தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 maart 2013

பாரதமே! நீ புலியின் எதிரி மட்டுந் தானா? அல்லது முழுத் தமிழினத்திற்குமே எதிரிதானா?- பூநகரான்


பாருக்குள்ளே சிறந்த பாரத மாதாவே!.. கிழக்கேயிருக்கும் ஞான பூமியே!.. சென்னை உயர்நீதி மன்றத்திற்கு முன்னுள்ள மனுநீதி கண்ட சோழனின் சிலை. புத்தரும், இயேசுவின் குரு எனப்படுபவரும் சுவாமி விவேகானந்தரும், அவரது குருவான இராம கிருஷ்ண பரமஹம்சரும் இன்னுமாகக் காந்தி முதல் நேரு ஊடாக இந்திரா அம்மையார் வரையிலான தலைமைகளும்,
வினோபாவா தொடக்கம் காமராஜ் நாடார் வரை, பெரியார் தொடக்கம் அறிஞர் அண்ணா வரை இன்னுமாக எத்தனை எத்தனையோ புண்ணிய புதல்வர்களை ஈன்றவள் நீ.
பகவத் சிங், வீர பாண்டியன், நாட்டின் சுதந்திரத்திற்காய் பாடுபட்ட வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணியசிவம் மற்றும் தமிழ் மாண்பிற்காய் மரபுடைத்த பாரதியார், பாரதிதாசன் இன்னுமாக கண்ணதாசன் என இன்று வரை தொடரும் கம்பன் பரம்பரைக் கவிஞர்களை வைரமாகவும் முத்தாகவும் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் புனித மாதா நீ,
கூட்டாட்சிப் பங்களிப்பிற்காய் சேராத இடம் சேர்ந்து, முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போய்,
தன் இனத்தையே முள்ளிவாய்க்காலுள் வெட்டி வீழ்த்தத் துணை போன போர் வாளனும், தன் தங்கத் தமிழ்ப் பேனாவாலும், அடித் தொண்டை கரகரப்பானாலும் அமுதமாய் சங்கத் தழிழை அள்ளிக் கொட்டிய அரங்கக் கவி கலைஞரின் தமிழை மட்டும் ரசித்தவாறு, தமிழரல்லாத போதும் தமிழரிற்காய் யாரும் செய்யாத மகத்தான பணிகளையும் உதவிகளையும் செய்த கொடை வள்ளலும்,
ஈழத் தமிழரின் இதயக் கனியுமாகிய மாண்புமிகு எம்.ஜீ.ஆர் அவர்கள் பொற்பாதத்தை தொழுதபடி இந்த உலகால் சமகாலத்தில் மதிப்பிட முடியாத நடிப்பை தரையில் நாடகங்களாகவும் திரையில் படங்களாகவும் அளவிற்கு மேலாகவே அள்ளிக் கொட்டிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் “ முடி இன்னும் தயாராகவில்லையா? “ என்ற வீர வசனத்தை இரை மீட்டபடி,
முன்பு புலிகளை எதிர்த்திருந்தாலும், இன்றளவில், உறுதியாக இந்திய மத்திய அரசின் உயர் அதிகாரிகளைச் சந்திக்க மறுத்ததுடன் உறுதியாக, இந்திய மத்திய அரசின் ஊடாக உலக அரங்கை நோக்கிய நகர்வுகளை ராஜீக ரீதியாக மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா அவர்களிற்கு வணக்கம் தெரிவித்துக் கொண்டு,
மேலே காணப்படும் சென்னை உயர் நீதிமன்றச் சிகப்புக் கட்டிடத்தின் முன்னால் எழுந்து நிற்கும் மனு நீதி கண்ட சோழனின் சிலையின் தர்மப் பொற்திருப்பாதங்களை சிரந் தாழ்த்தி இரு கரங்கூப்பி வணங்கியவாறு,
