திருமறைக்கலா மன்றத்திற்கு வழங்கப்பட்ட தமது காணியை திரும்ப தராவிடில் தாம் தற்கொலை செய்து கொள்ளவும் தயங்கமாட்டோம் என வவுனியா, பேயாடி கூழாங்குளம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
வவுனியா, நொச்சிமோட்டை, பேயாடி கூழாங்குளம் பகுதியில் உள்ள பொதுத் தேவைக்கான நிலத்தை வவுனியா பிரதேச செயலாளர் திருமறைக் கலாமன்றம் என்ற அமைப்புக்கு வழங்கியுள்ளார். எனவும் அதனை மீட்டுத் தருமாறு கோரி பேயாடி கூழாங்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த காணியில் கட்டடம் நிர்மாணிப்பதற்கான ஆரம்ப வேலைகளைச் செய்ய அப் பகுதி மக்கள் தடையாக இருப்பதாக தெரிவித்து திருமறைக் கலாமன்றத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனால் இரு பகுதியினருக்கும் இடையில் முரண்பாடான நிலைமை காணப்பட்டது. இதனையடுத்து இரு பகுதியினரும் இது தொடர்பில் வட மாகாண சுகாதார மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ப.சத்தியலிங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இரு பகுதியினரையும் அமைச்சு அலுவலகத்திற்கு அழைத்து அவர் பேசினார்.
அப்போது போது கருத்துத் தெரிவித்த திருமறை கலாமன்றத்தினர், குறித்த காணி தமக்கு பல மாதங்களுக்கு முன்னரே பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டதாகவும் தாம் அதில் முன்பள்ளி மற்றும் கலாமன்றம் ஆகியவற்றை வெளிநாட்டு சமய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
காணியை வழங்கியபோது அப் பகுதி மக்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை எனவும் தற்போது அடிக்கல் நாட்டிய பின்னரே மக்கள் காணி தர மறுக்கின்றனர் எனவும் தெரிவித்தனர்.
மேலும் கலைகளை அழியவிடாது பாதுகாக்கும் நோக்கில் செயற்படுவதாகவும் தமக்கு ஒதுக்கப்பட்ட காணியை தமது தேவைக்கு ஏற்ப தந்துவிட்டு மிகுதியை அப்பகுதி மக்களின் பொது தேவைக்கு எடுக்குமாறும் கோரினர்.
இதனை மறுத்த அப்பகுதி மக்கள், கிராமத்தின் ஒரு பகுதி இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த பாடசாலை கூட தற்போது வேறு ஒரு கிராமத்தில் இயங்குகிறது. கிராம அபிவிருத்திச் சங்கம், முன்பள்ளி, மற்றும் பொதுக் கட்டடங்களைக் கட்டுவதற்கு வேறு காணி இல்லை. இக் காணியை திருமறைக் கலாமன்றத்திற்கு வழங்கினால் பொதுத் தேவைகளுக்கான கட்டடங்களை எங்கு அமைப்பது.
திருமறைக் கலாமன்றத்திற்கு வேறு இடத்தில் காணி வழங்க முடியும். எமது கிராமத்தை வேறு இடத்தில் உருவாக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பினர். இக் காணியை பிரதேச செயலாளர் திருமறைக் கலாமன்றத்திற்கு வழங்கியது தமக்கு தெரியாது எனவும் இரு பகுதியினரும் தமக்கு இது தொடர்பில் தெரிவிக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கூறினர்.
அத்துடன் தமது பழமையான கிராமத்திற்கான இந்தக் காணியை எமக்கு வழங்காதுவிடின் தற்கொலை செய்வோம் எனவும் கூறினர். இது தவிர, அப்பகுதி கிராம அலுவலர் சில காணிகளைப் பிடித்து வேலி அடைத்து வைத்துள்ளார். அதனை விற்பனை செய்யவும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.
இவற்றையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வடக்கு அமைச்சரிடம் கோரினர். எனினும் இப்பிரச்சினை குறித்து வவுனியா பிரதேச செயலாளருடன் கலந்துரையாடிய பின்னரே தன்னால் தீர்க்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பானது வவுனியாவில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதை விட காணிகளுக்காக போராடியே வாழ்க்கையின் பாதி நாட்கள் கழிவதாக அப்பகுதி மக்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyFSUSUiv4H.html
Geen opmerkingen:
Een reactie posten