[ விகடன் ]
அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த விக்ரம் என்ற இளைஞர், கூட்டம் முடிந்ததும் தன் உடலில் பெற்றோலை ஊற்றி, 'இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு அமைய வேண்டும். பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ராஜபக்சவுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்� என முழங்கியபடியே தீ மூட்டிக்கொண்டார்.
யாரும் அருகில் நெருங்க முடியாதபடி தீ கொளுந்துவிட்டு எரிந்தது. தண்ணீரை ஊற்றி, சாக்குப் பையைச் சுற்றித் தீயை அணைத்த போது, 80 சதவிகிதம் உடல் கருகி இருந்தது. துடித்தபடி இருந்த விக்ரமை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். சில மணி நேரங்களிலேயே அவரது துடிப்பு அடங்கிப்போனது.
வானகரம் அருகில் இருக்கும் விக்ரம் வீட்டுக்குச் சென்றோம். விக்ரமின் அம்மா தேவிக்கு ஆறுதல் சொல்லிப் பேசினோம். ''விக்ரமுக்கு அஞ்சு வயசு இருக்கும்போது அவங்க அப்பா இறந்துட்டாரு. பத்தாவது வரைக்கும் படிச்சான். அதுக்கப்புறம் குடும்ப சூழ்நிலையால் எலெக்ட்ரானிக் கடைக்கு வேலைக்குப் போயிட்டான்.
வீட்டை விட்டா வேலை, வேலையைவிட்டா வீடுன்னு இருப்பான். எந்த அரசியல் கட்சியிலயும் கிடையாது. இந்த மாதிரி உணர்வெல்லாம் அவனுக்குள்ள இருந்ததே எங்களுக்குத் தெரியாது. வீட்டுல அதைப் பத்தி யாருகிட்டயும் பேசினதே கிடையாது.
அன்றைக்கு இராத்திரி ஏழு மணிக்கு, நான் அவனுக்குப் போன் பண்ணி, மாத்திரை வாங்கிட்டு வரச் சொன்னேன். 'வெளியில இருக்கேம்மா.. அரை மணி நேரத்துல வர்றேன்�னு சொன்னான். மறுநாள் காலையில பொணமாத்தாய்யா வீட்டுக்கு வந்தான்...'' - தொடர்ந்துப் பேசமுடியாமல் கதறுகிறார்.
சம்பவ இடத்தில் இருந்த விக்ரமின் நண்பர்கள் சிலரிடம் பேசினோம். 'பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட படத்தைப் பார்த்ததில் இருந்து ரொம்பவே மனசு உடைஞ்சு பேசிட்டு இருந்தான். 'பச்சைக் குழந்தைன்னுகூட பார்க்காமக் கொன்னுட்டானுங்களே பாவிங்க...� என்று சொல்லி ஒரு நாள் அழவே ஆரம்பிச்சிட்டான்.
எங்களோட தமிழர் விடுதலை இயக்கத்தில் அவன் சேரலை. ஆனால் என்ன உதவி வேண்டுமானாலும் செய்யுறதா சொன்னான். அன்றைக்கு நடந்த கூட்டத்தை போட்டோ எடுக்கிறதுக்கு ஆகும் செலவை அவன் ஏத்துக்கிட்டான்.
கூட்டம் ஆரம்பிக்கும்போது எங்கேயோ கிளம்பிப் போனான். முடியுறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்புதான் வந்தான். கூட்டம் முடிந்ததும் நாங்க எல்லோரும் மேடையில இருந்த சேரை எடுத்துட்டு இருந்தோம். மேடைக்கு பின்னாடிப் போய் யாருக்கும் தெரியாம பெற்றோலை ஊத்திக்கிட்டு மேடைக்கு முன்பு வந்து தீ வெச்சுக்கிட்டான்.
அப்பக்கூட அது விக்ரம்னு எங்களுக்குத் தெரியாது. தீயை அணைச்சிட்டுப் போய் தூக்கியபோதுதான், 'நான்தாண்டா விக்ரம்�னு சொன்னான். 'ஏன்டா இப்படி செஞ்சே?�னு நாங்க பதறினோம். 'நீங்க எல்லாம் போராடி என்னத்தடா கிழிச்சீங்க.
இப்படி ஒரு அநீதியைத் தட்டிக்கேட்காத இந்த மானங்கெட்ட இந்தியாவுல எனக்கு இருக்கப் பிடிக்கலைடா�னு சொன்னான். அதுதான் அவன் கடைசியாப் பேசியது. அவனுக்குள்ள இப்படி ஒரு தீவிர உணர்வு இருந்தது எங்களுக்குத் தெரியாதுங்க'' என்று கலங்கினார்கள்.
விக்ரம் உயிர் பிரிந்த மறுநாள்...
சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவி கௌதமி, ஈழக் கொடூரத்துக்கு நீதி கேட்டு, தன் உயிரைத் தூக்குக்குப் பலி கொடுத்திருக்கிறார்.
வியாசர்பாடி அருகில் கல்யாணபுரத்தில் இருக்கிறது கௌதமியின் வீடு. அவரது அம்மா தேவி பேசும் மனநிலையில் இல்லை. அவரது அத்தை ஷைலஜா நம்மிடம் பேசினார். ''எத்திராஜ் காலேஜ்ல பி.எஸ்.சி. மேத்ஸ் முதல் வருஷம் படிச்சிட்டு இருந்தா.
இலங்கைப் பிரச்னைக்காக மாணவர்கள் போராட்டம் தொடங்கியதிலிருந்து வீட்ல அதைப் பத்தியே பேசிட்டு இருந்தா. பாலச்சந்திரன் போட்டோவைப் பார்த்து ரொம்பவும் கலங்கிட்டா. 'எல்லோரும் மெரீனாவுக்கு வாங்க... நாமும் போராட்டத்துல கலந்துக்கலாம்�னு எங்க தெருவுல ஒவ்வொரு வீடாப் போய்க் கூப்பிட்டா.
வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு அவளும் அவளோட பாட்டியும் பேப்பர் படிச்சுட்டு இருந்தாங்க.இலங்கைப் பிரச்னைக்காக யாரோ ஒரு தம்பி தீக்குளிச்சுட்டதா அந்த பேப்பர்ல செய்தி வந்திருந்தது. அதைப் பாட்டியிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கா.
மதியம் 2 மணிக்கு கரன்ட் கட்டானதும், அவங்க அம்மா கடைக்குக் கிளம்பிட்டாங்க. புழுக்கமா இருக்குன்னு பாட்டி வெளியில இருந்திருக்காங்க. அந்த நேரத்துல தூக்குல தொங்கிட்டா'' என்று சொன்னார். ''வயிற்று வலியால் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் சொல்கிறதே?'' என்று கேட்டபோது, ''அவளுக்கு அப்படி எதுவும் கிடையாதுங்க'' என்றார் வேதனையோடு.
இந்த வழக்கை விசாரிக்கும் வியாசர்பாடி காவல் நிலைய ஆய்வாளர் சங்கரிடம் பேசினோம். ''இறந்துபோன கௌதமி கடிதம் எதுவும் எழுதிவைக்கவில்லை. தற்கொலைக்கான காரணமோ, தடயமோ கிடைக்கவில்லை. கௌதமிக்கு வயிற்று வலி இருந்ததாக அவரது தந்தை சொன்னார்.
அதனால் நாங்கள் அப்படி வழக்குப் பதிவு செய்தோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்'' என்றார்.
ஈழப் பிரச்சினை தமிழர்களின் உணர்வோடு சம்பந்தப்பட்டது என்பதை உணர்த்தி இருக்கிறார்கள் இவர்கள் இருவரும்!
Geen opmerkingen:
Een reactie posten