தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 12 mei 2015

ஈழத்தமிழர்களைக் கண்டும் காணாமலும் இருந்த கருணாநிதி மனச் சாட்சி பற்றி பேசுகிறார்: டி.ராஜேந்தர் ஆவேசம்

ஜெயலலிதா விடுதலை தீர்ப்பு! முழு விவரம்!
[ செவ்வாய்க்கிழமை, 12 மே 2015, 07:47.49 AM GMT ]
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கான காரணங்களை உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் விரிவாக தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தார்.
விடுதலை செய்வதற்கான காரணங்களை அவர் தனது 919 பக்க தீர்ப்பில் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். அந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:
* மேல்முறையீட்டு வழக்குகளில், அரசு தரப்பின் வாதம் உண்மையானது என்றும், மேல்முறையீட்டு மனுதாரர்களின் குற்ற நிரூபணம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகவும் விசாரணை நீதிமன்றங்களை போலவே, மேல்முறையீட்டு நீதிமன்றத்தையும் திருப்திப்படுத்த வேண்டும்.
* விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்று மேல்முறையீட்டு மனுதாரர்கள் இந்த நீதிமன்றத்தை திருப்திப்படுத்த வேண்டியது இல்லை. ஒட்டுமொத்த ஆதாரங்களையும் ஆய்வு செய்ய வேண்டியது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் வேலை. அந்த வகையில், விசாரணை நீதிமன்றத்துக்கு உள்ள அதே அதிகாரங்கள், மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கும் உள்ளன.
* அதன்படி, ஆதாரங்களை ஆராய்ந்தால், விசாரணை நீதிமன்றத்தின் முடிவுகள் தவறானவை, ஆதாரங்களுக்கு முரணானவை என்றே சொல்லத் தோன்றுகிறது.
* இந்த வழக்கில், வருமான வரித்துறையின் மதிப்பீட்டை விசாரணை நீதிமன்றம் பெரிய ஆதாரமாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஆதாரங்களை உரிய கண்ணோட்டத்தில் பரிசீலிக்கவில்லை.
* குற்றம் சாட்டப்பட்டவர்கள், இந்தியன் வங்கியில் கடன் பெற்றதை விசாரணை நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அந்த கடனை ஒரு வருமானமாக கருதவில்லை. இதன்மூலம், கடனை வருமானமாக கருதாத தவறை விசாரணை நீதிமன்றம் செய்துள்ளது.
மேலும், கட்டுமான செலவு தொடர்பான ஆதாரங்களை முறையாக ஆராய தவறி விட்டது. கட்டுமான செலவாக, 20 சதவீத செலவை கழித்துக் கொள்ளலாம் என்று சர்வசாதாரணமாக முடிவு செய்து விட்டது. இந்த 20 சதவீத கழிவு என்பது சந்தேகத்துக்கு உரிய வகையிலும், யூகத்தின் பேரிலும் கணக்கிடப்பட்டுள்ளது.
* மேலும், (சுதாகரன்) திருமண செலவை ரூ.3 கோடி என்று விசாரணை நீதிமன்றம் மதிப்பிட்டுள்ளது. அந்த ரூ.3 கோடியை முக்கிய குற்றவாளிதான் (ஜெயலலிதா) செலவழித்தார் என்பதற்கு ஏற்கத்தக்க ஆதாரம் ஏதும் இல்லை. அதையும் மீறி, திருமண செலவு ரூ.3 கோடி என்ற முடிவுக்கு வந்துள்ளது.
* திருமண செலவு ரூ.3 கோடி என்றும், அந்த தொகையை முக்கிய குற்றவாளியின் செலவு கணக்கில் சேர்த்ததும் முறையல்ல.
* 4 குற்றவாளிகளும் குற்றச்சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை பொறுத்தவரை, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் முக்கிய குற்றவாளியுடன் ஒரே வீட்டில் வசித்தார்கள் என்பதை மட்டும் வைத்து அவர்கள் குற்றச்சதியில் ஈடுபட்டதாக கூறிவிட முடியாது.
* ஒரு சட்டவிரோதமான காரியத்தை செய்ய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் இடையே ஒப்பந்தம் உருவானால்தான், அதை சதியாக கருத வேண்டும். சதி நடந்தது என்பதையும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த சதியில் பங்கேற்றனர் என்பதையும் நம்புவதற்கு காரணம் இருக்க வேண்டும்.
* ஆனால், இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள், ஜெயலலிதாவை தவிர மற்ற 3 பேரும், பெருமளவு கடன் வாங்கி, விவசாய நிலங்கள், நிறுவனங்கள் போன்ற அசையா சொத்துகளை வாங்கியதாக தெரிவிக்கின்றன.
* எனவே, வருமானம் வந்த வழி, சட்டப்பூர்வமானது. நோக்கம், சட்டப்பூர்வமானது. 4 பேரும் ஒரே வீட்டில் இருந்தனர் என்ற ஒரே காரணத்துக்காக, 4 பேரும் சதி செய்தனர், முறைகேடான வழிகளில் சொத்துகள் வாங்கினர் என்ற முடிவுக்கு வர முடியாது.
* ஒட்டுமொத்த சூழ்நிலைகள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்து பார்க்கும்போது, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பும், முடிவும் பலவீனமாக உள்ளது. சட்டப்படி ஏற்க முடியாததாக இருக்கிறது.
* குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துகளையும், நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளின் சொத்துகளையும் அரசு தரப்பு ஒன்றாக சேர்த்துள்ளது. கட்டுமான செலவாக ரூ.27 கோடியே 79 லட்சத்து 88 ஆயிரத்து 945-ஐயும், திருமண செலவாக ரூ.6 கோடியே 45 லட்சத்து 4 ஆயிரத்து 222-ஐயும் சேர்த்துக் கொண்டு, மொத்த சொத்து மதிப்பு ரூ.66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரத்து 573 என்று மதிப்பிட்டுள்ளது.
* மிகைப்படுத்தப்பட்ட கட்டுமான செலவையும், திருமண செலவையும் கழித்து விட்டோம் என்றால், மொத்த சொத்து மதிப்பு ரூ.37 கோடியே 59 லட்சத்து 2 ஆயிரத்து 466 ஆகும். ஆடைகள் மற்றும் செருப்புகளின் மதிப்பு குறைவாகவே இருப்பதால், அந்த செலவை நான் கழிக்கவில்லை.
* குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்களின் மொத்த வருமானம் ரூ.34 கோடியே 76 லட்சத்து 65 ஆயிரத்து 654 ஆகும்.
* சொத்து மதிப்பில் இருந்து மொத்த வருமானத்தை கழித்து விட்டால் வரும் தொகை ரூ.2 கோடியே 82 லட்சத்து 36 ஆயிரத்து 812 ஆகும். இதுவே, வருமானத்துக்கு மீறிய சொத்து ஆகும். இந்த தொகை மொத்த வருமானத்தில் 8.12 சதவீதமே ஆகும்.
* கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி என்பவரின் வழக்கில், சொத்துக்குவிப்பு வருமானத்தை விட 10 சதவீதம்வரை இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
* சொத்து குவிப்பு வருமானத்தை விட 20 சதவீதம்வரை இருந்தால், அதை அனுமதிக்கத்தக்க அளவாக கருதலாம் என்று ஆந்திர அரசு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போதைய பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, 10 முதல் 20 சதவீதம் வரையிலான சொத்து குவிப்பை அனுமதிக்கத்தக்க அளவாக எடுத்துக் கொள்ளலாம்.
* இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்து குவிப்பு வருமானத்தை விட 8.12 சதவீதமே இருப்பதால், அது அனுமதிக்கத்தக்க அளவுக்குள்தான் இருக்கிறது. ஆகவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை பெற தகுதியானவர்கள்.
* முக்கிய குற்றவாளியே விடுதலை செய்யப்படும்போது, சிறிய பங்கு வகித்த மற்ற 3 பேரும் விடுதலை பெற தகுதியானவர்கள்தான்.
* ஆகவே, அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் 4 பேரும் விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீதான குற்ற நிரூபணமும், சிறைத் தண்டனையும் ரத்து செய்யப்படுகிறது.
* அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

