தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 maart 2013

தமிழகத்தை காப்பாற்ற முடியாது! பா.ஜெயப்பிரகாசம்,தீர்மானத்தை இந்தியா பயன்படுத்த வேண்டும்! காங்கிரஸின் கே.எஸ்.அழகிரி அதிரடி!!


என்ன செய்யப் போகிறது இந்தியா? தமிழகத்தை காப்பாற்ற முடியாது! பா.ஜெயப்பிரகாசம்
[ சனிக்கிழமை, 09 மார்ச் 2013, 02:44.30 AM GMT ]
2009மே 18 வரை இலங்கை நடத்திய சாட்சியமற்ற படுகொலைகள், ஒவ்வொன்றாய் வெளிவருகின்றன. 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ எனும் தந்திரவலை விரித்து ராஜபக்சாக்கள் அத்துமீறி நடத்திய கொலை வியாபாரம், 2009 மே முடிவில் அமோக விற்பனையானது.
இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு, பங்கருக்குள் வைக்கப்பட்ட பாலச்சந்திரன், இரண்டு மணி நேரத்துக்குப் பின் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு வயது 12. ஆயிரக்கணக்​கான பாலச்சந்திரன்கள் யுத்தம் என்ற பெயரில் உயிர்நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது​தான் அந்தப் புகைப்படம் உணர்த்தும் சேதி.
செஞ்சிலுவைச் சங்கமும் பணியாற்ற முடியாதபடி வெளியேற்றப்பட்ட முதல் யுத்தக் களம், இலங்கையின் கொலைக் களமாகவே இருக்கும். ஐ.நா. பணியாளர்களை வெளியேற்றியது போலவே, செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்களையும் 2008-ல் வெளியேற்றியது இலங்கை இராணுவம்.
செஞ்சிலுவைச் சங்கம் உருவானதின் பிரதான நோக்கம் யுத்தக் களத்தில் தொண்டாற்றுவது. அவர்களின் சேவைக்கு இடையூறு நேராதபடி இருதரப்பினரும் அனைத்துப் பாதுகாப்புகளையும் அளிக்கக் கடமைப்பட்டவர்கள். செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சேவை அமைப்பையும் வெளியேற்றிய பிறகு, பாதுகாக்கப்பட்ட பகுதிகள் (No war zone) என அறிவிக்கப்பட்ட வளையங்களுக்குள் மக்கள் நுழைந்ததும் கொலையாடல் செய்ய இராணுவத்துக்கு எளிதாயிற்று.
வெளியேற்றப்பட்ட செஞ்சிலுவைச் சங்கம், தலைமையிடமான கொழும்பிலிருந்து 2010-ல் ஓர் அறிக்கை வெளியிட்டது. 'எமக்கு வந்த முறைப்பாடுகளில், இதுவரை காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 15,780. இதில் 1,494 பேர் சிறுவர்கள். இதுதொடர்பில் அரசிடமும் இராணுவத்திடமும் பல தடவை முறையீடு செய்தும் எங்களுக்கு உரிய பதில் எதுவும் இல்லை.’
அந்தப் பாலகனின் கொலைப் படம் இரு உண்மைகளைக் கவனப்படுத்துகிறது.
ஒன்று, கொலை​வெறிக்குப் பலியானவர்கள் சிறுவர்களையும் உள்ளடக்கிய பெண்கள், கைக்குழந்தைகள், கர்ப்பத்தில் அசைந்த உயிர்கள், முதியோர்கள், ஆண்கள் என்பது.
இரண்டாவது, 'விடுதலைப் புலிகளின் தலைவர்களது குடும்பத்தினர் எமது பாதுகாப்பில் உள்ளனர். அவர்களின் குழந்தைகளுக்குக் கல்வி அளித்துவருகிறோம்’ என 2012-ல் ஹெகலிய ரெம்புக்வெல என்ற இலங்கை அமைச்சர் சொன்னது அப்பட்டமான பொய் என்பது.
மானுடப் படுகொலையாளர்கள், முதலில் உண்மை​களைப் படுகொலை செய்வார்கள். முன்னும்பின்னும் இந்தப் பணிகளை வெற்றிகரமாகச் செய்பவர்களால் மட்டுமே கொலைகளை மூடி மறைக்க முடியும். பாலச்சந்திரன் கொலைப் படம், பொய்யை மூட்டை கட்டி விற்பனை செய்வது உலகின் முன் ஒப்பேறாது என்று காட்டிக்கொடுத்துவிட்டது.
சனல்-4 ஆவணப்பட இயக்குநர் கெலம் மெக்ரே, 'பாதுகாப்பு வளையங்கள்தாம், இலங்கை இராணுவத்தின் கொலைக்களங்கள் ஆக்கப்பட்டன’ என்ற உண்மையை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
'இலங்கையின் கொலைக்களங்கள்’ (Killing Filds of Sri Lanka) என்று பெயரிட்ட தனது ஆவணப்படத்தின் அடுத்த பகுதிக்குப் 'பாதுகாக்கப்பட்ட பகுதிகள் - இலங்கையின் கொலைக்களம்' (No war zones-killing Fields of Sri Lanka)எனப் பெயர் சூட்டியுள்ளார்.
பாதுகாப்பு வளையம் என்று இராணுவம் அறிவித்த பகுதிகளில் நுழைந்த மக்கள் இரத்தச் சேற்றில் மூழ்கடிக்கப்பட்டனர் என்ற உண்மை இரத்தத் துடிப்புள்ள எந்த இதயத்தையும் நிறுத்திவிடப் போதுமானது.
கெலம் மெக்ரே, ஆவணப்படத்தை மார்ச் மாதம் ஐ.நா-வின் மனித உரிமை அவையில் வெளியிடத் தயாரித்திருப்பதாகச் சொன்னார். 'மனித உரிமை உறுப்பு நாடுகளுக்கு அழுத்தம் தருவது மட்டுமல்ல; எங்களின் கவனம் எல்லாம் இந்தியா என்ன செய்யப்போகிறது என்பது குறித்துத்தான். அதற்காகத்தான் இந்த ஆவணப் படத்தைத் தயாரித்தோம்’ என்றார்.
ஆனால், இலங்கையில் தமிழினப் பிரச்சினைகள் என்று வருகிறபோது எல்லாம், இந்தியா நடந்துகொண்ட முறை தவறான முன்னுதாரணங்களாக வரலாற்றில் நிற்கின்றன.
சிங்களவரின் தந்தை என அழைக்கப்பட்ட டி.எஸ்.சேனநாயகா, 1948-ல் இலங்கையின் முதல் பிரதமரானதும் நிறைவேற்றிய முதல் சட்டம் இந்திய வம்சாவளித் தமிழர்களை குடியுரிமை அற்றவர்களாக ஆக்கியது. தமிழகத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்டு, ஆறு தலைமுறைகளாக இலங்கைத் தேயிலைத் தோட்டங்களை உழைப்பால், வியர்வையால், உயிரால் வளமாக்கியவர்கள் அவர்கள்.
இலங்கையின் பொருளாதாரம் 75 விழுக்காடு தேயிலையால் உருவானது. நாடற்றவர்களாய் அவர்களை ஆக்கியபோது, இந்தியா எதுவும் செய்யவில்லை. அவர்கள் போராட்டத்துக்கு ஆதரவும் தெரிவிக்கவில்லை. வேடிக்கை பார்த்தது.
அடுத்து நிகழ்ந்தது 1964-ல் மலையகத் தமிழர்களை லட்சக்கணக்கில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வெளியேற்றிய சாஸ்திரி-சிறிமாவோ ஒப்பந்தம். சம்பந்தப்பட்ட மலையகத் தமிழ் மக்களது கருத்தை அறியாமல், மலையகத் தலைவர்களின் ஆலோசனையும் பெறாது இந்தியப் பிரதமரும் இலங்கைப் பிரதமரும் செய்துகொண்ட தன்னிச்சையான உடன்படிக்கை அது. மலையகத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்ட தமிழர்கள், முகவரியும் கால்களுக்குக் கீழ் வேரும் இல்லாது இன்றும் அல்லாடிக் கிடக்கிறார்கள்.
தமிழர் பகுதிகளில் 5,000 தமிழ் மக்களை தார் ஊற்றி எரித்தும், டயர் போட்டுக் கொளுத்தியும், அடித்தும் கொல்லப்பட்ட இனப்படுகொலை 1983-ல் நடந்தது. ஐ.நா-வின் துணைக் குழுக் கூட்டத்தில் இந்த இனப்படுகொலையை இதயமுள்ள தலைவர்கள் பலர் கண்டித்துப் பேசினர். இனி, வரலாற்றில் புறமொதுக்க வேண்டிய செயல் என உரையாற்றினர், உலகமெல்லாம் அதிர்ந்தது, இந்தியா அதிரவில்லை.
இலங்கையில் உள்ள நிலைமைகள் குறித்து, ஐ.நா.அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என, ஐ.நா-வில் இந்தியப் பிரதிநிதி சையத் மசூத் பேசினார். உலக முக்கியத்துவமுள்ள பல பிரச்சினைகள்பற்றி அப்போது ஐ.நா. அவையில் உரை நிகழ்த்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1983 சம்பவம் பற்றிப் பேசவே இல்லை.
2009, மே 28-ல் ஐ.நா. மனித உரிமை அவையில் இலங்கை மீதான மனித உரிமை மீறல், போர்க்குற்ற விவாதம் நடந்தபோது, இந்தியாவின் பிரதிநிதியான கேரளாவைச் சேர்ந்த அச்சங்கரை கோபிநாத், 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நடந்துள்ளது. பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டியதற்காக இலங்கை​யைப் பாராட்ட வேண்டும்’ என்று பேசினார்.
இலங்கைக்கு ஆதரவான தீர்மானத்தை கியூபாவை முன்மொழியச் செய்து, ரஷ்யா போன்ற நாடுகளைப் பின்புலமாக இருந்து இயக்கி அதற்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டது.
2012 மார்ச்சில் மனித உரிமை அவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட தீர்மானம் வந்தது. அடிப்பதுபோல் அடித்து அணைத்துக்கொள்ளும் அமெரிக்கத் தீர்மானம் அது.
தீர்மானத்தில் இடம்பெற்றிருந்த சில காத்திரமான அம்சங்களை உருவி எடுத்து, இலங்கையின் ஒப்புதல் பெற்ற பின்பே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீர்த்துப்போகச்செய்தது இந்தியா.
இப்படி இப்படி எல்லாம் நான் செய்தேனாக்கும்’ என்று ராஜபக்சவுக்குக் கடிதம் எழுதி பெருமையடித்துக்​கொண்டார் பிரதமர் மன்மோகன்.
இலங்கை போலவே பாகிஸ்தானும் அண்டை நாடு. இலங்கைக்கு நீளுகிற நேசக்கரம் பாகிஸ்தானுக்கு என்று வருகிறபோது, சுருங்கிக்கொள்வது ஏன்? இலங்கை தனக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று இந்தியா எண்ணுகிறது. ஆனால், பாகிஸ்தானைப் போலவே சிங்களவர்களும் இந்தியாவைப் பகை நாடாகவே கருதுகிறார்கள்.
இன்றில்லாவிடினும் நாளை இலங்கையின் தமிழர்கள் இந்தியாவுடன் இணைந்து கொள்வார்கள்’ என்று சேனநாயகா பிரதமராக ஆவதற்கு முன் 1944-ல் கூறினார். இந்தக் கருத்தில் சிங்களவருக்கு எள்முனையளவும் இன்றும் மாறுபாடில்லை.
பகைநாடான இந்தியாவைப் பயன்படுத்தி, தமிழர்களை இந்தியாவுடனான நேச உறவிலிருந்து பிரிப்பதும், தனிமைப்படுத்துவதும், அழித்தொழிப்பதும் என்ற பணிகளை இலங்கை குயுக்தியாய் நிறைவேற்றிக்கொள்கிறது.
இந்தியாவின் பாதுகாப்பு பற்றிக் கவலைப்​படுபவர்கள் சிங்களவர் அல்ல; ஈழத் தமிழ் மக்கள்தான். தாயகத் தமிழரின் தொப்புள்கொடி உறவுகளாக இருக்கிறார்கள் என்பதால் மட்டுமல்ல; புவியியல் ரீதியாக​வும் இந்தியாவின் தென்பகுதியை நோக்கியுள்ள நீண்ட கடற்கரையும், கடல் பரப்பும் வடக்கு, கிழக்குப் பிரதேசத்தினுடையவை.
இந்தக் கடற்பகுதி வாழ் தமிழர்கள் தர இயலாத பாதுகாப்பை தென்னிலங்கைச் சிங்களவரும் மறு திசை நோக்கித் திரும்பியுள்ள கடற்பரப்பும் தந்துவிடுமா?
இலங்கை பற்றிய இந்தியாவின் கடந்த கால, நிகழ் கால அணுகுமுறைகள் மாறுவதற்​கான வாய்ப்பு மார்ச் 21-ல் வருகிறது. இனப்படுகொலைக் கொடூரர்களுக்கு எதிராக உலகம் அணி திரளும் வாய்ப்பை ஐ.நா. மனித உரிமை அவை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இந்தத் தருணத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
உண்மையிலேயே, இலங்கையைக் கண்டித்து வழிப்படுத்தும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வருவதற்குப் பதில் இந்தியா கொண்டுவந்திருக்க வேண்டும். தென்னாசியப் பிராந்திய அரசியலைத் தீர்மானிக்கும் முன்னோடும் கிளியாய் அமெரிக்காவை அனுமதித்திருக்கக் கூடாது.
அமெரிக்கா இப்போது கொண்டுவரப் போகும் தீர்மானம் கை நழுவியிருக்கும் இந்துப் பெருங்கடல் அரசியலைத் தனக்குக் கீழ் கொண்டுவரும் குயுக்தியான சூழ்ச்சியாகும். இதில் எதுவும் இருக்கப்போவதில்லை என்பது இப்போதே வெளிப்பட்டுவிட்டது.
எங்களது முந்தைய தேன் தடவிய அறிவுரையை நீ ஏன் செயல்படுத்தவில்லை என்ற கேள்வி மட்டுமே வரவுள்ள தீர்மானத்தில் இருக்கிறது.
இந்துப் பெருங்கடல் புவியியல் அரசியல் கைவசப்பட இந்தியா எண்ணினால், அதற்கு வடக்குக் கிழக்குப் பிரதேச தமிழ்நிலமே பின்தளமாக அமையும். டெல்லிக்கும் இலங்கைக்கும் பாலம் அமைப்பதா, அமெரிக்கா அழைக்கும் திசை நோக்கிச் செல்வதா என குழம்புவதற்குப் பதில் தனக்கெனத் திசையுண்டு, வழியுண்டு என தீர்மானிக்கும் வாய்ப்பை இந்தியா இனி நழுவவிடல் வேண்டாம்.
இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணை கோரும் தீர்மானத்தை இந்தியாவே முன்மொழிதல் வேண்டும்.
ஆனால், கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் குறிப்பிடப்பட்ட எதையும் இலங்கை நடைமுறைப்படுத்தவில்லை.
எந்த ஒரு விசாரணையும் இலங்கையின் ஒப்புதலோடுதான் நடத்தப்பெற வேண்டும் என இந்தியா செய்த திருத்தத்தால் இலங்கை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள எமக்கு விருப்பம் இல்லை என திமிரோடு நிரகரித்துள்ளது எனலாம்.
எதையும் நடைமுறைப்படுத்தவில்லை என்பதை உலக நாடுகள் பல ஆதாரங்களுடன் கேள்வியெழுப்பி உள்ளன. கேள்வியே எழுப்பாத ஒரு நாடு என்றால், அது இந்தியா மட்டுமே. 'அது பகை நாடு அல்ல; நமது நட்பு நாடு. அதன் இறையாண்மையில் நாம் தலையிடக் கூடாது'' என்று நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசுகிறார்.
இறையாண்மை என்பதின் பொருள் என்ன? லட்சக்கணக்கில் தமிழ் மக்களைப் பலியிட்டதும், 90 ஆயிரம் விதவைகளை உருவாக்கியதும் இந்த இறையாண்மைதான். சரணடைந்த மாவீரர்களைக் கொலைசெய்ததும் தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தி பாலியல் வன்முறை செய்வதும் சல்மான் குர்ஷித் என்ற இந்தியனின் பார்வையில் இறையாண்மை அல்லவா?
'மற்ற எல்லாவற்றையும்விட, இந்தியா என்ன நினைக்கிறது என்பதற்கே நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்திய அரசு எங்கள் பக்கம்தான் என்பதால் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைகிறோம்’ என்று 2009, மே 29-ல் சொன்னதை ராஜபக்ச மீண்டும் சொல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து விடுவார்களா? நீதியை எதிர்பார்த்து இருப்போரை ஏமாற்றத்துக்கு ஆளாக்க வேண்டாம்.
'சமத்தன் தயிரைத் தின்னுதும் இல்லாம, இருக்கிறவன் வாயில் இழுகிட்டுப் போனானாம்’ என்ற கதைக்கு இந்தியா உதாரணமாகிவிடக் கூடாது. அப்படி ஒன்று நடக்குமாயின், தமிழகத்தை இந்தியாவால் காப்பாற்ற முடியாது.
ஜூனியர் விகடன்

http://www.tamilwin.net/show-RUmryDTdNYju7.html


இலங்கையைக் கட்டுப்படுத்த தீர்மானத்தை இந்தியா பயன்படுத்த வேண்டும்! காங்கிரஸின் கே.எஸ்.அழகிரி அதிரடி
[ சனிக்கிழமை, 09 மார்ச் 2013, 02:27.45 AM GMT ]
ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், இந்தியா என்ன நிலை எடுக்கப்போகிறது என்பதை உலகத் தமிழர்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். இந்த நிலையில், காங்கிரஸைச் சேர்ந்த கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரியை சந்தித்துப் பேசினோம்.
கேள்வி:  கருணாநிதி தலைமையில் செயல்பட்டு வரும் டெசோ அமைப்பையும் அதன் செயல்பாடுகளையும் காங்கிரஸ் எப்படிப் பார்க்கிறது?
பதில்:  இலங்கைத் தமிழர்கள் பிரச்னைகள் பற்றி நன்கு அறிந்தவர் தலைவர் கலைஞர். அவர், 'இலங்கைப் பிரச்னையை இரண்டு விதமாக பார்க்க வேண்டும்.
அதாவது, ராஜீவ்காந்தி மரணத்துக்கு முன்; ராஜீவ்காந்தி மரணத்துக்குப் பின்’ என்று ஒருமுறை விளக்கிக் கூறியுள்ளார். அதுதான் சரியான பார்வை.
இன்று, இலங்கைத் தமிழர்களுக்காக குரல்கொடுக்க ஒரு தளம் வேண்டும். அதன் மூலமாகத்தான் உலக நாடு​களின் கவனத்தை ஈர்க்க முடியும்.
அதற்கு ஏற்ற அமைப்பு, கலைஞர் தலைமையில் இயங்கும் டெசோ அமைப்பு என்று கருதுகிறோம்.
கேள்வி:  ராஜீவ் காந்தி கொலையை மனதில் வைத்து இலங்கைத் தமிழர்களை காங்கிரஸ் பழிவாங்குகிறதா?
பதில்:  நாங்கள் விடுதலைப் புலிகளைத்தான் எதிர்க்கிறோமே தவிர, இலங்கைத் தமிழர்​களை எதிர்க்கவில்லை.
வன்முறைக்கோ, தீவிரவாதத்துக்கோ, பயங்கரவாதத்துக்கோ நாங்கள் ஒருபோதும் ஆதரவளித்தது இல்லை.
தமிழகத்தில் இருக்கிற சில கட்சிகள், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால்தான் இலங்கைத் தமிழர்கள் மீது காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை என்ற தவறான கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.
அன்னை இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர் சுட்டுக் கொன்றார். அவரை காங்கிரஸ் ஒரு சீக்கியராகப் பார்க்கவில்லை. அவரைத் தீவிரவாதியாகவே பார்த்தது. இந்திராவைச் சுட்டுக் கொன்றது சீக்கியர்கள் என்று நாங்கள் கருதி இருந்தால், இந்தியப் பிரதமராக மன்மோகன் சிங்கை நாங்கள் தேர்வுசெய்திருக்கவே மாட்டோம்.
அதே​போல்தான் விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் தீவிரவாதியாகவே பார்க்கிறோம். தமிழராகப் பார்க்கவில்லை.
ராஜீவ் காந்தி கொலைக்காக ஒருபோதும் இலங்கைத் தமிழர்கள் மீது காங்கிரஸ் இயக்கத்துக்கோ, இந்திய அரசாங்கத்துக்கோ பகை எதுவும் கிடையாது.
கேள்வி:  இலங்கையில் தமிழர்கள் அழிவுக்கு காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டுகிறார்களே?
பதில்:  யுத்தம் என்று ஒன்று நடந்தால் அதில் அப்பாவி மக்களும் கொல்லப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா முன்பு ஒருமுறை மிகச் சரியாகச் சொன்னார்கள்.
அந்தக் கூற்றுக்கு தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலிகள் ஆதரவுக் கட்சிகள் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்க முடியாமல் சோம்பிக் கிடந்தனர். காரணம், ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை அவர்களுக்குத் தேவை.
ஆனால், அவர்கள் பாயக்கூடிய ஒரே இடம் காங்கிரஸ் இயக்கம்தான். அவர்கள், இலங்கைத் தமிழர்கள் என்று சொல்வதே விடுதலைப் புலிகளைத்தான். விடுதலைப் புலிகளைத் தவிர்த்து இலங்கையில் வாழும் எந்தத் தமிழர்களைப் பற்றியும் அவர்களுக்குக் கவலை இல்லை.
இலங்கையில் போர் நடந்த பகுதி பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி. அங்கு ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்திய குற்றம் விடுதலைப் புலிகளைச் சாரும் என்று ஐ.நா. மனித உரிமைப் பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், அதை அவர்கள் வசதியாக மறந்துவிட்டு, காங்கிரஸையும் இந்திய அரசையும் குறைசொல்வது அவர்களுடைய பேதமையைக் காட்டுகிறது.
கேள்வி: தமிழர்களுக்கு அரசியல் உரிமை வழங்காத ராஜபக்சவை, இந்தியாவுக்கு வரவழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுப்பதைத் தடை செய்யலாமே?
பதில்: ஒரு நாட்டின் தலைவர், இன்னொரு நாட்டுக்கு வருவதைத் தடைசெய்வது என்பது உலக அரங்கில் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்காது. சார்க் நாடுகள் அமைப்பில் இலங்கையும் உள்ளது.
இலங்கையில் இப்போது லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இன்றளவுக்கும் வியாபாரத் தொடர்பு இருக்கிறது.
ராஜபக்ச இங்கு வரக் கூடாது என்று தடுத்துவிட்டால், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எந்த உதவியையும் செய்யும் வாய்ப்பு கிடைக்காது.
கேள்வி: ஐ.நா-வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா?
பதில்: ஏற்கெனவே அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்தோம். இப்போது கொண்டுவர இருக்கும் தீர்மானத்தையும் இந்திய அரசு ஆதரிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ராஜபக்சவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதற்கு இந்தத் தீர்மானத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்கா குரல் கொடுப்பது என்பது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதற்கு சமம்.
வியட்நாமிலும் மத்தியக் கிழக்கு நாடுகளிலும் அமெரிக்காவை விடவும் மனித உரிமைகளை மீறியவர்கள் யாரும் இல்லை.
இலங்கையில் கோரமான யுத்தம் நடந்தபோதும்கூட அமெரிக்கா மௌனமாகவே இருந்தது.
ஆனால், இன்று இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதைக் கண்டு, இலங்கைக்கு ஒரு அச்சத்தைக் கொடுக்க அமெரிக்கா விரும்புகிறது. அதனுடைய வெளிப்பாடே இந்தத் தீர்மானங்கள்.
எது எப்படி இருப்பினும், இலங்கையைக் கட்டுப்படுத்த இந்தத் தீர்மானத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.''
அதிரடியாக முடித்தார் அழகிரி!
ஜூனியர் விகடன்



http://www.tamilwin.net/show-RUmryDTdNYju6.html

Geen opmerkingen:

Een reactie posten