இலங்கையில் தமிழ் மக்களின் மீது தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் தொடர்வதால் அங்கு விசேட கண்காணிப்பாளர் ஒருவர் அனுப்பப்பட்டு உண்மை நிலைவரம் கண்டறியப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரின்போது அரச சார்பற்ற அமைப்புக்கள் வலியுறுத்தின.
இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கடும்போக்கை கடைப்பிடிக்க வேண்டுமெனவும் அவை கோரியுள்ளன.
அரச சார்பற்ற பிரதிநிதிகள் நேற்று மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டன.
இந்தியாவில் இயங்கும் பசுமைத் தாயகம் அமைப்பு, சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு, சர்வதேச கல்வி அபிவிருத்தி ஆகிய அமைப்புக்களே இலங்கை விடயத்தை முக்கியமாக சுட்டிக்காட்டிப் பேசியுள்ளன.
சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழுவானது இலங்கையில் நீதித்துறையில் உள்ள அரசியல் தலையீடு குறித்து கடும் கண்டனத்தை வெளியிட்டது.
பிரதம நீதியரசர் பதவி நீக்கம் கையாளப்பட்ட விதம், சட்டத்தரணிகள் மீதான தாக்குதல், சர்வதேச சட்டங்களை மீறியமை தொடர்பில் குறித்த விசாரணைகளை நடத்துவது சர்வதேச சமூகத்தின் பொறுப்பென்றும், இதற்காக விசேட விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டுமெனவும் ஜூரர்கள் ஆணைக்குழு வலியுறுத்தி பேசியது.
பசுமைத்தாயகம் அமைப்பின் பிரதிநிதி பேசும்போது ,இலங்கையின் இறுதிப்போரில் சுமார் 70 ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்றை விசாரணை செய்ய சர்வதேச விசாரணை அவசியம் எனவும் குறிப்பிட்டது.
சர்வதேச கல்வி அபிவிருத்தி அமையத்தின் சார்பில் பேசிய கரன் தாப்பர் அம்மையார், பயங்கரவாதம் என்கிற பெயரில் இலங்கையில் தமிழ் மக்களின் மீது அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் தொடர்வதாகவும் உடனடியாக இலங்கைக்கு விசேட கண்காணிப்பாளர் ஒருவர் அனுப்பப்பட்டு உண்மை நிலைவரம் கண்டறியப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten