இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது இந்திய ஆட்சியாளர்கள் வகித்த வகிபாகம் குறித்த சர்ச்சைகள் உச்ச நிலையை அடைந்து வருகின்றது.
இந்தியாவின் போரையே நாங்கள் நடாத்தி முடித்தோம் என்ற மகிந்த ராஜபகசவின் வாக்குமூலத்துடன் ஆரம்பித்த இந்த சர்ச்சை, தேசியத் தலைவர் அவர்களது இளைய மகன் பாலச்சந்திரனின் படுகொலைக் காட்சிகள் வெளிப்படுத்திய உண்மைகளால் மிகவும் சிக்கலடைந்து வருகின்றது.
பாலச்சந்திரன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, மண்மூடைகள் அடுக்கப்பட்ட இராணுவ பதுங்கு குழி ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டதையும், அவனுக்கு வழங்கப்பட்ட ஏதோ ஒரு உணவை அவன் அச்சத்துடன் கொறிப்பதையும், அதன் பின்னரான ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் மார்பில் துளைக்கப்பட்ட நிலையில் பாலச்சந்திரனின் உடல் தரையில் கிடப்பதையும் சனல் 4 வெளியிட்ட புகைப்படங்கள் உறுதிப்படுத்தின.
இந்த மூன்று படங்களும் ஒரே புகைப்படக் கருவியினால் படம் பிடிக்கப்பட்டது எனவும், அதில் பதியப்பட்டுள்ள நேரக் கணிப்பீட்டின்படி, பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட காட்சிக்கும், உடலமாகக் காட்சி தரும் படத்திற்கும் இடையே 2 மணி நேர இடைவெளியே இருப்பதாகவும் சனல் 4 உறுதிப்படுத்தியுள்ளது.
உலகத் தமிழர்களது நெஞ்சங்களைப் பதைக்கச் செய்த பாலச்சந்திரனின் புகைப்படம், தமிழக மாணவர்களைத் தட்டி எழுப்பிப் போராடவும் தூண்டியுள்ளது.
தமிழகத்தில் மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கான நீதிப் போராட்டம், இன்று மக்கள் போராட்டமாக விரிந்து செல்கின்றது.
தமிழக மாணவர்களது நீதிக்கான போராட்டம் இந்திய அரசியலில் புயலைக் கிளப்பி வருகின்றது. மாணவர்களது போராட்ட நியாயங்களால் முதலில் சாய்த்து வீழ்த்தப்பட்டவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியே.
ஈழத் தமிழினத்தின் அழிவையும் தனக்கான முதலீடாக மாற்றி, மத்திய அரசில் வளம் நிறைந்த மந்திரி பதவிகளைப் பெற்றிருந்த கருணாநிதி, இறுதிப் போருக்குப் பின்னரும் தான் பங்கு வகித்த மத்திய அரசிலிருந்து தனது ஆதரவை மீளப் பெற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்.
ஆனாலும், தி.மு.க. தன் மீதான நம்பிக்கையை தமிழகத்தில் மீளக் கட்டி எழுப்புவது முடியாத நிலையில் திணறுகின்றது. தமிழகத்தின் ஒலி, ஒளி ஊடகங்களின் விவாதங்களிலிருந்து விலகி நிற்கவேண்டிய பரிதாபகரமான நிலையில் தி.மு.க. தனிமைப்பட்டுப் போயுள்ளது.
மாணவர்களது போராட்டத்திற்கு முன்னதாகவே, தமிழகத்தில் பலத்த வீழ்ச்சியை எதிர்கொண்ட தமிழக காங்கிரஸ் கட்சி, தற்போது முற்றாகத் துடைத்தெறியப்படும் நிலையை உருவாக்கிக்கொண்டுவிட்டது.
இத்தனை அழுத்தங்கள் உருவான பின்னரும், இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தமிழகத்தின் மாணவர்களது நீதிக்கான போராட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தொடர்ந்தும் சிங்கள ஆட்சியாளர்களை சர்வதேச அழுத்தங்களிலிருந்து காப்பாற்றும் முயற்றியிலேயே வெளிப்படையாகச் செயற்பட்டு வருகின்றார்கள்.
இது, ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்திலும் தெரிந்தது.
இங்கேதான், தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது மகன் பாலச்சந்திரன் படுகொலை குறித்த புகைப்படம் இன்னொரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அந்தப் படுகொலை குறித்து, சனல் 4 இனால் வெளியிடப்பட்ட மூன்று படங்களில், இரண்டாவது படத்தில் ஒரு இராணுவத்தினனின் சீருடையின் ஒரு பகுதி இந்தச் சர்ச்சைக்கான மூலத்தை உருவாக்கியது.
இந்தப் படுகொலை குறித்த செய்திகளை இலங்கையின் ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் வழமைபோல் நிராகரித்து வரும் நிலையில், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், போர்க் குற்றவாளிகளில் ஒருவருமான சரத் பொன்சேகா, இந்தப் படத்திலுள்ள இராணுவத்தினது சீருடை சிறிலங்கா இராணுவத்திற்கு உரியது அல்ல. இந்திய இராணுவத்தின் சீருடை போன்று உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தமிழகம் உணர்ச்சிப் பிளம்பாகக் கொதித்துள்ள நிலையில், சரத் பொன்சேகாவால் தெரிவிக்கப்பட்ட இந்தக் கருத்து குறித்து, இந்திய ஆட்சியாளர்கள் எந்தக் கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.
தமிழகத்தின் தற்போதைய மக்கள் போராட்டத்தை இன்னொரு பரிணாமத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய மிகப் பெரியதொரு சிக்கலான கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்காத நிலையில், இது உண்மையாக இருக்கலாம் என்ற அபிப்பிராயத்தையே உருவாக்கியுள்ளது.
அவ்வாறு, இந்தக் குற்றச்சாட்டு இந்திய ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்படாமல் இருக்குமிடத்தில், தமிழீழ மக்களுக்கெதிரான இனவழிப்புப் போரில் இந்தியாவின் நேரடி வகிபாகம் உறுதிப்படுத்தப்பட்டு விடும்.
இது, அந்தப் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற பல பத்தாயிரக்கணக்கான தமிழீழ மக்களது படுகொலைகளுக்கான பொறுப்புக் கூறலில் இந்தியாவும் பங்கேற்க வேண்டிய ஆதாரங்களை உருவாக்கிவிடும்.
இந்தப் போர்க்குற்ற ஆதாரம் உறுதிப்படுத்தப்படும் நிலையில், பாலச்சந்திரனது படுகொலையில் இந்திய ஆட்சியாளர்கள், குறிப்பாக சோனியா காந்தியின் பங்கு குறித்தும் கேள்வி கேட்கும் நிலைக்கு இந்திய மக்கள் உள்ளாக்கப்படுவார்கள்.
காந்தியம் சாகடிக்கப்பட்ட காந்தி தேசத்தில், கொலை வெறிபிடித்த சோனியா காந்தியின் கொடூரங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். அது, காந்திகள் வரவால் சாத்தியப்படப் போவதில்லை. அதற்கு, பிரபாகரன்களே வரவேண்டும். அதற்கான அவசியம் இப்போது, காங்கிரஸ் கட்சியினாலேயே உருவாக்கப்பட்டுவிட்டது.
இசைப்பிரியா
Geen opmerkingen:
Een reactie posten