எந்த விசாரணைக்கும் தான் தயார் என்று சரத் பொன்சேகா கூறினாலும், போரின் கடைசி வாரத்தில் அவர் சீனாவில் தங்கியிருந்தது, குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் தப்பித்துக் கொள்வதற்கு கூடுதல் வாய்ப்புகளை அளிக்கலாம்.
எனவே தான், அரசாங்கம் சரத் பொன்சேகாவின் பேச்சை நம்பி, எந்த வெளிப்படையான விசாரணைகளுக்கும் முகம் கொடுக்கத் தயாராக இல்லை. இப்போது கூட அவர், வெளிப்படையான விசாரணைக்கு இணங்குமாறு கூறி, அரசாங்கத்தைப் பொறிக்குள் தள்ளிவிட முனைகிறாரா என்ற சந்தேகம் அரசதரப்பிடம் உள்ளது
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, போர்க்குற்றங்கள் எதுவும் நிகழவில்லை, என்றும், அதுதொடர்பான எந்த விசாரணைக்கும் அரசாங்கம் பயப்படத் தேவையில்லை என்றும் உசுப்பேற்றி விட்டுள்ளார் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா. போர்க்குற்றங்களை மறுப்பதை விட, வெளிப்படையான விசாரணை ஒன்றுக்கு முகம் கொடுப்பதை அவர் வரவேற்பதாகவே தெரிகிறது. ஆனால், அதை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாக இல்லை.
ஏனென்றால், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து வெளியான எல்லாப் படங்களையும் வீடியோக்களையும் பொய்யானது போலியானது என்று உறுதிப்படுத்த முடியாது என்பது அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரியும். படங்கள் பொய்யானவை, சோடிக்கப்பட்டவை என்று மறுப்பறிக்கை வெளியிடுவது சுலபமானது. அதை நிரூபிப்பது மிகமிகக் கடினமானது. சரத் பொன்சேகா சொல்வதை நம்பி, வெளிப்படையான விசாரணைக்கு முகம் கொடுப்பது எந்தளவுக்கு ஆபத்தானது என்பதை அரசாங்கம் நன்றாகவே அறியும்.
இப்போது கூட அவர், வெளிப்படையான விசாரணைக்கு இணங்குமாறு கூறி, அரசாங்கத்தைப் பொறிக்குள் தள்ளிவிட முனைகிறாரா என்ற சந்தேகம் அரசதரப்பிடம் உள்ளது. அதுமட்டுமன்றி, பாலச்சந்திரனை இராணுவத்தினர் கொல்லவில்லை என்று அவர் கூறியுள்ளதுடன், சனல்- 4 வெளியிட்ட பாலச்சந்திரனின் படத்தில் காணப்படும் இராணுவச் சீருடை இலங்கை இராணுவத்தினர் அணிவதை ஒத்தது அல்ல என்றும் இந்திய இராணுவ சீருடையை ஒத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகள் கடைசி நேரத்தில் இந்திய இராணுவத்தினருடைய சீருடையை அணிந்து போரிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இராணுவப் பதுங்குகுழி ஒருபோதும் சுத்தமாக இருக்காது என்பதால், அது தமது படையினருடையவை அல்ல என்றும் அவர் வாதிட்டுள்ளார். ஆனால் சரத் பொன்சேகா குறிப்பிட்டது போல, இந்திய இராணுவ சீருடையுடன் புலிகள் போரிட்ட விவகாரம் இந்த நான்கு ஆண்டுகளில் முன்னேப்போதும் வெளிவரவேயில்லை.
புலிகள் சீருடை அணியாமல் சிவில் உடையில் போரிட்டதாகவே இராணுவத்தரப்பும் அரசாங்கத் தரப்பும் கூறியிருந்தன. இதனால் புலிகளையும் பொதுமக்களையும் பிரித்து அறிவதில் சிக்கல் இருந்ததாக அரசாங்கமும், சரத் பொன்சேகாவும் கூட முன்னர் கூறியது நினைவில் இருக்கலாம். அத்துடன் படையினரால் கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான புலிகளின் சடலங்களில் இந்திய இராணுவ சீருடை காணப்பட்டிருக்கவும் இல்லை. அதுமட்டுமல்லாமல், இன்னொரு சர்ச்சைக்கும் சரத் பொன்சேகா வித்திட்டுள்ளார்.
அதாவது,
இதுவரை, தலைவர் பிரபாகரன் அவர்களின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றே அரசாங்கத் தரப்பு கூறிவந்துள்ளது. ஆனால் திடீரென சரத் பொன்சேகா, அவர்களின் உடல்கள் பிரபாகரன் கொல்லப்பட்ட மறுநாள் அதாவது மே 20ம் திகதி நந்திக்கடல் பகுதியில்- தலையில் சுடப்பட்ட காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதாக கடந்தவாரம் வெளிநாட்டு செய்தியாளர்கள் சங்கத்தில் நடந்த சந்திப்பில் கூறியுள்ளார்.
