தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 maart 2013

யாழ். ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு ஜனநாயக மக்கள் முன்னணி கண்டனம்!- பாஸ்கரா


யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகையின் அலுவலக செய்தியாளர் உதயராசா ஸ்ராலின் தாக்கப்பட்டமைக்கு ஜனநாயக மக்கள் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி.பாஸ்கரா கருத்து வெளியிடுகையில்,
இலங்கையின் ஊடகத்துறை சார்ந்தவர்கள் தாக்கப்படுவது இன்று நேற்றல்ல அதிலும் வடக்கு ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் அதிக முனைப்பாகவே அண்மைக்காலங்களில் இருந்து வருகின்றன.
இத்தகைய அடக்குமுறை தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே வலம்புரி அலுவலக செய்தியாளர் தாக்கப்பட்டுள்ளார்.
இவர் மீதான தாக்குதல் சம்பவம் இரண்டாவதாகும். ஏற்கனவே யாழ்.பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தின் போது படையினரால் இவர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டிருந்தார்.
தாம் ஒரு ஊடகவியலாளர் என்பதை அடையாளப்படுத்தியும் இவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வடக்கின் ஊடக சுதந்திரம் மிகவும் ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்படுகின்ற நிலையையே காட்டுகிறது.
இலங்கை ஜனநாயக நாடு. வடக்கு மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்று அரசு கூறிவருகின்ற நிலையில் ஊடகங்கள் மீதான தாக்குதல் ஜனநாயகம் படுகுழியில் தள்ளப்பட்டு இருப்பதையே காட்டுகின்றது.
இராணுவ ஆக்கிரமிப்புக்கள், ஜனநாயக உரிமைகள் மீறல்கள் என்பவற்றை உலகிற்கு எடுத்துச் சொல்லும் ஊடகங்கள், ஊடகவியலாளர் தாக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கதும் வருத்தத்திற்குரிய விடயமும் ஆகும் என அவர் தெரிவித்துள்ளார்.


ஊடகங்களையும் மௌனிக்க வைக்க முயற்சி!- வலம்புரி ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்​கு சுதந்திர ஊடகக்குரல் கண்டனம்

[ சனிக்கிழமை, 09 மார்ச் 2013, 02:00.12 PM GMT ]
வலம்புரி பத்திரிகையின் ஊடகவியலாளர் உ.சாளின் நேற்றைய தினம் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார். இவர் மீதான மிலேச்சத்தனமான - காட்டுமிராண்டித்தனமான - தாக்குதலை சுதந்திர ஊடகக் குரல் வன்மையாகக் கண்டிக்கின்றது.
இவர் மீதான தாக்குதலுடன் யாழ். மாவட்டத்தில் ஊடகங்கள் மீது இந்த வருடத்தில் இடம்பெற்ற மூன்றாவது தாக்குதல் சம்பவம் இதுவென்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்ற அதே நேரத்தில் இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படாதது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது.
யாழ். குடாநாட்டில் ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதலின் ஆகப் பிந்திய காடைத்தனமான தாக்குதலாக சாளின் மீதான தாக்குதல் அமைந்துள்ளது.
யாழ்.குடாநாட்டில் ஊடகங்கள் மீது இந்த வருட ஆரம்பத்திலிருந்து தொடர்ச்சியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே குரல் கொடுக்கும் சிவில் சமூகங்களையும் ஒடுக்கியுள்ள நிலையில் மக்களின் குரலாக இன்னமும் ஒலித்துக் கொண்டிருப்பது ஊடகங்களே. அதனால் அந்த ஊடகங்களையும் மௌனிக்க செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் 10ம் திகதி உதயன் பத்திரிகையின் விநியோக ஊழியர் தாக்கப்பட்டதுடன் அவர் கொண்டு சென்ற பத்திரிகைப் பிரதிகளும் மோட்டார் சைக்கிளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
அந்தச் சம்பவம் இடம்பெற்று ஒரு மாத காலத்தினுள் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி தினக்குரல் பத்திரிகையின் விநியோக ஊழியர் தாக்கப்பட்டதுடன் அவர் கொண்டு சென்ற பத்திரிகைப் பிரதிகளும், மோட்டார் சைக்கிளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வலம்புரிச் செய்தியாளர் மீது நேற்றைய தினம்  இனந்தெரியாதவர்களின் கைவரிசை மீண்டும் காட்டப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக யாழ். ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதலுக்கு எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருப்பதற்கு இலங்கை அரசும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுபவர்களும் உடந்தையாக இருக்கின்றனரா என்ற சந்தேகமும் தோன்றியுள்ளது.
எழுந்துள்ள சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் செயற்படாது தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை இனியாவது கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு சுதந்திர ஊடகக்குரல் கேட்டுக் கொள்கின்றது.

Geen opmerkingen:

Een reactie posten