தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 maart 2013

இலங்கையில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியம் சுமந்திரன்


இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றே சுயாதீன மற்றும் நம்பகத்தன்மை நிலைமைகளை நிறைவு செய்யும்.’
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-
இலங்கையில் வேற்றுமைகளைக் களைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் பொறுப்புக்கூறும் விடயங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானம் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் கிடைத்த ஒரு வெற்றியாகும்.
இன நல்லிணக்கம், ஜனநாயக மறுசீரமைப்பு, நிலையான சமாதானம், நீதி, தண்டனை விலக்களிப்புக் கலாசாரத்துக்கு முடிவு கட்டுதல் ஆகியவற்றில் அவா கொண்டுள்ள இலங்கையர்கள் தனித்து விடப்படவில்லை என்பது இப்போது தெளிவாகிவிட்டது. இலங்கைக்குள் அடக்கப்பட்ட மக்களின் குரலை செவிமடுக்க மாட்டோம் என்ற ஆட்சியாளர்களின் விடாப்பிடியான போக்கை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளவேயில்லை என்பதற்கு இது ஒரு தெளிவான சமிக்ஞை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய தீர்மானத்தின் வாசகங்களை நோக்கினால் அது கடந்த மார்ச் மாதத்தைய தீர்மானத்தினின்றும் பெரிய மாறுதல்களைக் கொண்டிருப்பது வெளிப்படை.
இவற்றுள் -
1. சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் பொறுப்புக்கூறும் விடயம்.
2. இத்தகைய மீறல்கள் தொடர்பில் நம்பகத்தன்மைமிக்க, பக்கம் சாராத விசாரணைகளை நடத்துவதற்கு அரசுக்குள்ள இன்றியமையாத கடப்பாட்டை வலியுறுத்துதல்.
3. இலங்கையில் அடிப்படை மனித உரிமைகள் முழு வரம்புகளையும் மீறித் தொடர்வதைச் சுட்டுதல்.
4. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை ஏற்றுக் கொள்ளுதல்.
5. சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமை சம்பந்தமான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அழைப்பை குறிப்பில் கொள்ளுதல்.
- ஆகியவை தொடர்பான அதிகரித்த கருத்துக்கள் விசேடமாக அடங்குகின்றன.
இந்தத் தீர்மானத்துக்கான மூல வரைபிலிருந்து இறுதித் தீர்மானம் மறுசீரமைக்கப்பட்டுள்ள போதிலும், உண்மையில் 2012இன் தீர்மானத்தினின்றும் இது மிகவும் முன்னேற்றகரமானதே.
முக்கியமாக இத்தீர்மானம் இம்முறை வாக்களிக்கத் தகுதியுள்ள ஆபிரிக்க நாடுகளின் பெரும்பான்மையினதும், பெரும்பாலும் முழுமையாக ஐரோப்பிய, கிழக்கு ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளினதும் ஆதரவைப் பெற்றுள்ளது. ஆசியாவில் கூட பிரேரணையை ஆதரிப்பதில இந்தியா மற்றும் தென்கொரியா இணைந்துள்ளன. இலங்கை அரசின் விசுவாசமான நண்பர்களான ஜப்பானும் மலேசியாவும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
ஆகவே, இந்தத் தீர்மானம் மேற்குலகத்தினுடையது மட்டுமல்ல. சமத்துவம், ஜனநாயகம், சுதந்திரம், நீதி ஆகியவற்றின் விழுமியங்களை மட்டும் அது வலியுறுத்தவில்லை. அதற்கு அப்பால் தீர்மானத்தில் தீர்க்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான விழுமியங்கள் தொடர்பில் கண்டங்கள் கடந்த ஆதரவையும் அது வெளிப்படுத்தி நிற்கின்றது.
குறிப்பாக ஆதரவளித்த நாடுகளில் சில ஸியாரோலியோன் போன்றவையாகும். அதன் பிரதிநிதி, எமது நாடு இரத்த ஆறு ஓடிய, பேரழிவு தந்த பத்தாண்டு சிவில் யுத்தத்தை எதிர்கொண்டது. ஆனால், நேர்மையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறும் கடப்பாடுகள் ஆகியவை மூலமே அந்த இரத்த ஆறு ஓடிய, பேரழிவு தந்த யுத்த அழிவிலிருந்து நமது நாடு மீண்டெழுந்தது. ஆகையினால் இந்தப் பிரேரணையை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
இலங்கையைப் பாராட்டும் தீர்மானம் ஒன்றை 2009இல் இலங்கை பெற்றுக் கொள்வதற்கு உதவிய இந்தியா இப்போது, அதற்கு மாறாக, வரவேற்கத்தக்க வகையில், தனது குடிமக்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில் கடும் விமர்சன நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இந்த வீச்சத்தின் போக்கை அரசு புரிந்துகொள்ள வேண்டும். வெளிப்படையான சில ஆதரவுத் தரப்பில் மட்டும் தங்கியிருந்து கொண்டு, ஜனநாயக உலகைப் புறமொதுக்கும் அதன் தந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக உலக ரீதியான ஆதரவை அதற்கு இழக்க வைக்கும் சுருக்கமாகச் சொல்வதானால், மறுசீரமைப்புகளுக்கான புவிஅரசியல் சார் அழுத்தம் வலிமையானது.
நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுக்கும் போக்கில் இலங்கை மக்கள் இயன்றளவு வலிமையாக்க முனைவதே இன்றைய தேவையாகும்.
அதில் நாங்கள் தவறுவோமேயானால் – சகிப்புத் தன்மையற்ற மத, இனவாதச் சக்திகளின் விஷக் கலவையும், உரிய நிவாரணங்கள் அளிக்கப்படாத மக்களின் மனக்குறை மற்றும் ஆதங்கங்களும் சட்டத்தின் ஆட்சியின்மையும் சேர்ந்து மீளவே முடியாத வகையில் தமது கைவரிசையைக் காட்டிவிடும்.
தமிழ் மக்கள் நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் உட்பட்ட நிலையில் வாழும் வடக்கு, கிழக்கிற்காக மட்டுமல்லாமல், சமூகத்தின் ஏனைய இன மக்களுக்காகவும் தற்போதைய மோசமான போக்கைத் தடுத்து நிறுத்துவது அவசியமாகும்.
அண்மைக் காலமாக வெளிப்பட்டுவரும் இனவாத பாஸிசத் தீவிரப் போக்கு, முஸ்லிம் மக்களை ஊறுபடுத்தக்கூடியதான அச்சத்தை தருவதோடு 1983 நிலையைப் பீதியோடு நினைவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது.
தெற்கிலும் அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் ஆயுதம் தாங்கிய எதிர்க்குழுக்கள் ஆகிய தரப்புகளின் வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனக்குறைகள், துக்கங்கள் கேட்டறியப்படுவதோடு அவர்களின் அன்புக்குரியவர்களின் மறைவு குறித்த உண்மைகளும் கண்டறியப்பட வேண்டும்.
அதுவே, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உண்மையைக் கண்டறியும் உரிமை, நீதி, உரிய இழப்பீடு ஆகியவை கிடைப்பதை உறுதி செய்வதோடு மீண்டும் அத்தகைய இழப்புகள் ஏற்படாமல் உறுதிப்படுத்தும் வகையில் உண்மையான பொறுப்புக் கூறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதற்கான காரணமாகும்.
இவ்வாறு, எமது மக்களின் ஆழமான, வலிகள் நிறைந்த கோரிக்கைகளுக்காக நாம் குரல் கொடுப்பது பழி தீர்க்கவல்ல நீதியான சமாதானத்திற்காகவே.
பழி தீர்த்தலுக்கும் நீதி நிலை நாட்டப்படுதலுக்கும் இடையில் தெளிவான வேறுபாடுகள் உள்ளன. பழி தீர்ப்பதற்கான கோரிக்கை இரண்டு தரப்புகளினாலுமே இழைக்கப்பட்ட குற்றங்களை முன்னிலைப்படுத்தாது. ஏனெனில் நீதி நிலை நாட்டப்படுவதற்கான கோரிக்கை மட்டுமே பக்கச் சார்பற்றதாக இருக்கும்.
பழி வாங்குவதற்கான அழைப்பு உண்மைகளை மட்டுப்படுத்துவதாக அமையும். ஆனால் நீதி நிலைநாட்டப்படுவதற்கான அழைப்பு முழு உண்மைகளையும் வெளிக் கொணர்வதை வலியுறுத்துவதாக அமையும்.
பழி வாங்குவதற்கான அழைப்பு பழைய காயங்களைத் தீர்க்கும் நோக்கிலேயே கடந்த காலத்தைப் பார்க்கும். ஆனால் நீதி நிலைநாட்டப்படுவதற்கான அழைப்பு எதிர்காலத்தை வளப்படுத்தும் இலக்கிலேயே கடந்த காலத்தை நோக்கும்.
மனித உரிமைகள் பேரவையில் மிகத் தெளிவாகப் பேசியுள்ளது. இலங்கை இப்போது கற்றுணர்ந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆதாரபூர்வமான பரிந்துரைகளைக் கட்டாயம் நடைமுறைப்படுத்துவதோடு சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் நம்பத்தகுந்த விசாரணைகளையும் முன்னெடுக்க வேண்டும்.
நாங்கள், முன்னர் ஏற்கனவே பல தடவைகள் சுட்டிக்காட்டியமை போன்று சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றே சுயாதீன மற்றும் நம்பகத்தன்மை நிலமைகளை நிறைவு செய்யும்.
இலங்கை அரசின் முன் ஒரேயொரு தெரிவுக்கான வாய்ப்பு மட்டுமே உள்ளது. அது, ஒன்றில் சரியான முன்னெடுப்பைத் தானே தெரிவு செய்தல் அல்லது அந்தத் தெரிவே சரியானதை முன்னெடுப்பதற்கு அதை விட்டுக்கொடுத்தல் (இழத்தல்) ஆகும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.




Geen opmerkingen:

Een reactie posten