தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 maart 2013

யாழில் ஊடகப் பணியாளர்கள் மீதான வன்முறைகள் மிகமோசமான சூழலை ஏற்படுத்தலாம்: யாழ்.ஊடக அமையம்



யாழ். நகரை அண்டிய மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் இளம் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு யாழ்.ஊடக அமையம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளதுடன்,  குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அமையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
யாழ்.குடாநாட்டினில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் மீது மீண்டும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகள் மோசமான சூழலொன்றை ஏற்படுத்தலாமென யாழ். ஊடக அமையம் எச்சரிக்கின்றது.
எல்லாம் இயல்புக்கு திரும்பிவிட்டதாக அரசும் அதனது பங்காளிகளும் பறைசாற்றிக் கொண்டிருக்கையினில் இன்று மற்றொரு ஊடகவியலாளர் மீது இடம்பெற்ற கொலை முயற்சி ஏனைய ஊடகவியலாளர்களிடையே மிகவும் அச்சமாக சூழலொன்றை தோற்றுவித்துள்ளது.
வலம்புரி அலுவலக செய்தியாளரான உதயராசா சாளின் (வயது 22) இன்று பிற்பகல் தாக்கப்பட்டமையை எமது அமைப்பு மிக வன்மையாக கண்டிப்பதோடு, வழைமை போன்று இதனையும் இனந்தெரியாத நபர்களது தாக்குதலென ஒதுக்கிதள்ளிவிடாது சட்டம் தன் கடமையினை சரிவரச் செய்ய வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
யுத்த சூழலினில் யாழ்ப்பாணத்தில் பல ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இன்னும் சிலர் காணாமல் போயிருந்தனர்.
எனினும் இவர்களை கொன்றவர்களையோ அல்லது காணாமல் போகச்செய்தவர்களையோ இலங்கையின் நீதி நிர்வாகம் இன்றுவரை கண்டு கொள்ளவில்லை என்பது வருத்தம் தரும் உண்மையாகும்.
அச்சமூட்டும் இத்தகைய நிகழ்வுகளின் தொடர்ச்சியாக பலர் நாட்டைவிட்டோ அல்லது ஊடகவியல் தொழிலைவிட்டோ விலகி இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. ஆனாலும் யுத்தம் முடிந்துவிட்டதாகவும் நாட்டில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு விட்டதாகவும் அரசு அறிவித்திருக்கும் நிலையிலும், யாழ்.குடாநாட்டில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன.
அவ்வகையினில் உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதலை தொடர்ந்து உதயன், யாழ்.தினக்குரல் பத்திரிகைகள் எரிப்பு மற்றும் ஊடகப்பணியாளர்கள் மீதான கொலை முயற்சிகளென வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இத்தகையதொரு சூழலிலேயே வலம்புரி அலுவலக செய்தியாளரான உதயராசா சாளின் இன்று தாக்கப்பட்டுள்ளார். பக்கம்சாராத துடிப்பு மிக்க அவரது பணிகளினாலேயே  யாழ்.பல்கலைக்கழகத்தினில் மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் பற்றிய பெருமளவிலான புகைப்படங்கள் வெளிவந்திருந்தன.
அதன் தொடர்ச்சியாக அன்றும் மிக மோசமாக தாக்கப்பட்டிருந்த அவர் அதற்கென சிகிச்சை பெறவேண்டியுமிருந்தது. தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களின் மத்தியினில் இன்று அவர் மீது கொலை முயற்சி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் சகித்துக் கொள்ளக்கூடியவையல்ல.
யாழ். ஊடக அமையத்தின் நிர்வாக சபை அங்கத்தவர்களுள் ஒருவரான அவர் மீதான தாக்குதலினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
வழைமை போன்றே குற்றவாளிகளை தாம் தேடுவதாக கூறிக்கொண்டே இழுத்தடிப்பதை விடுத்து சூத்திரதாரிகளை கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்தி சட்டமொழுங்கு வெறும் வாய்ப்பேச்சினில் இல்லையென்பதை நிருபிக்க நாம் அரசிற்கு அழைப்பு விடுக்கின்றோம் என்றுள்ளது.
http://www.tamilwin.net/show-RUmryDTcNYjt1.html

Geen opmerkingen:

Een reactie posten