பி.ஜைய்னுலாபுதீன் (PJ) - பதில்
இலங்கையிலிருந்து தமிழகம் வரும் புத்தமத குருமார்களை தமிழர்கள் தாக்குவது ஏற்புடையதா ?
இது ஏற்புடையது அல்ல. இது கண்டிக்கத் தக்கதுமட்டுமன்றி,
இலங்கைத் தமிழர்களின் துன்பங்களை மேலும் அதிகரிக்கவே உதவும்.
இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்;
அவற்றைக் களையும் வகையில் தான் தமிழக மக்களின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். மேலும் மேலும் அவர்களைத் துன்பத்திற்கு ஆளாக்கும் விதமாக இங்குள்ளவர்களின் செயல்பாடுகள் அமைந்து விடக்கூடாது.
இலங்கையிலிருந்து வரும் புத்த மதக் குழுக்களாகட்டும்; ஏனைய சிங்களவர்களாகட்டும். அவர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து இங்கேவரவில்லை. கள்ளத் தோணியிலும் வரவில்லை. இந்திய அரசின் முறைப்படியான விசா பெற்றுத்தான் வருகிறார்கள்.
இந்திய அரசு விசா கொடுக்கிறது என்றால், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அதை அனுமதிக்கிறான் என்பதுதான் பொருள்.
இந்திய அரசு உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதம் கொடுத்து அவர்களை நாட்டுக்குள்அனுமதித்து இருக்கும் போது, அவர்களைத் தாக்குவது நாட்டையும், நாட்டின் சட்டத்தையும் அவமதிக்கும் செயலாகும்.
இலங்கையில் இருந்து வரும் யாருக்கும் விசா கொடுக்கக் கூடாது என்றால் இந்திய அரசுக்கு எதிராகப் போராடி தங்களது எதிர்ப்பையும் கண்டனங்களையும் பதிவு செய்யலாமே அன்றி சுற்றுலா பயணிகளைத் தாக்க எந்த நியாயமும் இல்லை. இதனால் பல மோசமான விளைவுகள் ஏற்படும். சுற்றுலாத்துறை மூலம் நாட்டிற்கு வரும் வருமானம் குறையும். தமிழகத்தில் உள்ளவர்கள் வன் முறையாளர்கள்; எனவே யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்ற எண்ணத்தை சர்வதேச அளவில் இது ஏற்படுத்தும்.
உலக நாடுகளின் பேச்சிற்கு மதிப்பளித்து இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டித்தருதல், அடிப்படை வசதிகளை செய்து தருதல்,
அவர்களின் வேலை வாய்ப்புக்கான ஏற்பாடுகள் செய்தல் போன்ற காரியங்களில் இலங்கை அரசு இறங்கும் போது சிங்களர்கள் அதற்கெதிராக கிளர்ச்சியில் இறங்குவார்கள். அதன் காரணமாக நிவாரணப் பணிகள் நிறுத்தப்படலாம்.
அதிகமான சிங்களவர்களுடன், குறைவான தமிழர்கள் கலந்து வாழும் ஊர்களில் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாம். தமிழகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தை உணர்ச்சிப்பூர்வமாக சிங்களமக்களிடம் கொண்டு செல்வதன் மூலம் சிங்கள வெறியர்கள் இதை சாதித்துக் கொள்வார்கள். இவை தான் இது போன்ற செயல்களால் ஏற்படும் விளைவுகளாகும்.
மேலும் ஒரு அரசாங்கம் செய்யும் அக்கிரமங்களை நாட்டு மக்கள் அனைவரும் ஆதரிக்கமாட்டார்கள். இலங்கை அரசு போரில் பங்கு கொள்ளாதவர்களைக் கொன்று குவித்தால், அது சிங்கள மக்கள் அனைவருக்கும் உடன்பாடானது என்று சொல்ல முடியாது.
இலங்கையில் எத்தனையோ சிங்களத் தலைவர்கள் தமிழர்களுக்கு தக்க நிவாரணம் அளிக்க வேண்டும் என்று எழுதியும் பேசியும் வருகிறார்கள். அத்தகையவர்களும் இப்போது வாய் மூடிக் கொள்ளும் நிலையே ஏற்படும்.
எனவே உணர்வுப்பூர்வமாக மட்டும் அணுகாமல் அறிவுப்பூர்வமாகவும் அணுகுவது தான் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும்.
நன்றி உணர்வு வார இதழ்
Geen opmerkingen:
Een reactie posten