தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 maart 2013

சிங்களவர்கள் குறித்தே இந்தியா கவலைப்பட வேண்டும்! இலங்கை தூதுவரின் விஷமப் பிரசாரம்


தமிழர்கள் இலங்கையில் தாக்கப்படின் இந்திய அரசே முழுப்பொறுப்பு! சிங்களக் கடும்போக்கு அமைப்புகள் எச்சரிக்கை
[ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 07:50.22 AM GMT ]
இலங்கை எதிர்ப்புப் போராட்டங்கள், பௌத்த பிக்குகள் மீதான தாக்குதல்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறி வருவதன் எதிரொலியாக எதிர்காலத்தில் இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு எதிராக ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கு இந்திய மத்திய அரசே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்று சிங்கள கடும்போக்கு அமைப்புகள் நேற்று மிரட்டல் பாணியில் எச்சரிக்கை விடுத்தன.
இறைமையுள்ள நாடான இலங்கையைத் தமது தலையாட்டி பொம்மையாக்க தமிழ்நாடு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எம்மால் ஒருபோதும் அனுமதிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாது எனத் தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சிங்கள ராவய அமைப்பின் தலைவருமான அக்மீமன தயாரத்ன தேரர், இவ்விவகாரம் இருநாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலும், இலங்கைக்கு எதிராக தமிழ்நாட்டில் தொடரும் எதிர்ப்புகள் குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
இந்தியாவின் தமிழ்நாட்டுக்குச் செல்லும் இலங்கையின் பௌத்த பிக்குகளும், பௌத்தர்களும் தாக்கப்படுகின்றனர். அதுமட்டுமல்லாது, இலங்கையிலுள்ள சிங்களவர்கள் எவரும் தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்றும் அவர்கள் அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.
இதை எப்படி நாம் ஏற்றுக்கொள்வது? புத்தர் பிறந்த புனித பூமிதான் இந்தியா. அங்கு சென்றுவருவதற்கு பௌத்தர்களுக்கு உரிமை உள்ளது. அதுமட்டுமல்லாது, இந்தியா என்பது எமது அயல் நட்பு நாடு.
வரலாற்றுக் காலம் முதல் உறவுகளைப் பேணும் நாடு. இந்தியாவுக்கு ஒரு தாக்கம் ஏற்பட்டால் அது எமக்கும் தாக்கத்தைச் செலுத்தும்.
தமிழ்நாட்டில் இலங்கைக்கு எதிராக எழுகின்ற எதிர்ப்புகளால் இலங்கை இந்திய உறவில்தான் பாதிப்பு ஏற்படும். இதற்கு நாம் இடமளிக்க முடியாது. இலங்கை என்பது ஓர் இறைமையுள்ள நாடு.
எமக்கேற்ற வகையில்தான் நாம் இங்கு செயற்படவேண்டும். இருப்பினும், தமது ஏவல்களுக்குக் கட்டுப்பட்டுச் செயற்படும் தலையாட்டி பொம்மையாக எம்மை மாற்ற தமிழ்நாடு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏனெனில், யுத்தத்தின் பின்னர் இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் அனைத்து சிறப்புரிமைகளுடனும் வாழ்கின்றனர். நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஐக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
எந்த மக்களையும் பாரபட்சத்துடன் அரசு நடத்தவில்லை. இவ்வாறான நிலையில், தமிழ்நாட்டிலுள்ளவர்கள் ஏன் இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்?
இலங்கையின் பௌத்த பிக்குகளும், பௌத்தர்களும் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது தொடர்வதால், எதிர்காலத்தில் இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கட்டவிழ்க்கப்பட்டால் அதற்கு இந்திய மத்திய அரசே முழுப் பொறுப்பேற்கவேண்டும்.
எனவே, எதிர்கால நலனையும், இலங்கை இந்திய நட்புறவையும கருத்திற்கொண்டு இலங்கைக்கு எதிரான தமிழ்நாட்டின் எதிர்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அக்மீமன தயாரத்ன தேரர்.
இதேவேளை, இது குறித்து சிங்கள அமைப்புகளின் ஒன்றியத்தின் உறுப்பினரும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவருமான கலாநிதி குணதாஸ அமரசேகர தெரிவித்தவை வருமாறு:
இலங்கைக்கு எதிராக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் திட்டமிடப்பட்ட சூழ்ச்சியாகும். இலங்கையிலுள்ள தமிழர்கள் நலன் குறித்து தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் துளியளவும் அக்கறை இல்லை என்பதே அவர்களது நடவடிக்கைகளினூடாக வெளிப்படுகின்றது.
இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் இங்கு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் அங்கு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். எனவே, இதற்கு இந்திய மத்திய அரசு இடமளிக்கக்கூடாது.
தமிழ்நாட்டின் இலங்கை எதிர்ப்பு நடவடிக்கைகளை அது தடுத்துநிறுத்தவேண்டும் என்றார் அவர்.

http://www.tamilwin.net/show-RUmryDRbNZjo0.html


சிங்களவர்கள் குறித்தே இந்தியா கவலைப்பட வேண்டும்! இலங்கை தூதுவரின் விஷமப் பிரசாரம்
இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஒடிசா மற்றும் வட இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைப்பட வேண்டும். இவ்வாறு வடநாட்டுத் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் இலங்கைத் தூவர் பிரசாத் காரியவசம் இரகசிய பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். 
ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கடந்த 21-ந் தேதி இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதற்கு முன்னதாக டெல்லியில் உள்ள இலங்கை தூதர் பிரசாத் காரியவசம் இலங்கைக்கு சாதகமான ஆதரவை இந்திய ஊடகங்கள் மூலம் பெறும் முயற்சியில் ஈடுபட்டார்.
சிங்களவர்கள் வட இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள்  என குறிப்பிட்டு அனுப்பிய ஈமெயில் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த ஈமெயில் தகவலில் 12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது.
ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஒடிசா மற்றும் வடஇந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிரசாத் காரியவசத்தின் ஈமெயில் முகவரியில் இருந்து இலங்கையை தலைமையிடமாக கொண்ட தனியார் ஊடக மக்கள் தொடர்பு நிறுவனத்துக்கு கடந்த 19-ந்தேதி இந்த ஈமெயில் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நிறுவனம் மூலம் இந்த ஈமெயில் டெல்லியில் உள்ள ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வடநாட்டுத் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் பிரசாத் காரியவசம் இரகசிய பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இலங்கை தூதர் பிரசாத் காரியவசத்தின் விஷம பிரசார ஈமெயில் டெல்லியில் உள்ள ஊடகங்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாட்டில் தீவிர போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் பிரசாத் காரியவசத்தின் விஷம பிரசாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பணியாற்றும் வெளிநாட்டு தூதர்கள் உள்நாட்டு அரசியல் நடவடிக்கையில் பிரச்சினை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது.
அதையும் மீறி இலங்கை தூதர் பிரசாத் காரியவசம் இரகசிய பிரசாரத்தில் ஈடுபட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

http://www.tamilwin.net/show-RUmryDRbNZkx7.html

Geen opmerkingen:

Een reactie posten