[ ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013, 03:57.32 PM GMT ]
சமாதானத்தின் பலன்கள் சிங்கள மக்களுக்கு கிடைக்கவில்லை என அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நூற்றாண்டில் சிங்கள இன சமூகம் இலங்கையில் சிறுபான்மையாக மாற்றமடையக் கூடிய அபாயம் காணப்படுகின்றது.
கடும்போக்குடைய சிலர் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். சிங்கள, பௌத்த மக்கள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மீது அமெரிக்கா தடைகளை விதிக்குமா?
[ ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013, 02:37.25 PM GMT ]
இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் மீண்டும் நிராகரித்துள்ளமை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக் குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்றிருந்த அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்தத் தீர்மானத்தினால் இலங்கையின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படப் போவதில்லை என்று தெளிவாகக் கூறியிருந்தார்.
ஆனால் இலங்கை அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி சர்வதேச சமூகம் நகர நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அலட்சியம் செய்தால் சர்வதேசப் பொறிமுறை ஒன்றை நோக்கி நகர நேரிடலாம் என்று அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் எச்சரித்துள்ளார்.
ஆனால் அப்படி எந்தவொரு சர்வதேசப் பொறிமுறையையும் அமெரிக்கா கொண்டுவரப் போவதில்லை என்று கூறியுள்ளார் இலங்கை அமைச்சர் டியு குணசேகர.
இன்னொரு பக்கத்தில் மேற்குலகம் புலிகளின் சொற்படி நடக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ள பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் மீது அமெரிக்காவினால் தடைகளை விதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
ஐநா பாதுகாப்புச் சபையின் அனுமதியின்றி எதையும் செய்ய முடியாது என்றும், அங்கே ரஷ்யா, சீனா என்ற இரு பலமான நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு இருப்பதாகவும் கோத்தபாய ராஜபக்ச கடந்த வாரம் காலியில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
எப்படியாவது இலங்கை ஜெனிவா தீர்மானத்துக்கமைய செயற்பட வேண்டியதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் நிலைப்பாடு.
ஆனால் அதற்கெல்லாம் பயப்படப் போவதில்லை என்றும், தடைகள், பொறிமுறைகள் என்பதெல்லாம் வெறும் பூச்சாண்டிதான் என்றும் கூறுகிறது இலங்கை.
அவ்வாறாயின் அடுத்து என்னதான் நடக்கப் போகிறது.
கடந்த ஆண்டைப் போலவே ஒன்றுமே நடக்காத நிலைதான் மீண்டும் தொடரப் போகிறதா என்ற கேள்வி பலரிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.
அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வாய்மொழியாகச் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை, அடுத்த ஆண்டு மார்ச் மாதக் கூட்டத்தொடரில் அவர் சமர்ப்பிக்கவுள்ள இறுதி அறிக்கை மற்றும் அதையடுத்த விவாதம் என்பன இலங்கையை ஜெனிவா கூண்டுக்குள்ளேயே நிறுத்தி வைத்திருக்கப் போகின்றன.
இந்தநிலையில் ஒருவேளை அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் திருப்தி கொள்ளும் வகையில், இலங்கை நடந்து கொள்ளாது போனால் சர்வதேசப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப் போவதற்கு வாய்ப்புள்ளதா?
அல்லது இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதா?
இந்தக் கேள்விகள் எதிர்வரும் மாதங்களில் வலுப்பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
ஏனென்றால் ஜெனிவா தீர்மானத்தை நிராகரித்துள்ள இலங்கை அதனை முற்றிலுமாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமா என்பது சந்தேகம் தான்.
எனவே அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி வலுவாக உள்ளது.
இலங்கை அரசாங்கத்துக்கு உள்ள ஒரு நம்பிக்கை சீனாவும், ரஷ்யாவும் தான்.
ஐநா பாதுகாப்புச் சபை வரை இந்த விவகாரம் சென்றால் கூட தமக்கு அச்சமில்லை என்று கருதுகிறது இலங்கை.
பாதுகாப்புச் சபையில் இரு நாடுகளுக்கும் உள்ள வீட்டோ அதிகாரத்தை நம்பியே மேற்குலகுடன் இலங்கை முரண்டு பிடிக்கிறது.
இரண்டாவது தீர்மானத்தை இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த அமெரிக்கா, அடுத்த ஆண்டும் இதே நிலை தொடர்ந்தால் இன்னொரு தீர்மானத்தைக் கொண்டு வருமா என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலண்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் இல்லை என்றே கூறியிருந்தார்.
அதாவது இத்தகைய தீர்மானங்களால் இலங்கையை வழிக்குக் கொண்டுவர முடியாது என்ற கருத்து அமெரிக்காவிடம் ஊன்றிப் போயுள்ளதையே இது உணர்த்துகிறது.
இந்தநிலையில் அடுத்த கட்டமாக அமெரிக்கா வேறு வழியில் தான் சிந்திக்க முற்படும்.
அதேவேளை தீர்மானம் நிறைவேற்றுவதை விட ஐநா மனித உரிமைகள் பேரவையால் வேறு எதையும் செய்ய முடியாது என்பது இலங்கைக்கு நன்றாகவே தெரியும்.
அடுத்த கட்டமாக இலங்கை மீது எத்தகையான நடவடிக்கையை எடுப்பதாக இருந்தால் அதற்கு அதிகாரம்மிக்க சபையின் ஆதரவைப் பெற வேண்டும்.
அதாவது ஐநா பாதுகாப்புச் சபைதான் அதைத் தீர்மானிக்கும் களமாக உள்ளது.
பாதுகாப்புச் சபையில் சீனா, ரஷ்யாவிடம் உள்ள வீட்டோ அதிகாரங்கள் தான் இலங்கையின் மிகப் பெரிய பலம்.
இஸ்ரேல் மீது ஐநா மனித உரிமைகள் பேரவையில் இதுவரை ஆறுக்கும் அதிகமான கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன.
ஆனால் இஸ்ரேல் அதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை.
அதற்கு மேல் ஐநா மனித உரிமைகள் பேரவையால் எதையும் செய்ய முடிவதும் இல்லை.
ஏனென்றால் அமெரிக்கா ஒருபோதும் பாதுகாப்புச் சபையில் தனது செல்லப் பிள்ளையான இஸ்ரேலை விட்டுக் கொடுப்பதில்லை.
அதுபோலத் தான் இலங்கையின் நிலையும் உள்ளது.
பாதுகாப்புச் சபையில் இலங்கையைக் காப்பாற்ற சீனாவும், ரஷ்யாவும் உள்ள நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் என்ற மூன்று வீட்டோ அதிகாரமுள்ள நாடுகள் மறுபக்கத்தில் இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.
பொருளாதாரத் தடையும் விதிக்க முடியாது. சர்வதேச போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையையும் அமைக்க முடியாது.
இந்தச் சிக்கலை இலங்கை நன்றாகவே புரிந்து கொண்டு தான் ஜெனிவா தீர்மானங்களை உறுதியாக எதிர்த்து வருகிறது.
இந்தநிலையில் அடுத்த ஆண்டில் இலங்கை இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தத் தவறினால் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் என்ன செய்யப் போகின்றன?
பேசாமல் இருந்து விடப் போகின்றனவா என்ற கேள்வி வருகிறது.
போர்க்குற்றங்கள் நடந்துள்ளன என்றும், அவறறை முறைப்படியாக விசாரிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு, அமெரிக்கா ஓய்ந்து போயிருக்க முடியாது.
அவ்வாறு இருந்து விட்டால் அமெரிக்காவின் மேலாதிக்கம் கேள்விக்குள்ளாகி விடும்.
இலங்கை விடயத்தில் இந்தியா எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் எவ்வாறு நிற்கிறதோ அதேபோன்ற நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டு விடும்.
அது உலக வல்லரசான அமெரிக்காவுக்கு அவமானத்தை ஏற்படுத்தும்.
அதனால் அமெரிக்காவினால் இனிமேல் இந்த விவகாரத்தில் இருந்து முற்றாக ஒதுங்கிவிட முடியாது.
இதேபோன்றதொரு சவாலை அமெரிக்கா ஏற்கனவே சிரியாவில் எதிர்கொண்டுள்ளது.
சிரியா அரசுக்கு ரஷ்யா பக்கபலமாக இருக்கிறது.
ஐநா பாதுகாப்புச் சபையில் சிரிய அரசுக்கு எதிராக எதையும் செய்ய முடியாத கட்டத்தில் அமெரிக்கா இருக்கிறது.
அதனால் ஆரம்பத்தில் சிரிய அரசுக்கு எதிராக போராடுவோருக்கு இரகசியமாக ஆயுதங்களைக் கொடுத்தது.
இப்போது அவர்களை அங்கீகரித்து பகிரங்கமாக ஆயுதங்களை வழங்கும் அளவுக்கு வந்துள்ளது.
அதேவேளை சீனாவையும் தன் கைக்குள் வளைத்துப் போட்டு சிரியாவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐநா பொதுச்சபையில் நிறைவேற்றியுள்ளது.
சிரிய விடயத்தில் சீனாவையும் தன்பக்கம் இழுக்கும் அளவுக்கு அமெரிக்கா நகர்வுகளை மேற்கொள்கிறது என்பதை நினைவில் கொள்ளலாம்.
இது இலங்கை விவகாரத்தில் ஒருபோதும் நடக்காது என்று மட்டும் கற்பனை செய்ய முடியாது.
ஐநா பாதுகாப்பச் சபையின் ஊடாக இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதிக்க முடியாது போனாலும் அமெரிக்கா தனது மேற்குலக நண்பர்களுடன் இணைந்து இலங்கையை அழுத்திப் பிடிக்கலாம்.
அதற்கான வழிகள் இன்னமும் நிறையவே உள்ளன.
அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் தாமாகவே இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விதித்தால் ஐநாவினால் எதுவும் செய்ய முடியாது.
போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கைக்காக ஜிஎஸ்ரி பிளஸ் வரிச்சலுகையை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் விலக்கிக் கொண்டன.
அதன் விளைவாக இலங்கையில் லட்சக் கணக்கானோர் வேலையிழந்தனர். நூற்றுக்கணக்கான ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
ஆடை ஏற்றுமதியும் அதன் மூலமான வருவாயும் கணிசமாகக் குறைந்து போயுள்ளன.
இந்தநிலையில் மேற்குலகினால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் கிட்டத்தட்ட முற்றாகவே சரிந்து போகும்.
ஏனென்றால் இலங்கையின் பிரதான ஏற்றுமதி நாடு அமெரிக்கா தான்.
இலங்கையின் ஏற்றுமதியில் 23.3 வீதம் அமெரிக்காவுக்கே மேற்கொள்ளப்படுகிறது.
அதற்கடுத்து பிரித்தானியாவுக்கு 11.52 வீத ஏற்றுமதி இடம்பெறுகிறது.
இத்தாலி, பெல்ஜியம், ஜோ்மனி ஆகிய மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கும் சுமார் 15.5 வீதம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கனடா, பிரான்ஸ், நெதர்லாந்து, துருக்கி, சுவிற்சலாந்து ஆகியவற்றுக்கு 5 வீத ஏற்றுமதி இடம்பெறுகிறது.
இந்தவகையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடையை இலங்கை எதிர்கொண்டால் குறைந்தது 60 வீதமான ஏற்றுமதி வாய்ப்பபை இலங்கை இழக்க நேரிடும்.
இந்தநிலையில் இலங்கைக்கு முண்டு கொடுக்கும் ரஷ்யாவும் 2.86 வீதமும், ஈரானுக்கு 2.13 வீதமும், சீனாவுக்கு 1.18 வீதமும், பாகிஸ்தானுக்கு 0.9 வீதமும் மட்டுமே ஏற்றுமதிகள் இடம்பெறுகின்றன.
எந்த வகையிலும் இலங்கையின் ஏற்றுமதி வாய்பபை இந்த நாடுகளால் வழங்கவோ, மேற்குலகின் பொருளாதாரத் தடையொன்றின் விளைவுகளில் இருந்து காப்பாற்றவோ முடியாது.
அமெரிக்கா மற்றம் மேற்குலக நாடுகள் இலங்கைச சந்தையை கைக்குள் போட முனைந்தாலும் வெறும் இரண்டு கோடி மக்கள் தொகையே கொண்ட நாடு என்பதால் வணிக நோக்கம் அதிகளவில் செல்வாக்கு செலுத்த முடியாது.
சர்வதேச பொறிமுறையை அமெரிக்கா போன்ற நாடுகளால் கொண்டுவர முடியாது போனாலும் இலங்கையைப் பணிய வைக்க மேற்குலகிற்கு வேறு வழிகளும் உள்ளன.
ஆனால் அமெரிக்காவோ மேற்குலகோ இலங்கையைப் பணிய வைப்பதற்காக மேற்கொள்ளும் எத்தகைய பொருளாதாரத் தடையும் இலங்கை அரசை வழிக்கு கொண்டு வருகிறதோ இல்லையோ பொது மக்களைத் தண்டிப்பதாகவே அமைந்து விடக் கூடும்.
ஹரிகரன்
இலங்கை ஏற்றுமதியில் வீழ்ச்சி!- 'மஹிந்த சிந்தனையில்' திட்டமிட்ட இலக்கு பின்னடைவு: யூசூப் மரைக்காயர்
[ ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013, 04:54.11 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையில் ஏற்றுமதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் கணிசமான அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி யூசூப் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.
இந்த வீழ்ச்சியானது, அரசின் 'மஹிந்த சிந்தனையில்' திட்டமிட்டிருந்த ஏற்றுமதி இலக்குக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது சிறிது கவலை அளிக்கக் கூடிய வகையில் இருந்தாலும், இதிலிருந்து மீள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வீழ்ச்சி இதற்கு ஒரு முக்கிய காரணம்.
இலங்கையின் வெளிநாட்டு ஏற்றுமதிகளில் 43 சதவீதம் ஆயத்த ஆடைகள் மூலமானவை, அதில் பெரும்பான்மையானவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுவதால், அந்நாடுகளின் பொருளாதார நிலை தமது ஏற்றுமதியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதேவேளை குறுகிய கால வீழ்ச்சியின் காரணமாக எதிர்காலத்திலும் இலங்கை ஏற்றுமதிகள் வீழ்ச்சியடையும் என்று கொள்ள முடியாது.
இலங்கையில் மனித உரிமைகள் மேம்படவில்லை என்று கூறி ஐரோப்பிய ஒன்றியம் அங்கிருந்து ஏற்றுமதியாகும் பல பொருட்களுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் எனப்படும் வரிச்சலுகையை விலக்கிக் கொண்டால்தான் ஆடை ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை யூசூப் மரைக்காயர் மறுக்கிறார்.
மீன்பிடித்துறையிலும் ஏற்றுமதிகள் சிறிய வீழ்ச்சியை கண்டுள்ளன என்பதை ஏற்றுக் கொள்ளும் அவர், அதனால் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை எனவும் கூறுகிறார்.
அதேபோல இரத்தினக்கற்களின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது என்றாலும் அது பெரிய அளவில் இல்லை. எனினும், ஏற்றுமதிகளை ஊக்குவிக்க, ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகளை அளிக்கும் திட்டங்களை அரசு முன்னெடுக்கவுள்ளது. தேயிலை, ரப்பர் போன்ற விவசாய ஏற்றுமதி துறைகளை அபிவிருத்தி செயல்பாடுகளை அரசு ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten