தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 maart 2013

ஜெனீவாத் தீர்மானம் குறித்த கருத்துக்கள் தமிழர்கள் மத்தியில் குழம்பிய குட்டையாக உள்ளது: பொன்.செல்வராசா


தமிழக மாணவர் எழுச்சி, தமிழ் ஈழம் காணும் வரை ஓயாது!- சுவிசில் செந்தமிழன் சீமான் முழக்கம்
[ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 12:24.15 PM GMT ]
சிறிலங்காவைப் பகை நாடாக அறிவிக்குமாறு கோரும் தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்தார்.
சுவிஸ் நாட்டிற்கு முதற் தடவையாக வருகை தந்துள்ள செந்தமிழன் சீமான், “இருப்பாய் தமிழா நெருப்பாய்” என்ற எழுச்சி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுவிஸ், செலத்துண் மாநிலத்தில் நேற்று மாலை இந்நிகழ்வு நடைபெற்றது.
குறுகிய கால அழைப்பில் நூற்றுக் கணக்கான மக்கள் கலந்து கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சீமான் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக எழுச்சி உரை நிகழ்த்தினார்.
இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாணவர் எழுச்சி கணப்பொழுதில் உருவான ஒன்றல்ல. அதன் பின்னணியில் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் உழைப்பு உள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போது தமிழ் நாட்டு உறவுகளின் நெஞ்சங்களில் கொழுந்து விட்டு எரியும் தீ, தமிழீழம் என்ற இலட்சியத்தை எட்டும் வரை அணையாது ஒளிரும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கட்சியின் சட்ட ஆலோசகர் “தடா” சந்திரசேகர் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார். பேர்ண் நர்த்தனாலாய நடனப் பாடசாலை மாணவியரின் நடனம், செல்வி ரம்யா சிவானந்தராஜா அவர்களின் எழுச்சிப் பாடல் ஆகிய நிகழ்வுகளும் இடம் பெற்றன.
செந்தமிழன் சீமான் அவர்கள் ஆற்றிய உரையின் முழுமையான  ஒலி வடிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.net/show-RUmryDRcNZjuz.html

ஜெனீவாத் தீர்மானம் குறித்த கருத்துக்கள் தமிழர்கள் மத்தியில் குழம்பிய குட்டையாக உள்ளது: பொன்.செல்வராசா
[ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 12:48.26 PM GMT ]
ஜெனீவாவின் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுவரும் கருத்துகள் அடிப்படையில் தமிழ் சமூகம் குழம்பிய குட்டையாக இருக்கின்றது. எனினும் தமிழ் மக்கள் சென்றமுறையை விட இம்முறை வெற்றிவாய்ப்பிற்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உதவிச் செயலாளர், இலங்கை அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை தமிழ் மக்களுக்கு புத்துணர்வை அளிக்கக் கூடியதாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று காலை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் மண்முனை வடக்கு அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் எஸ்.வன்னித்தம்பி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இன்று சமகாலத்தில் பேசப்படுகின்ற ஒரு விடயம் ஜெனிவாத் தீர்மானம் என்று சொல்லலாம். இதையிட்டு பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. பலரும் பலவிதமாக பேசுகின்றார்கள். குழம்பிய குட்டையாக எமது சமூகம் இன்று இருக்கின்றது.
கடந்த 2012ம் ஆண்டு இந்தப் பேரவையின் தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்பதற்காகவே, அமெரிக்கா இந்தப் பிரேரணையை மீண்டுமொரு தடவை கொண்டு வந்திருக்கின்றது. அமெரிக்கா சென்ற முறை கொண்டுவந்த தீர்மானத்திற்கும் இந்தத் தடவை கொண்டு வந்த தீர்மானத்திற்கும் இடையில் எந்த வேறுபாடுகளுமில்லை என்பது ஒரு சாராரின் கருத்தாகும்.
ஆனால் இன்னொரு சாரார் சென்ற முறை கொண்டுவந்த பிரேரணையை விட இது கடுமையானதெனவும் இதை எமது சமூகம் விளங்கிக் கொள்ளவில்லை எனவும் இதில் நல்ல விடயங்கள் இருக்கின்றன என்றும் கூறுகின்றார்கள். சென்ற முறையை விட இரண்டு நாடுகள் கூடுதலாக ஆதரித்தும் இரண்டு நாடுகள் குறைவாக எதிர்த்தும் இருக்கின்றன. ஆகவே நாங்கள் நான்கு நாடுகளால் வெற்றி பெற்றிருக்கின்றோம் என்பதே உண்மையாகும்.
2012ம் ஆண்டிற்கும் 2013ம் ஆண்டிற்குமிடையில் சர்வதேச நாடுகளின் பார்வை எங்கள் மேல் இருக்கின்றது என்பதை நாங்கள் மட்டுமல்ல அரசாங்கமும் ஒத்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
2012ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அவர்கள் அந்தப் பிரேரணையில் முக்கியமாக ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகளையும் சிபாரிசுகளையும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத்தவறிவிட்டது. இம்முறையும் அதைத்தான் சொல்கின்றார்கள். சர்வதேசத்தால் எம்மை அசைக்க முடியாது என்று இலங்கை அரசு சொல்லியிருக்கின்றது.
ஆனால் இம்முறையும் அந்தக் கட்டளை நிறைவேற்றப்படாவிட்டால் சர்வதேசம் என்ன நடவடிக்கை எடுக்குமென்று இப்போதைக்கு சொல்ல முடியாது என்று அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உதவிச் செயலாளர் அவர்கள் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.
இந்தியாவின் அனுமதியில்லாமல் எந்த ஒரு நாடும் இலங்கைப் பிரச்சனையில் தலையிடமாட்டாது என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும். ஆனால் 2012ம் ஆண்டில் இந்தியாவிற்கும் 2013ம் ஆண்டில் இந்தியாவிற்குமிடையில் என்ன வித்தியாசம் இருக்கின்றது என்பதை நீங்கள் பத்திரிகை வாயிலாக அறிந்திருப்பீர்கள்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் ஒரு குழு அமைத்தார்களே தவிர செயற்படுத்தவும் வடிவம் கொடுக்கவும் அரசு தவறிவிட்டது.
நீதிமன்றுக்கு சென்று நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய ஒன்றை மாற்றியமைக்கும் அளவுக்கு அரசாங்கம் பலம்பெற்றுள்ள நிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சட்டங்களை மாற்றவேண்டும் என்று கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளும் முற்றுமுழுதாக தமிழ் மக்களுக்கு தீர்வைத்தரும் என்று சொல்ல முடியாது. அதற்கு வேறு வழிகளில்தான் தீர்வுதிட்டம் வடிவமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.net/show-RUmryDRcNZju0.html

Geen opmerkingen:

Een reactie posten