தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 maart 2013

வேடிக்கை பார்ப்பதே இந்தியாவின் வேலையா? வெம்பித் தவிக்கும் தமிழக மீனவர்கள் !


கடந்த சில ஆண்டுகளில் 500-க்கும் மேற்​பட்ட தமிழக மீனவர்கள், இலங்​கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதற்குக் காரண​மான இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மீனவப் பிரதிநிதிகள் குரல் எழுப்பு​கிறார்கள். ஆனாலும், மத்திய அரசின் நடவடிக்கை ஆமை வேகம்தான்.
இந்த நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் தருவை​குளத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்களைப் பிடித்துச் சென்றிருக்கிறது இலங்கைக் கடற்படை. அவர்கள் இன்னும் விடுவிக்கப்படாத நிலை​யில், அதுகுறித்து கலெக்டரிடம் மனு கொடுக்க வந்திருந்தார் தருவைகுளம் பஞ்சாயத்துத் தலைவரான மகராஜன். அவரிடம் பேசினோம்.
ஒவ்வொரு நாளும் நாங்க கடல் அலைகளோடு போராடுறோம். நாங்க கரைக்கு வந்த பிறகுதான் எங்க பொண்டாட்டி புள்ளைங்க பெருமூச்சுவிட்டு சகஜ நிலைக்கு வர்றாங்க. அவதியை அனுபவிக்கிற எங்களுக்குத்தான் மேலும் மேலும் தொல்லை கொடுக்கிறாங்க.
சம்பவம் நடந்த அன்றைக்கு 95 போட் கடலுக்குப் போச்சு. மீன் கிடைச்சா கரைக்கு திரும்பிடலாம்னு ஆர்வமா இருந்த நேரத்தில், திடீர்னு அங்கே இலங்கை நேவிக்காரங்க வந்திருக்​காங்க. 'சதர்ன் ஸ்டார்’, 'எப்ரின்’, 'எஸ்.பி’ என்ற மூன்று போட்டையும், அதில் இருந்த செல்வராஜன், ரூபன், செல்வராஜ், தொம்மை அந்தோனி, முருகன், ராஃபின், அந்தோனி அல்பர்ட்ராஜ், மாணிக்கராஜ், கென்னடி, சகாயமணி, குமார், மேன்ட்லி, சு.அப்பாஸ், நிஜாம், ரபிக், ஜெ.அப்பாஸ் ஆகியோ​ரையும் அடிச்சு இழுத்துட்டுப் போயிருக்காங்க. லட்சக்கணக்கான மதிப்​புடைய வலைகளை வெட்டி வீசியிருக்காங்க.
எங்களுக்கும் அவங்களுக்கும் என்ன பகை? முன்னெல்லாம் அந்த நாட்டு மீனவர்கள் நம்ம எல்லை வரை வருவாங்க. நாங்க அவங்க எல்லை வரையிலும் போவோம். அவங்க கொண்டுவர்ற தின்பண்டங்களை எங்களுக்குத் தருவாங்க. நாங்க கொண்டுபோறதை அவங்களுக்குக் கொடுப்போம்.
கச்சதீவு, விடுதலைப் புலிகள் பிரச்சினை வந்த பிறகுதான் எங்களுக்குப் பிரச்சினையே. இன்று வரை​யிலும் இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையே சண்டையும் கிடையாது. அன்றைக்கு மூன்று படகு பிடிபட்டு இருக்கிற தகவலைக்கூட இலங்கை மீனவர் ஒருவர்தான் சொன்னார். அவர் சொல்லவில்லை என்றால், 16 பேரும் எங்கே இருக்காங்க என்றுகூட தெரி​யாமல் போயிருக்கும் என்றார்.
தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டிப் போகிறார்கள்’ என்று சொல்லப்படுவது குறித்து அவரிடம் கேட்டோம்.
காற்று இழுத்துக்கொண்டு போகும்போது மீனவர்கள் என்ன செய்ய முடியும்? இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால், நம் நாட்டு கடற்படையினர் பிடித்து விசாரித்து பத்திர​மாகத் திருப்பி அனுப்புவதுபோல், அவர்களும் அனுப்பி வைக்கலாமே. அடித்துத் துன்புறுத்துவது, சுட்டுக் கொல்வது எதற்கு?
அத்தனையையும் வேடிக்கை பார்த்துக்​கொண்டு இருப்பதே இந்தியாவின் வேலையா?
மீனவர் பிரச்சினை தீரணும்னா, இரண்டு தரப்பும் அனைத்துப் பகுதியிலும் மீன் பிடிக்கலாம் என்ற சுதந்திரமான ஒப்பந்​தத்தை இரு நாடுகளும் போடணும்.
நமக்கு இருக்கிற குறைவான கடல் பகுதியில் மீன்பிடித்து வாழ்க்கையை நடத்த முடியாது.
இதேநிலை நீடித்தால், இப்படித்​தான் அடிக்கடி அச்சுறுத்தல் வரும்.
எல்லா இழப்புக்களையும் பார்த்துக்கிட்டு சும்மாவே இருக்க ஒரு மத்திய அரசு தேவையா?'' என்றார் காட்டமாக.
மாவட்ட கலெக்டரான ஆஷிஸ்​குமாரிடம் பேசினோம்.
இலங்கை வசம் உள்ள 16 மீனவர்களும் பத்திரமாக இருக்கிறார்கள். நமது ஹை கமிஷன் அதிகாரிகள் அங்கே போய் இருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் உரிய வேலையை செய்துகொண்டு இருக்கிறது. விரைவில் அவர்கள் இங்கு வந்துவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இனிமேல் எல்லையைத் தாண்டி நமது மீனவர்கள் போக வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கிறோம் என்றார்.
கடலோர மக்கள் கூட்டமைப்பின் அமைப்பாளரான புஷ்பராயன்,
அவர்கள் எல்லையில் நாமும், நமது எல்லையில் அவர்களும் மீன் பிடித்துக் கொள்ளும் ஒப்பந்தம் கடந்த 1974-ல் நிறைவேறியது. 'நீ ஏன் எல்லை தாண்டிப்போனாய்’ என நமது அதிகாரிகள் கேட்கிறார்கள் என்றால், அது அவர்களின் அறி​யாமை. தட்டிக்கேட்க வேண்டிய இந்திய அரசு, இலங்​கையிடம் ஏமாந்து நிற்கிறது.
சீனக் கட்டுப்​பாட்டுக்​குள் சென்றுவிட்ட இலங்கையை நாட்​டாமை செய்ய ஆசைப்பட்ட இந்தியா, இலங்​கையின் நயவஞ்சகப் பேச்சை நம்பி, விடுதலைப் புலிகளை அழிக்க உத​வியது.
ஆனால், 'இந்தியாவின் எதிரி​கள்... இலங்கைக்கு நண்​பர்கள்’ என்பதை மாற்ற மறுக்​கிறது இலங்கை.
அப்போதும், மீனவர்கள் மீன் பிடிக்கவுள்ள உரிமையைக்கூட கண்டிப்போடு கேட்டு வாங்க இந்தியா தயங்கு​கிறது.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் துன்புறுத்​தப்படுவதையும் கண்டுகொள்வது இல்லை. இந்த நிலை மாற இந்தியா என்ன செய்யப் போகிறதோ தெரிய​வில்லை'' என்றார் வேதனையோடு.
கடல் அலையைப் போலவே மீனவர் கவலையும் ஓயாதோ?
ஜூனியர் விகடன்

Geen opmerkingen:

Een reactie posten