தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 maart 2013

அடுத்தது "அனைத்துலக விசாரணைப் பொறிமுறையே" - உறுதிப்படுத்தினார் பிளேக் !


போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து சிறிலங்கா சுதந்திரமான, நம்பகமான விசாரணைகளை நடத்தத் தவறினால், அனைத்துலக பொறிமுறை ஒன்றை உருவாக்க அனைத்துலக சமூகம் வலியுறுத்தும் என்று அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபர்ட் ஓ பிளேக் நேற்று தெரிவித்துள்ளார். 

பிபிசிக்கு இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், 

“தற்போதைய ஜெனிவா தீர்மானம் ஒரு சுதந்திரமான, நம்பகமான விசாரணையை வலியுறுத்துகிறது. இந்த விடயத்தில் சிறிலங்கா அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்குமென்று எதிர்பார்க்கிறோம். சிறிலங்கா அவ்வாறு செய்ய விரும்பாவிட்டாலோ அல்லது அதனால் செய்ய முடியாமல் போனாலோ, அனைத்துலக சமூகம் ஒரு அனைத்துலகப் பொறிமுறையை செயற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தும். சொந்தமான, சுதந்திரமான, நம்பகமான விசாரணையை தம்மால் நடத்த முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டிய அழுத்தம் இப்போது சிறிலங்கா மீது இருக்கிறது. மனிதஉரிமைகள் என்பதைவிட அமெரிக்காவுக்கு இந்த தீர்மானத்தை கொண்டு வந்ததில் உள்நோக்கம் இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ள குற்றச்சாட்டு தவறானது. 

சிறிலங்கா தீவில் அமைதியையும், நல்லிணக்கத்தையும், பொறுப்புக் கூறலையும் கொண்டு வருவதுதான் எமது நோக்கம். சிறிலங்கா மக்களுடனான எமது உறவை தொடர்ச்சியாக கட்டியெழுப்புவதும் அதில் அடங்கும். 
அதனை விட எமக்கு வேறு எந்த விதமான நோக்கமும் கிடையாது. அந்தப் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் குறித்து எமக்கு அக்கறை, ஆர்வம் உள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, கடற்போக்குவரத்து பாதுகாப்பு, அதுபோன்ற பல விடயங்கள் குறித்தும் அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு அக்கறை உள்ளது. இந்தத் தீர்மானத்தின் மூலம் சிறிலங்காவைப் பிளவுபடுத்த அமெரிக்கா உட்பட அனைத்துலக சமூகம், முயற்சிப்பதாக சிறிலங்கா அரசாங்க தரப்பு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது. 

அமெரிக்காவும், அனைத்துலக சமூகமும் சிறிலங்காவை மீண்டும் ஒன்றுபடுத்தவே விரும்புவதாக நான் நம்புகிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4757

Geen opmerkingen:

Een reactie posten