தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 13 mei 2015

தீர்ப்பை திருத்த முடியாது! ஜெயலலிதா பதவியேற்க தடை இல்லை!

முதல்வராக பதவியேற்க தயங்கும் ஜெயலலிதா?
[ புதன்கிழமை, 13 மே 2015, 09:41.49 AM GMT ]
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை ஆனதும், சில நாட்களிலேயே ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவி ஏற்பார் என தெரிவித்த நிலையில், தீர்ப்பு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையால், முட்டுக்கட்டை விழுந்துள்ளது.
இதனால் மக்களின் முதல்வராகவே ஜெயலலிதா நீடிப்பாரோ என்ற கலக்கம் அதிமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
11ம் திகதி விடுதலையான ஜெயலலிதா எதிர்வரும் 17 ஆம் தேதி முதல்வராக பதவியேற்பார் என்றும், அதற்காக தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறை புதுப்பிக்கப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் தீர்ப்பு வெளியாகி 3 நாட்களாகியும் இந்தச் செய்திகளை உறுதிப்படுத்தும் நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை. ஜெயலலிதாவிடம் இருந்து ` எதிர்க்கட்சிகள் காழ்ப்புணர்வு செயல்களை நிறுத்திக்கொள்ளவேண்டும்` என்று அறிக்கை வெளிவந்ததோடு சரி. வேறு எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் 11 ஆம் திகதி அடித்த ஆனந்த அலை இப்போது அதிமுகவினரிடம் அடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நீதிபதி குமாரசாமி, தனது தீர்ப்பில் தவறான கணக்கீடுகள் இருப்பதாக கூறப்படுவது குறித்து இன்று ஆலோசித்து வருவதாக வெளியாகி உள்ள தகவல்கள், அதிமுக வட்டாரத்தை மேலும் கலக்கமடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த இரு நாட்களாக அஷ்டமி, நவமி இருந்ததால் போயஸ் தோட்டத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
அரசியல் குறித்து நன்கு அறிந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்த விசயத்தைப்பொறுத்தவரை பொறுமையாக இருப்பதையே விரும்புகிறார் போலும். முதலில் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை முழுமையாக தெரிந்து கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதன் பிறகு தனது வழக்கறிஞர்களுடன் தீர ஆலோசனை நடத்தி, பின்னர் ஒரு உறுதியான முடிவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாமக, மற்றும் திமுக,மதிமுக உள்ளிட்ட கட்சிகள் குமாரசாமி வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா பெற்ற கடன்களின் கூட்டுத் தொகை தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக புகார் கிளப்பி வருகின்றன. அந்தத் தவறான தொகையின்படி தீர்ப்பு வழங்கி இருப்பது சட்டத்துக்கு புறம்பானது என்று புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், விவகாரம் வேறு திசையில் பயணிக்கிறது என்றே தெரிகிறது.
இதுபற்றி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக யாராவது மேல்முறையீடு செய்தால் எத்தகைய சட்ட ரீதியிலான பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று ஜெயலலிதா தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவே கர்நாடக அரசின் முடிவை பொறுத்தே ஜெயலலிதா தனது அடுத்தக் கட்ட நடவடிக்கையை மேற்கொள்வார் என்று தெளிவாகத் தெரிகிறது. இதனால் இந்த வாரம் அவர் பதவி ஏற்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதாவை நேற்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியுள்ளார். அவர்கள் மத்தியில் என்ன விவாதம் நடந்தது என்று தெளிவாகத் தெரிய வில்லை. ஆனால் அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள் 155 பேரும் தொடர்ந்து சென்னையில் இருக்க தலைமை உத்தரவிட்டுள்ளது. அதனால் அவர்கள் எதிர்பார்ப்புகளுடன் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கி உள்ளனர்.
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக அமர்ந்தால் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்றும், அதில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், சி.வி.சண்முகம் மற்றும் சபாநாயகராக இருந்த ஜெயக்குமார் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாகப் பதவி ஏற்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஜெயலலிதாவிடம் இருந்து அடுத்து என்ன அறிவிப்பு வரும் என்று அதிமுக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என்று அனைவரின் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.



தீர்ப்பை திருத்த முடியாது! ஜெயலலிதா பதவியேற்க தடை இல்லை!
[ புதன்கிழமை, 13 மே 2015, 02:45.57 PM GMT ]
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பில் குளறுபடி உள்ளதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், தீர்ப்பில் திருத்தம் செய்யும் அதிகாரம் அவருக்கு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்துள்ள தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்டோர் வங்கிகளில் இருந்து வாங்கிய கடன் தொகை குறித்த கூட்டலில் தவறு நடந்து இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், நீதிபதி குமாரசாமி தனது உதவியாளர்களுடன் இன்று புதன்கிழமை தீர்ப்பு வழங்கிய அறை எண் 14ல் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.
தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், ஜெயலலிதா விடுதலை தீர்ப்பில் தவறு இருப்பதாக கூறி வரும் நிலையில், குமாரசாமி அவசரமாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீர்ப்பை திருத்த முடியாது
மேலும், இந்த தகவல் அதிமுக வட்டாரத்திலும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பை திருத்தம் செய்யவோ அல்லது திரும்பப் பெறவோ அல்லது ஜெயலலிதா விடுதலைக்கு தடை விதிக்கவோ குமாரசாமிக்கோ அல்லது கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கோ அதிகாரம் இல்லை என்று சட்ட நிபுணர்கள் கூறுவதாக கர்நாடக உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தீர்ப்பில் கூட்டல், கழித்தல் போன்ற எண்கள் தொடர்பான தவறுகள் இருக்கும் பட்சத்தில் அதனை மட்டும் திருத்திக் கொள்ள தீர்ப்பு வழங்கிய குமாரசாமிக்கு அதிகாரம் உள்ளது என்றும், அதையும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பிய பின்னரே செய்ய முடியும் என்றும், அதே சமயம் அவ்வாறு செய்யப்படும் திருத்தங்களால் தீர்ப்பில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அதனை செய்ய அதிகாரம் இல்லை என்றும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டின் போதே அத்தகைய தவறுகளை களைய முடியும் என்றும் சட்ட நிபுணர்கள் கூறுவதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா பதவியேற்க தடை இல்லை
இதனால் ஜெயலலிதா தற்போதைக்கு முதல்வராக பதவியேற்பதில் தடையேதும் இல்லை என்பதால், அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
இருப்பினும் தனக்கு சாதகமாக கிடைத்த தீர்ப்பு குறித்து சர்ச்சை எழுந்தது குறித்து ஜெயலலிதா தரப்புக்கு சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


Geen opmerkingen:

Een reactie posten