புண்ணிய நதிகளையும், மகிமைமிக்க மலைகளையும், தன்னகத்தே கொண்டதுடன், உலக மதக் கோட்பாடுகள் அனைத்தையும் தத்துவங்களையும் தனது வெவ்வேறு ஆபரணங்களாக அணிந்துள்ள மஹா பாரத மாதாவாகிய உன்னைப் பார்த்து நாம் இன்று கேட்கும் முதற் கேள்வி இது தான்.
இந்தியாவே ! நீ, ராஜீவ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட புலிகளிற்கு மட்டும் தான் எதிரியா? இல்லை நீ முழுத் தமிழ் இனத்திற்குமே என்றும் எதிரிதானா என்பதேயாகும்.
காரணம் இதுவரை காலமும் நீ சாட்டுப் போக்கு காட்டி வந்த புலிகள் இன்று இல்லை. புலி வழி யாரும் தலை தூக்க வர இடமில்லாது பாலனையும் கொன்று விட்டீர்கள். தவிர ஒற்றைக் கைச் சிலம்புடன் நீதி கேட்டெழுந்த கண்ணகி போல், இன்று தான் ஈழத் தமிழரின் விவகாரம் அரங்கேறியுள்ளது.
கடந்த தடவையும் கபடமாக அமெரிக்கப் பிரேரணையையே மாற்றியிருந்தாய் இந்தத் தடவையும் அதே கபடத்தை அரங்கேற்றி விட்டாய்.
நாங்கள் நாடு கேட்கவில்லையே அரசியல் உரிமையயைக் கூடக் கேட்க வில்லையே நீதியை நிலைநாட்டுமாறு விசாரிக்குமாறு தானே கேட்கிறோம். மனித உரிமை பற்றித் தானே பேசுகிறோம். தமிழராகிய நாங்கள் மனிதரில்லையா?
நீதிக்கான விசாரணை கேட்டு ஒரு பசு அடித்த ஆராய்ச்சி மணி எங்கே?
ஐ நா வரை சென்ற செங்கோலை நீ தூக்கி வீசுவது எங்கே?
நீதியை தடுக்கும் நீ ஒரு அரசா? எங்கே உன் செங்கோல்?
டாக்டர் எஸ் இராதாகிருஷ்னன் ராஜேந்திரப் பிரசாத் போன்றோர் தொடக்கம் புனிதரும் விஞ்ஞானியுமான் நம் மாண்புமிகு அப்துல் ஹலாம் வரையிலான இந்தியாவின் தவப் புதல்வனான அப்துல் ஹலாம் அமர்ந்திருந்த ஜனாதிபதி ஆசனத்தில் இன்று இருக்கும் இந்தியாவின் முதற் குடிமகன் யார்?
இந்தப் பிரணாப் முகர்ஜி தானா? “ இலங்கையில் போர் முடிந்து விட்டது” என்று கலைஞரிற்கு பொய்யுரைத்து ஏமாற்றிய கண்ணியவான் தான் உனது தலைமகனா? இவர் தான் இந்தியாவின் ஜனாதிபதியா?
ஓ! பாரதமே! எங்கே உன் மாண்பு? எங்கே உனது மகிமை? எங்கே உனது செங்கோல்? அரசின் கடமையே நீதியை காப்பதும் நிலை நாட்டுவதும் தானே.
அப்படியிருக்க சட்டங்களையே மீறிய சிறீலங்கா அரசை காக்க நீ முயல்வது ஏன்? என் கணவன் கள்வனா? என்றெழுந்தாள் அன்று கண்ணகி - நாமின்று கேட்கிறோம் நம் சுய தற் பாதுகாவலர்கள் பயங்கரவாதிகளா?
அவர்கள் வட்டுக்கோட்டை ஜனநாயக தீர்மானத்தின் வழி வந்த போராளிகள். இன்று உங்களாலும் உலகாலும் தடுத்து நிறுத்த முடியாத இன அழிப்பை, கற்பழிப்புக்களை, கொலைகளை, கொள்ளைகளை, கோயில் இடிப்பை, கலை கலாசார சீரழிப்பை, தடுத்து எல்லைக்கு வெளியே வைத்திருந்த எம் எல்லை ஆளர்கள் அவர்கள்.
இந்தச் சுய பாதுகாப்பு என்ற ஒரே விடயத்திற்காக புலிகளை ஆதரித்த பல்லாயிரம் புலம் பெயர் தமிழர்களையும் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என்று கணித்த கண் மூடி உலகமே!
நாங்கள் விருந்தோம்பலும் கடின உழைப்பும் பணிவும் விசுவாசமும் கொண்ட ஒரு பண்டைய செம்மையான இனம். எங்கள் தியாகத்தை புரிந்து கொள்ள முடியாத, அல்லது அதனைத் தடுக்கும் மதி கெட்ட உலகம் இது.
எங்கள் மனு நீதி கண்ட சோழன் தண்டனை வழங்கும் போது குற்றம் செய்தவன் தன் மகன் என்று பார்த்ததில்லை. தன் மகனையே இரையாக்கினான். அதுவும் தெரியாமல் தேர்ச் சில்லால் பசுக்கன்று ஒன்றை நசித்துக் கொன்ற தப்பிற்காக. இதனை உறுதி செய்யவே நீதிமன்றத்தில் தராசு பிடிக்கும் தர்ம தேவதையின் கண்கள் கறுத்த துணியால் இறுகக் கட்டப்பட்டிருக்கிறது.
ஆனால் இன்றைய காங்கிரஸ் இந்தியாவோ இன்று தமிழர்கள் என்பதால் கண் மூடித்தனமாக எதிர்க்கிறதே அது ஏன்? புலிகள் தான் இன்று இல்லையே! அழித்த உங்களிற்கு இது நன்றாகத் தெரியுமே. இதற்குப் பிறகும் ஐ நாவில் உள்ள இந்தியத் தூதர் ஏன் சிறீலங்காவிற்கு துணை போக வேண்டும்?
இந்த நேரத்தில் நீதிக்காய், தர்மத்திற்காய், உண்மைக்காய் குரல் கொடுக்க வேண்டிய நீ. உன் பிரஜைகளான தமிழக மக்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பார்ப்பது ஏன்?
அதர்மத்தையே அகிம்ஜையால் எதிர்கொண்ட காந்தி தேசத்தில் நீதிக்காக நிற்க  ஒரு இந்திய மைந்தனும் இல்லையா?
பசு அடித்த ஆராய்ச்சி மணிக்காய் தன் மைந்தனையே தேர்ச் சில்லிற்கு இரையாக்கிய மனுநீதி கண்ட சோழனின் இந்தியாவா இது?
நீ தமிழர் உலகெலாம் பரந்து வாழ்வதால் தமிழரிற்கு எங்கும் நாடு கிடைத்து விடக் கூடாது என அஞ்சுகிறாய். சிங்களம் எவ்வளவு தூரம் தமிழரை அழிக்க முயல்கிறதோ அவ்வளவு தூரம் நீயும் தமிழரை வலுவிழக்கச் செய்ய முயல்கிறாய்.
இதனால் தமிழகத்தில் தேசிய விசுவாசத்தை நீயே தான் குழி தோண்டிப் புதைக்கிறாய்
உனக்கு பெரிய உடல் சிறிய இதயம்
பாரதமே! நீ பாரதமா? பாதகமா?
வரலாற்றுக் கால ஆரிய திராவிட ரீதியில் நீ தமிழகத்தை பார்க்கிறாய்!
வேண்டாமிந்த மாற்றான் தாய் மனப்பான்மை!
நெஞ்சம் மாறி விடு! தமிழரை வாழ விடு!
அமெரிக்காவின் தீர்மானத்தை அனுமதி! தடுக்காதே
நமக்குத் தேவை ஒரு சர்வ தேச விசாரணை!
இது கூட இனியாவது நாங்கள் பாதுகாப்பாக இருக்கவே!
அன்று வாலியை மறைந்திருந்து கொன்றாய், இன்று புலியையும் பின்னின்று கொன்றது நீயே தான். நீயின்றி சிறீலங்காவால் எதையும் செய்திருக்க இயலாது.
தயவு செய்து உன் தேசிய எல்லைக்கள் வாழும் உனது தமிழகப் பிரஜைகளின் நீதி கேட்டெழும் போராட்டத்திற்கு செவி சாய்.
நீ நீதியுள்ளவள் தான் என்பதை நிலை நாட்டு. இல்லையேல் அறம் உன்னை ............
பாரதமே! நீ புலியின் எதிரி மட்டுந் தானா? அல்லது முழத் தமிழினத்திற்குமே எதிரிதானா?
வந்தே மாதரம்!

http://news.lankasri.com/show-RUmryDRUNZns4.html

Geen opmerkingen:

Een reactie posten