இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச்சபைக்கான இணைப்பாளர் சுகிந்தன் முருகையா அவர்கள் கொழும்பில் இருந்து வெளிவரும் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
செவ்வியின் முழுவிபரம்:
கேள்வி : ஐ.நா மனித உரிமைச் சபையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளது ?
பதில் :எமது இலக்கினை நோக்கிய இராஜத்திர செயல்வழிப்பாதையும் முக்கிய சந்தியே ஐ.நா மனித உரிமைச் சபை.
ஐ.நா மனித உரிமைச்சபை என்பது ஓர் சர்வதேச இராஜதந்திரக் களம். இதில் இன்று சிறிலங்கா முக்கிய பேசு பொருளாக மாறியுள்ள நிலையில் இலங்கைத்தீனை மையப்படுத்திய அனைவரது பார்வையும் ஜெனீவா நோக்கியே உள்ளது.
இந்நிலையில சிறிலங்கா பேரினவாத்தினை தனிமைப்படுத்தவும் – அம்பலப்படுத்தவும் ஓர் சர்வதேச களமாக ஜெனீவாவினை நாம் நோக்குகின்றோம்.
இதில் சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான ஓர் அனைத்துலக விசாரணையினை மற்றும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக்கு ஓர் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஆகிய விடயங்களே எங்களது கோரிக்கையாக கொண்டு எமது செயற்பாடுகள் அமைந்துள்ளது.
இராஜதந்திர மட்டத்தில் தொடர்சியான உயர் சந்திப்புக்கள் – உடனடி அனைத்துலக விசாரணை வேண்டும் எனும் கையேடொன்றிறனை ஐ.நா மனித உரிமைச் சபை வளாகத்துக்குள் வெளியிட்டு அதனை பல்வேறு உயர்மட்டங்களின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றோம்.
இதேவேளை இந்த இராஜதந்திரச் செயற்பாடுகளுக்கு மக்களையும் இணைத்துக் கொள்ளும் முகமாக ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழ் மக்கள் அந்தந்த நாட்டு வெளிவிவகார அமைச்சுக்களுக்கு அனுப்பி வைக்கும் வண்ணம் தபால் அட்டையொன்றினை நாம் வெளியிட்டு வைத்துள்ளோம். இந்த தபால் அட்டையும் சிறிலங்கா தொடர்பில் உடனடிய சர்வதேச விசாரணையினையே வலியுறுத்துக்கின்றது.
கேள்வி : ஜெனீவா வந்த தமிழர் தாயக அரசியல் பிரமுகர்களது செயற்பாடுகளை எவ்வாறு பார்கின்றீர்கள் ?
பதில் : முழு இலங்கைத்தீவினையும் தற்போது தன் ஆளுகைக்குள் வைத்திருக்கின்ற சிங்கள ஆட்சியாளர்களின் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜெனீவா வந்திருந்த தமிழர் தாயக அரசியல் தலைவர்களது செயற்பாடுகளை முக்கிய விடயமாகவே நாங்கள் காண்கின்றோம்.
கேள்வி : ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்திய இராஜதந்திர உயர்மட்ட சந்திப்புகள் ஊடாக சர்வதேசத்தின் பார்வை எவ்வாறு உள்ளது என்பதனை உணர்தீர்கள் ?
பதில் : போர் இடம்பெற்றிருந்த காலத்தில் தமிழர் தரப்பின் மீது குற்றங்கண்ட சர்வதேசத்தின் பார்வையில் – போருக்கு பிந்தியாக இன்றைய காலத்தில் குற்றவாளியாக சிறிலங்கா நிற்கின்றது.
தமிழர்கள் மீது சிறிலங்கா நடத்திய கொடிய போரின் சாட்சியங்கள் காட்சிகளாக வெளிவந்து கொண்டிருப்பதனை சர்வதேசம் தட்டிக்களித்து விட முடியாத நிலையில் உள்ளது.
இருப்பினும் நலன்சார் சர்வதேச அரசுகளின் ஒட்டத்தில் எங்களது நலன்களை வென்றெடுப்பதிலேயே எங்களின் அதாவது தமிழர் தரப்பின் இராஜதந்திரச் செயற்பாடுகள் உள்ளன.
தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தினை ஓர் பயங்கரவாதமாக சர்வதேச அரங்கில் சித்திரித்து சிறிலங்கா.
2001 இரட்டைக் கோபுரத் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னராக சர்வதேசத்தின் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் பிரகடனத்தினை தனக்கு சாதகமாக பயன்படுத்தியிருந்தது சிங்கள அரசு.
இன்று அதே சிங்கள அரசினை போர்குற்றவாளியாக சர்வதேசம் காண்கின்ற நிலையில் அதனை சாதமாக பயன்படுத்துவதே தமிழர்களின் இராஜதந்திரப் போராட்டம்.
கேள்வி : ஐ.நா மனித உரிமைச் சபையில் இந்தியாவின் நிலைப்பாடு சகலதரப்பினாலும் முக்கியமானதாக நோக்கப்படுகின்றது. உங்களின் நிலைப்பாடு என்ன ?
சமீபத்தில் எமது பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இந்தியா தொடர்பில் வெளிப்படுத்திய கருத்துக்களை நான் இங்கு மீள நினைவுபடுத்துவது இந்தக் கேள்விக்கான பதிலை வெளிப்படுத்தும் என நினைக்கின்றேன்.
‘வரலாற்றுரீதியாகப் பார்க்கும்போது இந்தியாவை ஈழத் தமிழர்கள் நட்பு நாடாகப் பார்த்தார்களே அன்றி, சிங்கள அரசும் சிங்கள மக்களும் அவ்வாறு பார்க்கவில்லை. சிங்களர்கள் இந்தியாவை ஒரு ஆக்கிரமிப்பு நாடாகவே பார்க்கிறார்கள்.
ஈழத் தமிழர்கள் மீதான சிங்களர்களின் வெறுப்பில் ஒரு பாதி இந்திய வெறுப்பு உணர்வும் உண்டு என்பதை இந்தியா நினைத்துப் பார்க்க வேண்டும். இந்தியா சிறீலங்கா அரசைக் கையாள்வதன் ஊடாக, அந்தத் தீவைக் கையாளும் அணுகுமுறையைக் கொண்டுள்ளது.
சிறீலங்காவை அரவணைத்துக் காரியம் பார்க்கலாம் என்று இந்தியா நினைக்கக்கூடும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவின் உறுதியான ஆதரவு சிறீலங்காவுக்குத் தேவைப்பட்டது.
இதனால், இந்தியாவிடம் பணிவதுபோல சிறீலங்கா தலைவர்கள் நடித்தனர். இப்போது இந்தத் தேவை சிறீலங்காவுக்கு இல்லை. இதனால், சிறீலங்காவைக் கையாள்வது இந்தியாவுக்கு இலகுவாக இருக்காது. சிங்களர்களின் இந்திய வெறுப்பு உணர்வை இன்னமும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துகொள்ளவில்லை!’
கேள்வி : தமிழர் பிரச்சினை குறித்து சிறிலங்கா அரசுடன் பேசுவீர்களா ?
பலத்தின் அடிப்படையில்தான யாவுமே தீர்மானிக்கப்படுகின்றன. முள்ளிவாய்க்காலுடன் பலமான ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் பலமான இன்னுமொரு ஆயுதமாக உலகத் தமிழர்களாக உலகப்பரப்பெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் பலமாகவுள்ளனர். இது அரசியல் -சமூக -பொருளாதார-வர்த்தக- கல்வி-இராஜந்திர என பல்வேறு களங்களில் இது விரிந்து வருகின்றது.
மேலும் தாயகம் – தேசியம் – தன்னாட்சிஉரிமை எனும் எங்களின் உயர்ந்த இலட்சியத்தினை வென்றடைவதற்கான எங்களது தெளிவான அரசியல் நிகழ்ச்சி நிரலில் சிறிலங்காவுடன் இனநல்லிணக்கம் – அபிவிரித்தி பற்றி பேசுவதென்ற திட்டம் இல்லை.
தமிர்கள் மீதான மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை – போர்குற்றங்கள் – மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையொன்றுக்கு சிறிலங்கா பொறுப்பு கூறட்டும்.
கேள்வி : நிறைவாக சிறிலங்காவில் ஓர் ஆட்சி மாற்றம் ஒன்றினைக் கொண்டுவருவதற்காகவே ஐ.நா பிரரேரணைகள் வடிவில் மேற்குலகம் அழுத்தங்களை கொடுக்கின்றதென் சிங்கள அரசியல் தரப்பின் கருத்தினை எவ்வாறு நோக்குகின்றீர்கள் ?
ஆட்சி மாற்றம் என்பது இனப்படுகொலைக்கு மருந்தாகாது.
ஆட்சி மாற்றம் என்பது எங்களின் எதிர்பார்பும் அல்ல. ஏன்எனில் கடந்தகாலத்திலும் சரி எதிர்காலத்திலும் சரி சிங்கள பௌத்த பேரினவாதினை கட்டிக்காத்தவாறே ஆட்சிக்கதிரையில் இருந்தவர்கள் தமிழர்கள் திட்டமிட்ட வகையில் இனப்படுகொலை செய்தார்கள்.
இதில் இங்கு இடது வலதென்று வித்தியாசத்தினை சிங்கள ஆட்சியாளர்களிடையே வித்தியாசம் காண முடியாது.
http://www.jvpnews.com/srilanka/19692.html
Geen opmerkingen:
Een reactie posten