தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தொடர் தாக்குதலை உடனடியாக தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் நேற்றிரவு நாகை, புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதல்களை சுட்டிக்காட்டிய அவர் மீனவர்கள் அரிவாள், இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் இலங்கை கடற்படை 4-வது முறையாகத் தாக்கியுள்ளதாக கூறிய ஜெயலலிதா, புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேர் இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டுள்னர், நாகப்பட்டினம் மீனவர்கள் 6 பேர் அரிவாளால் தாக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த 12 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படாதது தமக்கு அதிருப்தி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு முறை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா தனது கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
அப்போது இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட 19 தமிழக மீனவர்கள் இன்னும் இலங்கை சிறையில் வாடுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம் மாதம் 19 மற்றும் 20ந் தேதிகளில் இலங்கை கடற்படை கொடூரமாக தாக்கியதில் 4 தமிழக மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த தொடர் தாக்குதல் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழக அரசு பல முறை தனது எதிர்ப்பை தெரிவித்த போதிலும் மத்திய அரசு ராஜ்ய உறவுகளின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய குடிமக்களான தமிழக மீனவர்கள் மீது இலங்கை தொடர்ந்து வரும் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்களை கண்டுக் கொள்ளாதது போல் மத்திய அரசு இருக்க இயலாது எனவும் அவர் வன்மையாக கண்டித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக ஏற்கனவே இம் மாதம் 14ந் தேதி தங்களுக்கு கடிதம் அனுப்பியதாகவும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தொடர் தாக்குதலை உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவர் பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten