாக அழித்த திறமையான மூலோபாயத்தை திட்டமிட்டு செயற்படுத்தியவர் என்ற மதிப்பை கோத்தபாய ராஜபக்ச பெறவேண்டும் என்றால், போரின் முடிவில் தனது படைகளால் நிகழ்த்தப்பட்ட மீறல்களுக்காக வெட்கப்படாமல் இருப்பது சாத்தியமில்லை என்று புதுடெல்லி நிபுணர்கள் வாதிட்டுள்ளனர்.
அதன்பின்னர், கூட்டுப்படைகளின் தலைவர் எயர் மார்சல் டொனால்ட் பெரேரா, இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, விமானப்படைத் தளபதி றொசான் குணதிலக ஆகியோரும் விசாரிக்கப்படக் கூடும்.
மேலதிகமாக, அப்போது 53வது டிவிசன் தளபதியாக இருந்த பிரிகேடியர் கமால் குணரத்ன,
55வது டிவிசன் தளபதியாக இருந்த பிரிகேடியர் பிரசன்ன சில்வா,
57வது டிவிசன் தளபதியாக இருந்த பிரகேடியர் ஜெகத் டயஸ்,
58வது டிவிசன் தளபதியாக இருந்த பிரிகேடியர் சவீந்திர சில்வா,
59வது டிவிசன் தளபதியாக இருந்த பிரகேடியர் நந்தன உடவத்த,
அதிரடிப்படை - 1 ன் தளபதியாக இருந்த பிரிகேடியர் றோகண பண்டார,
அதிரடிப்படை - 2 ன் தளபதியாக இருந்த பிரிகேடியர் சத்யப்பிரிய லியனகே,
அதிரடிப்படை-8ன் தளபதியாக இருந்தவரும், உண்மையில் பிரபாகரனைக் கொன்றவருமான கேணல் ஜிவி ரவிப்பிரிய ஆகியோரும் இந்த விசாரணையை எதிர்கொள்வர்.
படைப்பிரிவுகளின் தளபதிகளான இவர்கள், தப்பிப்பதற்கான எல்லா வழிகளையும் மூடி, வன்னியில் ஓரிடத்தில் சிக்க வைத்து விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு காரணமாக இருந்தவர்கள்.
ஈழப்போரின் மீறல்கள் குறித்த விசாரணைகளில் திருப்தி கொள்ளும் வரை அனைத்துலக சமூகம், நீதி, நியாயமான நம்பகமான விசாரணைகளைக் கோரும் என்றும் புதுடெல்லி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

http://news.lankasri.com/show-RUmryDRYNZlv0.html

Geen opmerkingen:

Een reactie posten