தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 30 maart 2013

கூட்டமைப்பு அலுவலகம் மீது தாக்குதல் 'சிக்கிய மூவரை பொலிசார் விடுவித்தனர்'


தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலக வளாகத்தினுள் பிரவேசிக்க முயன்றபோது, முதலில் இருவரையும் பின்னர் மற்றுமொருவரையும் அங்கிருந்தவர்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஆயினும் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி அவர்களை பொலிசார் விடுவித்து விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.
மூன்றாவதாகப் பிடிபட்டவரை பொலிசார் சோதனையிட்டபோது, அவரிடம் புலனாய்வு படையினரின் அடையாள அட்டை இருந்ததாகவும், எனினும் அவர் அப்பொழுதுதான் அவ்விடத்திற்கு வந்ததாகக் கூறி அவரையும் விடுவித்துவிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பனர் சுமந்திரன் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த கிளிநொச்சி மாவட்ட பொலிசார் சம்வத்தை நேரில் கண்டவர்களிடமும் தன்னிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்து கொண்டு சென்றிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.
பட்டப்பகலில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, பொலிசாரும் இராணுவத்தினரும் அந்தச் சுற்றாடலில் இருந்த போதிலும் கலகக்காரர்களைத் தடுத்து நிறுத்தவோ அல்லது அவர்களைக் கைது செய்யவோ எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு முன்வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனாலும் சம்பவம் நடைபெற்று முடிந்த பின்னர் அங்கு வந்த பொலிசார் வழக்கம்போல வாக்குமூலங்கைளப் பதிவு செய்து கொண்டு சென்றிருக்கின்றார்கள் என்றும் சிறிதரன் அதிருப்தியோடு தெரிவித்தார்.
கிளிநொச்சி தமிழ்க் கூட்டமைப்பு அலுவலகம் மீது தாக்குதல் (பிபிசி)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகம் கோஸ்டி ஒன்றினால் கல்லெறி தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்திருக்கின்றது. இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் காயமடைந்துள்னனர்.
இன்று சனிக்கிழமை முற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் அலுவலக முன்றலில் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சிங்கக் கொடிகளை ஏந்திய வண்ணம் கூச்சலிட்டவாறு திரண்டு வந்தவர்களே கற்களை சரமாரியாக எறிந்து தாக்குதல் நடத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியவர்கள் ஏ9 வீதிவழியாக குழுவாக வந்து கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் எதிரில் ஒழுங்கையில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தை நோக்கிவந்து கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் இரண்டு பொலிசாரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
காயமடைந்தவர்களில் நான்கு பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதலில் அலுவலகக் கூரை, ஜன்னல்கள், கதவுகள், அலுவலகத்தின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் என்பன சேதமடைந்துள்ளன.
பொதுமக்களால் பிடிக்கப்பட்டு காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட தாக்குதல் செய்தவர்களை பொலிஸார் விடுதலை செய்து பின்னர் அலுவலகத்திற்கு திரும்பி வரும் காட்சிகள் அடங்கிய புகைப்படம்.....  

த.தே.கூட்டமைப்பினரின் அலுவலகத்தில் தாக்குதல்!- படுகாயமடைந்த சிலரின் பெயர் விபரங்கள்
[ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 03:25.29 PM GMT ]
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இரு பத்திரிகையாளர்கள் உட்பட காயமடைந்த 15 பேரில் சிலரது பெயர் விபரங்கள் வெளியாகியிருக்கின்றது.
குறித்த சம்பவத்தில் கரைச்சி பிரதேச சபையின் தலைவர் நா.வை.குகராசா, உபதலைவர் வ. நகுலேஷ்வரன் மற்றும் எஸ்.ஓஸ்மன், எஸ்.தயாபரன், எஸ்.பொன்னம்பலநாதன், எஸ்.கனகலிங்கம், எஸ்.மேரிஜோசப், எஸ்.ஜீவநாயகம் (காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்) எஸ்.சுகந்தன், எஸ்.உமாமகேஷ்வரி, கு.சர்வானந்தன் (அக்கராயன் பிரதேச அமைப்பாளர்) மற்றும் பத்திரிகையாளர்களான சு.பாஸ்கரன், சி.சிவேந்திரன் ஆகியோர் இத்தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
இலங்கையின் தேசிய கொடிகளுடன், முகங்களை மூடிக் கொண்டு வந்த சிலர், கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலடியில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் காரியாலயத்தின் மீது நடத்திய தாக்குதலின் போதே இவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.


குழப்பம் விளைவித்த அனைவரும் மதுபோதையில் - எம்.பி சரவணபவன்
[ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 02:58.11 PM GMT ]
கூட்டத்தைக் குழப்புவதற்கென 50க்கும் மேற்பட்டவர்கள் வாகனத்தில் கொண்டுவரப்பட்டு கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலக்தின் முன் இறக்கப்பட்டநிலையில் அவர்கள் இந்த மிலேச்சத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். குழப்பம் விளைவித்த அனைவரும் மதுபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியில் த.தேசியக் கூட்டமைப்பினர் மீதான தாக்குதலுக்கு த.தே. மக்கள் முன்னணி கண்டனம்
[ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 02:57.53 PM GMT ]
கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீதான தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் அக்கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று சர்வதேச நாடுகள் இலங்கைக்கு எதிராக இரண்டு தீர்மானங்கள் கொண்டு வந்து மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றியுள்ளன இந்த தீர்மானங்கள் தொடர்பில் நாங்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளளோம்.
இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்விதமான விமோசனமும் இல்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம்.
இந்த நிலையில் சர்வதேசத்தினால் இலங்கைக்குராக நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்திற்குப் பின்னர் இலங்கை சர்வதேசத்தின் கண்காணிப்பில் இருக்கும் நிலையில் இவ்வாறானதொரு தாக்குதல் நடைபெற்றிருப்பது கண்டிக்கத்தக்க விடயம் என்று அவர் குறிப்பிட்டார்.
கூட்டமைப்பினர் மீதான தாக்குதலை தனிச் சம்பவமாக பார்க்க முடியாது. தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மட்டுமன்றி, இந்த நாட்டில் வாழும் முஸ்லீம் சமூகங்களும் தாக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த தாக்குதல் சம்பவங்களுக்கான பின்னணியைப் பார்க்க வேண்டும்.
வடக்கில் வாழும் தமிழ் மக்கள் போரினால் பாதிக்கப்பட்டதைவிட இப்போது மிகமோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் என்பதை மனித உரிமையை மதிக்கும் அமைப்புக்கள் அறிந்திருக்கும் சந்தர்ப்பத்தில், இவ்வாறான சம்பவங்கள் இங்கு நடைபெற்று வருகிறன.
இந்தச் சம்பவங்களை கண்டிப்பதால் எவ்விதமான நன்மையும் இல்லை என்றாலும் இவ்வாறான அநியாங்களைத் தடுக்க வலியுறுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்றார்.


Geen opmerkingen:

Een reactie posten