150 புலிகளின் உடல்களுடன் அவற்றையும் மீட்டதாக சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள தகவல், இந்த நான்கு ஆண்டுகளில் வெளியே கூறப்படாத ஒரு இரகசியம் . அவ்வாறாயின் இந்த உண்மையை சரத் பொன்சேகாவோ அரசாங்கமோ ஏன் இதுவரை வெளிப்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகிறது. சரத் போன்சேகா வெளியிட்டுள்ள இந்தத் தகவல் ஒன்றே, போரின் போது நடந்த சம்பவங்கள் குறித்த பல உண்மைகள் இன்னமும் வெளிவராதுள்ளன என்பதற்கு சாட்சியாக உள்ளது.
இந்தநிலையில், நம்பகமான விசாரணை ஒன்றின் மூலம் உண்மைகளைக் கண்டறிய இனிமேலும் தவறினால், இன்னும் பல இரகசியங்கள் வெளிவருவதுடன் மட்டும் நின்று விடாது. அடுத்தடுத்த கட்டங்களில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை என்ற தீர்மானம் கூட இலங்கையின் கழுத்தை நெரிக்கலாம்.
மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மை கண்டறியும் விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதை, கடந்தவாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையை வலியுறுத்தியுள்ளது. முன்னதாக இந்த உண்மை கண்டறியும் பொறிமுறை, சர்வதேசத் தலையீட்டை வலியுறுத்தியதாக அமைக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் அது வலுவிழந்து உள்நாட்டுப் பொறிமுறையாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள போதிலும், இதனை ஏற்று நடக்க வேண்டிய கட்டாயம் ஒன்று உருவாக்கப்படும்.
கடந்த ஆண்டும் இது போன்று தான், இலங்கை அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிப்பதாக பகிரங்க அறிக்கையெல்லாம் விடுத்தது. ஆனால், அந்தத் தீர்மானத்துக்கு அமைய, சில வேலைத்திட்டங்களையேனும் செய்ய வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டது. குறிப்பாக, 2012 மார்ச் தீர்மானத்துக்குப் பின்னர் அமெரிக்கா கொடுத்த அழுத்தங்களின் பின்னர் தான் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய செயற்திட்டத்தை இலங்கை வகுத்தது.
அதைவிட, சில குறிப்பிட்ட விடயங்களில் சர்வதேச சமூகம் இலங்கை மீது திருப்தியை வெளியிட்டுள்ளது என்றால், அதற்கும் காரணம் அந்தத் தீர்மானம் தான். ஜெனிவாவில் 2012இல் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தத் தவறியுள்ள போதிலும், அதனை முற்றிலும் நிராகரித்து விட்டதாகக் கூறமுடியாது. அதுபோலவே தான், இம்முறை நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையும் இலங்கை அரசாங்கம் முற்றிலும் உதாசீனப்படுத்த முடியாது. ஏதோ ஒரு கட்டத்தில் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்ட சில விடயங்களை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் எழும் என்பதில் சந்தேகமில்லை.
ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஒரு சில மணிநேரங்களுக்குள், இலங்கை தனது பொறுப்புகளை தட்டிக்கழிக்காமல் நிறைவேற்ற வேண்டும் என்று, அழுத்திப் பிடிக்கத் தொடங்கி விட்டார் அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி. இதன் மூலம், ஹிலாரி கிளின்டன் காலத்து அணுகுமுறையில் இருந்து தான் மாறப் போவதில்லை என்பதை அவர் முதல்முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஒரு சில மணிநேரங்களுக்குள், இலங்கை தனது பொறுப்புகளை தட்டிக்கழிக்காமல் நிறைவேற்ற வேண்டும் என்று, அழுத்திப் பிடிக்கத் தொடங்கி விட்டார் அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி. இதன் மூலம், ஹிலாரி கிளின்டன் காலத்து அணுகுமுறையில் இருந்து தான் மாறப் போவதில்லை என்பதை அவர் முதல்முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக பொறுப்புக்கூறுதல் விவகாரத்தில் இலங்கை உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது என்பதையே ஜெனிவா தீர்மானம் உணர்த்தி நிற்கிறது. ஏனென்றால், இந்தியா கூட, உலகம் ஏற்கக்கூடிய நம்பகமான சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரும் நிலைக்கு வந்துள்ளது.
இது, பொறுப்புக்கூறல் விவகாரத்தில் இலங்கையின் நிலை சர்வதேச அரங்கில் பலவீனப்பட்டு விட்டது என்பதை வெளிக்காட்டுகிறது. முன்னர் ஜெனிவாவிலும், கடைசியாக பிரான்சிலும் தூதுவராகப் பணியாற்றிய இலங்கையின் மூத்த இராஜதந்திரியான தயான் ஜெயதிலக, இலங்கை சர்வதேச ஆதரவை இழந்து வருவதாக குறிப்பிடுள்ளார். கடந்தமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், இது இலங்கைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்று இவர் கூறிய கருத்து, இலங்கை அரசாங்கத்தை கடுமையாக வெறுப்படைய வைத்தது.
அதன் விளைவாகவே அவர் இராஜதந்திர சேவையில் இருந்து ஒதுக்கி வைக்கப்படும் நிலை ஏற்பட்டது. கடந்த முறை இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிராக 15 நாடுகள் வாக்களித்த போதிலும், இம்முறை அது 13ஆக குறைந்துள்ளதை தயான் ஜெயதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்த மற்றும் வாக்களிக்காமம் தவிர்த்த, பாகிஸ்தான், ஜப்பான் போன்ற நாடுகள், இலங்கைக்கு இன்னமும் கால அவகாசம் வழங்குமாறு தான் கோரியுள்ளனவே தவிர, இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய் என்று நிராகரிக்கவில்லை.
தற்போதைய தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்துகிறதா என்பது குறித்து, 24வது அமர்வில் அதாவது வரும் செப்ரெம்பரில் ஐ,நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வாய்மொழியிலான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். அதையடுத்து, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 25வது கூட்டத்தொடரில் முழுமையான அறிக்கையை அவர் சமர்ப்பிக்க வேண்டும் என்று தீர்மானம் கோரியுள்ளது. எனவே, ஜெனிவா காய்ச்சல் என்பது இலங்கை அரசாங்கத்தை விட்டு இப்போதைக்குப் போகப் போவதில்லை. அது சீசனுக்கு சீசன் அரசாங்கத்தை அழுத்திப் பிடிக்கப் போகிறது.
எனவே,
அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தை இலங்கை முற்றிலுமாகப் புறக்கணித்து நடக்க முடியாது. குறிப்பாக, நம்பகமான சுதந்திரமான விசாரணைப் பொறிமுறை ஒன்றை இலங்கை உருவாக்க வேண்டிய கட்டாய நிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்த கடந்த ஆண்டு இராணுவ விசாரணை நீதிமன்றத்தை அரசாங்கம் உருவாக்கியது. அந்த விசாரணை நீதிமன்றம் அளித்த அறிக்கையை யாரும் கையில் எடுக்கக் கூட இல்லை. அதுபோன்ற ஒரு உள்ளக விசாரணைப் பொறிமுறையை மீண்டும் உருவாக்க அரசாங்கம் முற்படலாம். எனினும் அதனை உலகம் ஏற்றுக் கொள்ளாது.
எவ்வாறாயினும், இதுவரை சுதந்திரமான நம்பகமான விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க இலங்கை அரசாங்கம் இணங்கியதில்லை. சுதந்திரமான வெளியக விசாரணைப் பொறிமுறையை அறவே நிராகரித்த இலங்கை, உள்ளக விசாரணையை நம்பகமான முறையில் மேற்கொண்டிருந்தால், ஓரளவுக்கேனும் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்திருக்கலாம். குறிப்பாக, நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தது தான், சர்வதேச அரங்கில் இலங்கை இன்று காப்பாற்றப்படுவதற்கு அடிப்படைக் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
நல்லிணக்க ஆணைக்குழு முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளாது போனாலும், பல முக்கிய விடயங்கள் குறித்த அது கவனத்தில் எடுக்காதது சர்வதேச சமூகத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்திய போதிலும், இலங்கையில் அமைதியை உருவாக்குவதற்கான குறைந்தபட்ச அணுகுமுறையாக அது எடுத்துக் கொள்ளப்பட்டது. அதாவது இலங்கையை அதன் கையாலேயே அடிப்பதற்குத் தான், சர்வதேச சமூகம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. இல்லாவிட்டால், இலங்கையைத் தமது பிடிக்குள் வைத்திருக்க முடியாது என்பது சர்வதேசத்தினது கருத்து. அதுபோலவே, குறைந்தபட்சம் நம்பகமான ஒரு விசாரணைப் பொறிமுறையையேனும் இலங்கை இம்முறை உருவாக்க முற்படலாம்.
ஏனென்றால் முற்றிலும் இந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்படுவது, இலங்கைக்கான சர்வதேச ஆதரவை முற்றிலுமே இல்லாமல் செய்து விடும். அதைவிட வலுவான தீர்மானம் அடுத்தடுத்த அமர்வுகளில் கொண்டு வரப்பட்டு, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஜெனிவா தீர்மானத்தை இலங்கை நிராகரித்தாலும், வெள்ளம் வருமுன்னர் அணைகட்டவே, இலங்கை முற்படக் கூடும்.
அது பலமான அணையா – பலவீனமான அணையா என்பதை இலங்கையே தீர்மானிக்க வேண்டும்
- சுபத்ரா -
Geen opmerkingen:
Een reactie posten