மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுமார் 6 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பாரிய அவசர விபத்துச் சேவை சிகிச்சைப் பிரிவு ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவின் பிரபல முறிவு வைத்திய நிபுணரும் பியப் (BEAP) அமைப்பின் தலைவருமான டொக்டர் டேவிட் யங்கின் முயற்சியிலும் ஆதரவுடனும் இந்த அவசர விபத்துச் சேவை சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.முருகானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட வைத்திய நிபுணர்கள், வர்த்தகர்கள், தாதியர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது வைத்தியசாலையில் விபத்துகள், அவசர பிரிவு தனியாக அமைக்கப்படுவதான வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதனடிப்படையில் நான்கு மாடிகளைக் கொண்டதாக அமையவுள்ள இந்த விபத்துச் சேவைப் பிரிவில் கீழ்தளத்தில் விபத்துக்கு உள்ளாவோர் அனுமதி பிரிவு, நோயாளர் பார்வைப் பிரிவு, வைத்தியர் ஓய்வு அறை என்பன அமையவுள்ளன.
இரண்டாம் மாடியில் 50 படுக்கைகளைக் கொண்டதாக ஆண்களுக்கான வாட் அமைக்கப்படவுள்ளதுடன் மூன்றாம் மாடியில் 50 படுக்கைகளைக் கொண்ட பெண்களுக்கான வாட் அமைக்கப்படவுள்ளது.
நான்காம் மாடியில் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் வகையில் நான்கு சத்தி சிகிச்சை கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்த நிர்மாணப் பணிக்காக சுமார் 06 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவையாகவுள்ள நிலையில், இதற்கான நிதியில் அரைவாசியை பிரபல முறிவு வைத்திய நிபுணரும் பியப்(BEAP) அமைப்பின் தலைவருமான டாக்டர் டேவிட் யங்கின் வழங்கியுள்ள நிலையில் மிகுதி நிதியை இலங்கை வழங்கவேண்டும் என்ற வகையிலேயே ஒப்பந்தம் கடந்த வருடம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கான நிதிகளை இலங்கையில் உள்ள இலங்கை தொலைத்தொடர்பு சேவை நிலையம் உட்பட பல வர்த்தக அமைப்புக்கள் வழங்கியுள்ளன.
எனினும் இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட இன்னும் 1 மில்லியன் அமெரிக்க டொலர் தேவை நிலையில் உள்ளதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கான உதவிகளை மட்டக்களப்பை சேர்ந்தவர்களும் புலம்பெயர்ந்துள்ள எமது மண்ணின் உறவுகளும் உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
எமது மண்ணில் அமையவுள்ள இந்த வைத்தியசாலையினால் முழுக்க முழுக்க எமது மாவட்ட மக்களே நன்மையடையவுள்ளனர். இதற்காக மாவட்டத்தில் இருக்கும் அனைவரும் ஒன்றுப்பட்டு உழகை;க முன்வரவேண்டும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் முருகானந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வைத்தியசாலையாகவுள்ள இவ்வைத்தியசாலையில் இருந்து நோயாளிகளை கொழும்புக்கு அனுப்ப வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இந்த வைத்தியசாலை அமைக்கப்படுவதன் காரணமாக அந்த நிலை மாற்றப்பட்டு நேரம் குறைக்கப்படுவதால் நோயாளிகளின் இறப்பையும் குறைக்கலாம் என தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten