தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 30 maart 2013

கிடுகிடு மாணவர்கள்; கடுகடு ஞானதேசிகன்!


கிடுகிடு மாணவர்கள்; கடுகடு ஞானதேசிகன்!

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்​கொள்வதற்காக காங்கிரஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டம், மாணவர்​களின் போராட்டத்தால் திசை திரும்பிவிட்டது. தமிழகத்தின் பிரதானக் கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இரண்டும் ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டங்களை மாவட்டவாரியாக நடத்திவரும் நிலையில், காங்கிரஸும் களத்தில் இறங்கியது. திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கான ஆலோ​சனைக் கூட்டத்தை கடந்த 27-ம் தேதி திருச்சியில் நடத்தியது.
மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு மாநிலத் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் 10.30 மணி வரை தங்கியிருந்த ஹோட்டலைவிட்டு வெளியில் வரவில்லை. ஈழ விவகாரம் காரணமாக மாணவர் கூட்டமைப்பினர் அவர் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற பேச்சு கிளம்பியிருந்ததால், பத்திரிகை புகைப்படக்காரர்கள் அந்த ஹோட்டல் வாசலிலேயே காத்திருந்தனர்.
இதற்கிடையே, மாணவர் கூட்டமைப்பினர் மற்றும் நாம் தமிழர் அமைப்பைச் சேர்ந்த சிலர் கூட்டம் நடக்கும் திருமண மண்டபம் அருகே கூடினர். அங்கு கட்டப்பட்டு இருந்த காங்கிரஸ் பேனர்களை அடித்து நொறுக்கி, காங்கிரஸ் கொடிக்கு தீ வைத்து கறுப்புக் கொடி காட்டினர். காங்கிரஸாரும் உருட்டுக்கட்டை சகிதமாக அந்த மாணவர்களை விரட்டினர். இதில், இரண்டு மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. சில மாணவர்களைப் பிடித்த காங்கிரஸார், அவர்களைப் போலீஸில் ஒப்படைத்தனர். இந்தத் தாக்குதலில் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் கை விரலில் காயம். இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்களைக் கைது​செய்ய வேண்டும் என்று, காங்கிரஸார் சாலை மறியல் நடத்தினர். நேரம் செல்லச்செல்ல, சிலர் அங்கே வந்த வாகனங்களைத் தாக்கினர். சம்பவ இடத்துக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனுடன், கன்டோன்மென்ட் போலீஸ் உதவிக் கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்த… மறியல் கைவிடப்பட்டது. அதன் பின்னரே கூட்டம் தொடங்கியது.
திக்குக்கு ஒருவராக இருந்த காங்கிரஸார் வேற்றுமைகளை மறந்து ஒன்று கூடியிருந்தனர். முதலில் பேசிய ஜெரோம் ஆரோக்கியராஜ், தி.மு.க-வை ஏகத்துக்கும் வாரினார். ”கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சாருபாலாவுக்கு எதிராக கே.என்.நேரு வேலை செய்ததால்தான், அவர் தோற்க நேரிட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தொட்டியம் தொகுதியில் ராஜசேகரனுக்கு எதிராக கண்ணையனை வேண்டுமென்றே நிறுத்தினார். அப்படியும் 53 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜசேகரன் வெற்றிபெற்றார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் எப்படிப் பணியாற்ற வேண்டும் எனத் தலைவர் கட்டளையிடுவார். அவர் சொன்னபடி செய்வோம்” என்றார். இவர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அணியைச் சேர்ந்தவர்.
அடுத்து மைக் பிடித்த ராஜசேகரன், ”சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வினருடன் கூட்டணி அமைத்தால் நாம் வாஷ்அவுட் ஆவோம் என்று தலைவர் வாசனிடம் எவ்வளவோ மன்றாடினேன். ‘அரசியல் நெருக்கடிதான். நான் என்ன செய்ய?’ என்றார் வாசன். அதன் விளைவை கடந்த சட்டமன்றத் தேர்தலில் அனுபவித்தோம். எதிர்வரும் தேர்தலில் தனித்து நின்றாலும், தலைமை வேறு யாருடன் கூட்டணி என்று அறிவித்தாலும், காங்கிரஸின் வெற்றிக்கு உறுதியாகப் பாடுபடுவோம். நமக்கு இப்போது கிடைத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்போல, தமிழக வரலாற்றிலேயே ஒரு தலைவர் இதுவரை கிடைத்தது இல்லை” என்று, டன் கணக்கில் ஐஸ் மழை பொழிந்தார். இவர் வாசன் அணியைச் சேர்ந்தவர்.
அடுத்து மைக் பிடித்த ஞானதேசிகன் பேச்சில் மாணவர்கள் தாக்குதல் நடத்திய எஃபெக்ட் கண்கூடாகத் தெரிந்தது. ”படிப்பில் கவனம் செலுத்தாமல் பெற்றோருக்குத் துரோகம் செய்துகொண்டு, தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிற செயலில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.
அவர்களைத் தூண்டிவிடுபவர்கள், வாழ்நாள் முழுவதும் அவர்களின் கை பிடித்து வரப்போகிறவர்கள் அல்ல. அதே நேரத்தில், அவர்களின் உணர்ச்சிகளை நாங்கள் மதிக்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்னையில் ஒன்றும் அறியாத அப்பாவித் தமிழனுடைய உயிர்ப்பலி என்பது மனிதாபிமானம் உள்ள எவ​ராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவேதான் ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், இந்தியா பல திருத்தங்களைக் கொண்டுவந்தது. எதிர்த்து வாக்களித்தது” என்ற ஞானதேசிகன், எதற்காக கூட்டம் நடத்தப்படுகிறது என்பதை மறந்துவிட்டார் போலும்.
மாணவர் அமைப்புகளின் எதிர்ப்பை சம்பாதித்த காங்கிரஸ், நாடாளுமன்றத் தேர்தலில் சாதிக்குமா… சறுக்கிவிழுமா?
congress1
congress2

Geen opmerkingen:

Een reactie posten