ஈழத்தமிழர்களைக் கண்டும் காணாமலும் இருந்த கருணாநிதி மனச் சாட்சி பற்றி பேசுகிறார்: டி.ராஜேந்தர் ஆவேசம் 
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர் மாநாடு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போது, சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதாவை நான் ஆதரிக்கின்றேன். அம்மா மீது வழக்குத் தொடுத்தவர்கள் குற்றமற்றவர்களா.
தர்மம் நிறைந்தவர்களா இவர்கள் மீது எந்த வழக்கும் இல்லாதவர்களா நீதிமன்றத்தையும் மீறி மனச் சாட்சி ஒன்று குறித்து கலைஞர் பேசியிருக்கின்றார். இவரை நம்பியிருந்தவர்களையும் ஈழத்தமிழர்களையும் கண்டும் காணாமலும் கை கழுவிய கலைஞர் அவர்களுக்கு இருக்கிறதா மனசாட்சி என்பதே என்னுடைய கேள்வி அது இல்லாததால் தான் சட்டமன்றத்திலும் சரி பாராளுமன்றத்திலும் சரி மக்கள் மன்றத்திலும் சரி நீதிமன்றத்திலும் சரி இவர்கள் அடைந்திருக்கிறார்கள் தோல்வி எனத் தெரிவித்தார்.
நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதிமன்றம் ஒன்று இருக்கிறது. அது தான் மனச்சாட்சி என்ற நீதிமன்றம். அது அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது என திமுக தலைவர் கருணாநிதி,  ஜெயலலிதா விடுதலை பற்றி கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten