தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 30 maart 2013

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீதான தாக்ககுதல் காட்டுமிராண்டித்தனமானது!- பிரபா எம்.பி காட்டம்


கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நடத்திய கூட்டத்தின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியமை காட்டுமிராண்டித்தனமானதும் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயலானதும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அமைதியான முறையில் கிளிநொச்சியில் நடத்திய கூட்டத்தின் மீது கல்லெறிந்த சம்பவத்தினை கேள்விப்பட்டவுடன் இது சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனுடன் தொடர்புகளை ஏற்படுத்திய பொழுது அவர் மூலமாக முழுமையான சம்பவங்களை தெரிந்து கொண்டேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் அவர்களது அரசியல் ரீதியான கொள்கைகளுடன் எமக்கு முரண்பாடு இருந்தாலும் இவ்வாறான அநாகரீக காட்டுமிராண்டித்தனமான செயல்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய பொழுது அங்கு கடமையிலிருந்த பொலீஸார் கல்லெறிந்தவர்களை கைது செய்யவோ அல்லது தடுக்கவோ முற்படவில்லை என்பதை பார்க்கும் பொழுது இது திட்டமிட்ட செயல் என்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றது.
அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர்களின் மெய்ப்பாதுகாவலர்கள் முறையான பாதுகாப்பை இவர்களுக்கு வழங்கவில்லை. குறைந்தபட்சம் தமது துப்பாக்கிகளை கூட அவர்கள் வெளியில் எடுக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளுக்கமைய பிடிபட்ட ஒருவரும் பொலிஸ் புலனாய்வுத் துறையைச் சார்ந்தவர் என்பது அவரது அடையாள அட்டை மூலம் நிரூபணமாகின்றது.
1970களில் தமிழாராய்ச்சி மாநாடு இடம்பெற்ற போது அப்போதிருந்த தமிழ் தலைவர்கள் மீது பெரும்பான்மையின பொலீஸார் நடத்திய தாக்குதலின் மூலமாகவே இளைஞர்கள் ஆயுதம் ஏந்த முற்பட்டனர் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் இப்படியான ஒரு நிலையை நாட்டில் தோற்றுவிப்பதற்கு இடம்பெறும் முயற்சிகளை உடனடியாக முறியடிக்க வேண்டும். இது சம்பந்தமான முழுமையான விசாரணை நடைபெற வேண்டும்.
நடைபெற்ற சம்பவத்திற்கு எனது முழுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு இது சம்பந்தமாக விசாரணையை முன்னெடுப்பதற்கு அரச உயர்மட்டத்தின் கவனத்திற்கும் கொண்டு வருவேன் என குறிப்பிட்டுள்ளார். 

கூட்டமைப்பின் காரியாலயம் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்து: சண்.குகவரதன்
[ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 12:54.22 PM GMT ]
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் காரியாலயம் மீது இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளமை கண்டிக்கத்தக்க செயல் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பினர் மீது இவ்வாறான தாக்குதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை ஒரு காட்டுமிராண்டித்தமானது என்றும் அவர் தெரிவித்தள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் சண். குகவரதன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
தாக்குதல் நடைபெற்று அரை மணித்தியாலத்தின் பின்னரே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளமை மிகவும் வருந்தததக்க விடயம் என்றும் ஜனநாயக நாட்டில் பொது மக்கள் மத்தியில் கூட்டம் நடத்துவதற்கு உரிமை இல்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இத்தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் உட்பட 15 பொது மக்கள் காயமடைந்திருக்கின்றார்கள். குறிப்பாக தமிழ் மக்களையும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தாக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் சதி முயற்சியாகும்.
இந்தியாவில் மாணவர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் போன்று இலங்கையிலும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வதகாகவா இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.
அண்மைக் காலமாக இவ்வாறான செயல்கள் வடக்கு கிழக்கில் இடம்பெற்று வருகின்றமை அதிகரித்துக் கொண்டு செல்கின்றது இது தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்தும் பாரிய துரோகம் ஆகும்.
 
இலங்கையின் தேசிய கொடிகள் ஏந்தியவாறும் பொலிஸாரின் பாதுகாப்புடனேயே இந்த தாக்குதல்கள் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை இலங்கை தேசியக் கொடியையும் கொச்சைப்படுத்தும் முயற்சியாகத்தான் எண்ணத் தோன்றுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் கொண்டு வரவேண்டும் என்றும் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் எதிர்வரும் காலங்களில் இல்லாமல் செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சண். குகவரதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten