[ ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013, 05:53.37 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கடந்த சனிக்கிழமை விஜயம் செய்த ரணில் விக்கிரமசிங்க ஏறாவூரில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் தொகுதிகளுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் ஏ.சி.ஹியாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டம், பொதுமக்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டார். இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் வாழுகின்ற தமிழர்களை இந்த அரசாங்கம் நசுக்கியது. தற்போது சில கிளர்ச்சிக் குழுக்களை வைத்துக் கொண்டு முஸ்லிம் சமூகத்தை நசுக்கத் தொடங்கியுள்ளது. தம்புள்ள, அனுராதபுரம், குருநாகல் போன்ற பகுதிகளில் முஸ்லிம்களுக்கு என்ன துன்பங்கள் நடந்தது என்று உங்கள் எல்லோருக்கும் நன்கு தெரியும்.
ஆனால் இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எத்தனை அநியாயங்களை செய்து வருகின்ற போதிலும் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டு திரியும் அரசியல்வாதிகள் இதுவரை வாய் திறக்கவில்லை. இப்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில்தான் இருக்கின்றது. ஏன் இவர்களால் வாய் திறந்து பேச முடியாமல் உள்ளனர்.
ஆனால் பொது பல சேனா அமைப்பினர் முஸ்லிம்களுக்கு எதிராக கோஷங்களை முன்வைத்த வேளையில் எமது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையும் எமது கட்சியில் உள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுடன் பேச்சு நடத்தினோம்.
இன்று பாருங்கள் பெப்பிலியானவில் நடைபெற்ற சம்பவத்திற்கு எதிராக அரசாங்கம் எந்தவித அறிக்கையும் விடவில்லை. இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, இவ்வாறான இன ரீதியான செயற்பாடுகளைக் கண்டிக்கவுள்ள அதேவேளை செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும் எனவும் கேட்கவுள்ளது.
இங்குள்ள முஸ்லிம் மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்து தேர்தலில் வெற்றி பெறச் செய்துள்ள போதிலும் அரசாங்க கட்சியில் உள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட அனைவரும் மௌனியாக காணப்படுவதை எண்ணி இன்று ஐக்கிய தேசியக் கட்சி கவலை வெளியிடுகின்றது.
கடந்த காலங்களில் இந்த நாட்டில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 2009ஆம் ஆண்டு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லினக்க ஆணைக்குழுவின் மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்த விடயங்கள் எதனையும் அரசாங்கம் அமுல்படுத்தவில்லை.
ஆனால் இப்போது முஸ்லிம்களைக் குறிவைத்து அதன் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று இந்த நாட்டில் உள்ள மக்கள் வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் மிகவும் கஷ்டத்தினை எதிர்நோக்குகின்றனர்.அதேவேளை சீரான சுகாதார வசதி இன்மை, இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பின்மை இதனால் கஷ்டப்படும் மக்கள் வெளிநாடு சென்று கஷ்டப்படுகின்றனர்.
எனவே 2014ஆம் ஆண்டில் ஒரு தேர்தல் வருகின்ற போது அரசை மாற்றுகின்ற பணிகளில் நாம் ஈடுபட வேண்டும். அதற்காக நாம் இந்த 2013ஆம் ஆண்டில் இருந்து அதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இவ்வேளையில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களை ஒன்றினைத்ததாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் இரண்டு நாடாளுமன்ற உறப்பினர்களை நியமிக்க நாம் திட்டமிட்டுள்ளோம்.
அதன் நிமிர்த்தம் முஸ்லிம்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் தலை சாய்க்க வேண்டிய தேவையிருக்கின்றது. தேர்தல் வந்த பின்னர் அரசாங்கத்திற்கு வாக்களித்து விட்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை நீங்கள் ஐக்கி தேசிய கட்சியிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.
இன்று முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளை ஐக்கி தேசிய கட்சி கண்டிக்கும் அதேவேளை முஸ்லிம்கள் நாங்கள் இலங்கையர்கள் எனும் கோஷத்தினை முன்வைத்து அரசிக்கு எதிராக முஸ்லிம்கள் போராட வேண்டும். அதற்காக ஐக்கி தேசிய கட்சியி மே மாதம் 01ஆம் திகதி 03 கட்டங்களாக இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளது.
அதற்கேற்ற வகையில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றினைந்து குழு ஒன்றினை உருவாக்கி அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க ஆயத்தமாகுங்கள். ஐக்கி தேசிய கட்சி முழு ஆதரவுகளையும் வழங்க தயாராகவுள்ளது. இவ்வாறு அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து நாட்டில் ராஜபக்ஷ ஆட்சியை மாற்ற வேண்டும்" என்றார்.
தமிழ்- முஸ்லிம் உறவு! த.தே.கூட்டமைப்புடன் எந்நேரமும் பேச தயார்: றிசாத் பதியுதீன் பகிரங்க அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013, 06:53.00 AM GMT ]
மட்டக்களப்பு மீள்குடியேற்றக் கிராமமான உறுகாமத்தில் இடம்பெற்ற அபிவிருத்திப் பணிகளை ஆரம்ப வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளரும் முன்னாள் மாகாணசபை அமைச்சருமான எம்.எஸ்.சுபைர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, காணியமைச்சர் விமலவீர திஸாநாயக்க, முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாகாணசபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, தேசிய காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸீர் உட்பட பல்வேறு அதிகாரிகளும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் என்பதைக் கேட்டு என்னுள்ளம் பூரிப்படைகின்றது. 30 வருடகாலம் ஒரே மொழியைப் பேசுகின்ற நாம் பிரிந்து பிளவுபட்டுச் சின்னா பின்னமாகி இழக்க வேண்டியவை அனைத்தையும் இழந்து இன்று மீண்டும் குடிசைகளையும் கடைகளையும் பாடசாலைகளையும் கட்டுகின்ற சமூகமாக மாறிப்போயிருக்கின்றோம். விரும்பியோ விரும்பாமலோ கடந்தகால கசப்புணர்வுகளை நாங்கள் மறந்து புதிய பாதையிலே பயணிக்க வேண்டும்.
தமிழ் பேசும் சமூகம் கிழக்கிலே ஒன்றுபட்டு வாழ்வதைப்போல வடக்கிலும் சகவாழ்வு வாழ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம்.
தமிழ் பேசும் சமூகங்கள் பலவீனப்பட்டு அழிய முடியாது. இழப்பதற்கு இனி எதுவுமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் எங்களோடு இது விடயமாகப் பேச முன் வரவேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் பேசும் சமூகம் ஒற்றுமையாக வாழவேண்டும். இதற்கு ஒத்துழைப்புத் தாருங்கள். ஒன்றிணைவோம் வாருங்கள் என்று பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அன்றைய பேரினவாதத் தலைமைகள் இனவாதத்தைக் கக்கியதனால் ஆயுதமேந்திப் போராட வேண்டிய துரதிருஷ்டம் ஏற்பட்டது.
இப்பொழுது முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளை சட்டதிட்டத்தின் அடிப்படையில் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் இந்த நாடு இன்னும் 30,40 வருடங்களுக்குப் பற்றியெரியும் என்பதை நான் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதிக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் சொல்லியிருக்கின்றேன்.
வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும். தமிழ் மக்களின் அதிக பட்ச ஆதரைவப் பெற்றிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் முஸ்லிம் மக்களை ஒற்றுமைப்படுத்துகின்ற விடயத்திலே எங்களுடன் பேச வேண்டும். நாங்கள் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருமித்து இந்தத் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கின்ற தருணம் இப்போது வந்துள்ளது என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten