தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 maart 2013

இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழக மக்களின் மனநிலையை அறிய மாணவர்கள் கருத்து கேட்பு !


தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒட்டு மொத்த எழுச்சியுடன் கல்லூரி மாணவ, மாணவிகள் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனாலும் மாணவர்களின் போராட்டம் ஓயவில்லை. தினம் ஒரு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இன்று காலை என்ஜினீயரிங் கல்லூரிகளை சேர்ந்த உலக தமிழ் அமைப்பு மாணவர்கள் மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே நின்று பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடத்தினார்கள்.
கேள்வித்தாள் வடிவில் அவர்கள் கேட்டிருந்த கேள்விகள் வருமாறு:-
1. இலங்கை தமிழர் பிரச்சினைக்காக நடைபெறும் போராட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?
இது தேவைதானா? அல்லது வேண்டாமா?
2. மாணவர்களின் போராட்டம் மக்களுக்கு இடையூராக தெரிகிறதா? இல்லையா?
3. அ.தி.மு.க. - தி.மு.க. எந்த ஆட்சியில் மாணவர்களின் போராட்டம் அதிகமாக ஒடுக்கப்பட்டது? என்று நினைக்கிறீர்கள்.
4. இலங்கை பிரச்சினையில் இந்திய வெளியுறவு கொள்கை சரியான நடவடிக்கையாக இருக்கிறதா?
5. போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்கிறார்களா?
6. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை வீரர்களை வெளியேற்ற வேண்டுமா? கூடாதா?
7. இலங்கை வீரர்கள் மற்ற கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவில் விளையாடலாமா? கூடாதா?
8. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெறாதது தெரியுமா?
9. இலங்கை பிரச்சினையில் காங்கிரஸ் நடந்துகொண்ட விதம் சரியா? உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.
மெரீனா கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் மாணவர்களின் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் எழுதி கொடுத்தனர். உலக தமிழ் அமைப்பு மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள், கனகராஜ், நந்தினி, நந்தகுமார், ஜெயச்சந்திரன், விக்னேஸ்வரன், சிவா உள்பட ஏராளமான மாணவ, மாணவிகள் கருத்து கேட்பு நடத்தினர்.
இதுபற்றி பிரபாகரன் கூறுகையில், பொதுமக்களின் கருத்துக்கு ஏற்ப எங்களது செயல்பாடுகளை சரியாக அமைத்து கொள்ள இந்த ஆய்வு உதவும் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten