இங்குள்ள ஏனைய கிராமவாசிகளும் நாளை புதன்கிழமை கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் கிராமவாசிகள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
முள்ளியவளையில் இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்காக ஐந்து ஏக்கர் காணியைத் தருமாறு இராணுவத்தினரும், வனபரிபாலன திணைக்கள அதிகாரிகளும் தொடர்ச்சியாக அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையிலேயே ஆறு குடும்பஸ்த்தர்கள் நேற்றும் இன்றுமாகக் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இரண்டுவார கால விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
முள்ளியவளை மத்தி வனபரிபாலன சபைக்குச் சொந்தமானது எனக் கூறியே குறிப்பிட்ட தமிழ்க் கிராமவாசிகள் அத்துமீறிக் குடியேறியிருந்தார்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு கைது செய்யப்படுபவர்களை உடனடியாகவே பிணையில் விடுவிப்பதற்கான நடைமுறைகள் இருக்கின்ற போதிலும், இவர்கள் இரண்டு வாரகால விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
முள்ளியவளை மத்தியில் முகாம் அமைப்பதற்காக காணி தருமாறு படையினரும் வன பரிபாலன திணைக்கள அதிகாரிகளும் விடுத்திருந்த கோரிக்கைகளை கிராவாசிகள் திட்டவட்டமாக நிராகரித்திருந்தார்கள்.
இந்த நிலையில், குறிப்பிட்ட கிராமவாசிகளை கைது செய்து காவலில் வைத்துவிட்டு காணிகளை அபகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட கிராமவாசிகள் அன்றாடம் கூலித் தொழில் செய்து குடும்பத்தைப் பராமரிப்பவர்களாக இருப்பதால், அவர்களுடைய குடும்பங்கள் அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியின்றி நடுத்தெருவுக்கு வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டவர்களைவிட ஏனைய கிராமவாசிகளையும் கைது செய்வதற்காக வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து முள்ளியவளை கிராமத்தில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
கிராமவாசிகள் அங்கிருந்து வெளியேறுவதற்கு ஒரு வார கால அவகாசத்தை கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள், திடீரென அதிரடியாக கைது நடவடிக்கையில் இறங்கியிருப்பது கிராமவாசிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
1972 ஆம் ஆண்டளவில் இந்தப் பகுதிக் காடுகளைத் துப்பரவு செய்து குடியேறிய முள்ளியவளை மத்திய பகுதி மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு வேறு மாற்றிடத்தைக் கூட கொடுக்காமல் அவசரமாகவும் பலாத்காரமாகவும் வெளியேற்ற முற்படுவது நல்லிணக்க முயற்சிகளுக்கு முற்றிலும் முரணானது எனவும் சுட்டிக்காட்டிய சிவசக்தி ஆனந்தன், இவ்விடம் தொடர்பில் அரசாங்க அதிபருக்கு முறைப்பாடு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இறுதிப்போரின் போது அனைத்தையும் இழந்து மெனிக்பாம் முகாமில் தஞ்சமடைந்த இக்கிராவாசிகள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டபோதிலும், அவர்களுடைய மீள்குடியேற்றத்துக்கான வசதிகள் எதுவும் அரசாங்கத்தினால் செய்துகொடுக்கப்படவில்லை.
தமது சுயமுயற்சியால் சிறிய கொட்டகைகளை அமைத்து வாழத் தொடங்கியுள்ள நிலையிலேயே இப்போது பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten