தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 mei 2015

பிரபாகரனை ஒழித்து விட்டோம்? மஹிந்தவிடமிருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளோம்!: சரத்பொன்சேகா

வித்தியாவின் கொலையின் பின்னால் உள்நோக்கம் கொண்ட மூலசக்தி: நாடாளுமன்றில் சரவணபவன் எம்.பி குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 25 மே 2015, 04:00.47 AM GMT ]
புங்குடுதீவு மாணவியின் கொலை ஒரு பாலியல் வேட்கை அடிப்படையில் மட்டும் நடந்த கொலை என்றோ, தனி மனித விரோதங்கள் காரணமாக நடந்த கொலை என்றோ நம்பி விடமுடியாது. இதன் பின்னணியில் உள்நோக்கம் கொண்ட மூலசக்தி இருந்துள்ளது என்றே கருதவேண்டியுள்ளது என ஈ.சரவணபவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றில் ஆற்றிய உரையின்போதே அவர் இவ்வாறு கூறினார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
நான் இந்தச் சபையில் மிகவும் மனம் நொந்தநிலையிலும் ஆத்மார்ந்த கோபத்துடனும் உரையாற்றவேண்டிய நிலையில் உள்ளேன்.
புங்குடுதீவிலுள்ள பள்ளி மாணவி ஒருவர் சில மிருகத்தனமான நபர்களால் கடத்தப்பட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப் படுபயங்கரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
முழு மனித குலமுமே வெட்கித் தலைகுனிய வேண்டிய இழிச்செயல் இது என்பதில் நீங்கள் அனைவரும் என்னுடன் உடன் படுவீர்கள் என நம்புகிறேன்.
கடந்த காலங்களில் வடக்கில் சிறுமியர், மாணவிகள் உட்படப் பெண்களுக்குப் பாலியல் பாதுகாப்போ, உயிர்ப் பாதுகாப்போ இல்லாத ஒரு நிலை நிலவியது. அப்படியான சில குற்றங்களில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இன்னும் சிலவற்றில் சிலர் கைது செய்யப்பட்டாலும் ஒரு சில நாள்களில் பிணையில் விடப்பட்டுச் சுதந்திரமாக நடமாடும் நிலை இருந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்பு இப்படியான கொடுமைகளிலிருந்து தமிழ்ப் பெண்களுக்கு விடிவு கிடைக்கும் என நாம் நம்பினோம்.
எமது நம்பிக்கையைச் சிதறடிக்கும் வகையிலும் அந்த இருண்ட யுகம் இன்றும் கலையவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் வகையிலும் இந்த மனிதகுல விரோத நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
காரைநகரில் சிறுமி ஒருத்தி கடற்படைச் சிப்பாய் ஒருவரால் ஏமாற்றிப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை, பாலியல் தொந்தரவு காரணமாகத் தீவுப் பகுதியில் ஒரு மருத்துவ மாது தற்கொலை செய்தமை, நெடுங்கேணியில் பள்ளிச் சிறுமி ஒருத்தி படையினன் ஒருவனால் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டமை,
கனகராயன் குளத்தில் ஒரு மாணவியின் கொலை என அடுக்கடுக்காக நடந்த பாலியல் கொலைகள் தொடர்பான சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
இது சம்பந்தமாக எடுக்கப்பட்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.
எனவேதான் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பாக நியாயபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரி வடபகுதியே கொதித்தெழுந்தது.
இது ஒரு பாலியல் வேட்கை அடிப்படையில் மட்டும் நடந்த கொலை என்றோ தனி மனித விரோதங்கள் காரணமாக மட்டும் நடந்த கொலை என்றோ நம்பி விடமுடியாது.
இந்தக் கொலையின் பின்னால் ஒரு பெரும் உள்நோக்கம் கொண்ட மூலசக்தி இருந்துள்ளது என்றே கருதவேண்டியுள்ளது.
சந்தேக நபர் ஒரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர் எனவும், மாணவியின் தாயார் அவருக்கெதிராகச் சாட்சி சொல்லியதாலேயே பழிவாங்கும் முகமாக மாணவி கொல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கொலையில் சம்பந்தப்பட்டதாகக் கொழும்பிலிருந்து வந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவிஸ் நாட்டிலிருந்து திரும்பி வந்த ஒரு வரும் இதில் சம்பந்தப்பட்டவர் எனவும் அவர் சம்பவத்தைப் படமெடுத்தார் எனவும் கூறப்படுகிறது.
இதில் சம்பந்தப்பட்டவர் கொள்ளையில் ஈடுபட்டவர் என்றால் இவரின் கொள்ளைக் கோஷ்டி மற்ற நபர்கள் யார்? அவர்கள் வேறு எங்கு கொள்ளைகளில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஒரு தனியான கொள்ளைக் கோஷ்டியா அல்லது அவர்களை இயக்கும் பின்னணிச் சக்தி உண்டா? என்ற கேள்விகள் எழுகின்றன. இவர்கள் இந்தக் கொலையைத் தாங்களே செய்தார்களா அல்லது கூலிக்குச் செய்தார்களா என்பதும் அறியப்படவேண்டும்.
எனவே இந்தச் சம்பவம் தொடர்பாக ஆழமாக, எந்த ஒரு சக்தியினதும் அழுத்தங்களுக்கு உட்படாத வகையில் புலனாய்வு செய்யப்பட வேண்டும். கடந்த காலத்தில் இப்படியான சம்பவங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட திருப்தியற்ற நடவடிக்கைகள் போல இப்போதும் இருந்துவிடக் கூடாது.
அவ்வகையிலேயே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோரி வடபகுதி முழுவதும் போராட்டங்கள் எழுச்சி பெற்றன. மாணவர்கள், ஆசிரியர்கள்,பல்கலைக்கழகச் சமூகம், வணக்கத்தலங்கள், பொதுநிறுவனங்கள் என வடபகுதியில் முழு மக்களுமே நீதி கோரி வீதியில் இறங்கினர். மக்கள் நீதியைக் கோரி ஜனநாயக வழியிலேயே தங்கள் போராட்டங்களை நடத்தினர்.
அதை யாரும் தடுக்கவும் முடியாது. தவறு எனக் கண்டிக்கவும் முடியாது. ஏனெனில் அது அவர்களின் மறுக்க முடியாத உரிமை. மக்களின் போராட்டங்கள் நியாயமானவை என்பதால் அவற்றுள் சில வி­மிகளால் திட்டமிட்ட முறையில் வன்முறை புகுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.
இவர்கள் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் படுவதையும் எவ்வித அழுத்தங்களுக்கும் உட்படாமல் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதைக் குழப்பவுமே இவ் வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என நான் திடமாக நம்புகிறேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyFRZSUhwyG.html


யாழ்ப்பாண நீதிமன்ற தாக்குதலுக்கு பின்னால் வெளியாரின் தொடர்பு : கூட்டமைப்பு
[ திங்கட்கிழமை, 25 மே 2015, 02:14.08 AM GMT ]
யாழ்ப்பாண நீதிமன்ற தாக்குதலின் பின்னணியில் வெளியாரின் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எழுப்பியுள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
தாக்குதல் சம்பவத்தின் போது பலத்த இராணுவ, பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்தநிலையில் புலனாய்வு அதிகாரிகளின் தனிப்பட்ட செல்வாக்கும் இந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்திருக்கலாம்.
அத்துடன் தாக்குதலின் போது அங்கு நின்ற பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் பயங்கரவாதம் இன்னும் இருப்பதாக தென்னிலங்கைக்கு காட்டி, பொதுத்தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளை பெறும் முயற்சியாக ஒரு தரப்பினர் இந்த நீதிமன்ற தாக்குதலை தூண்டிவிட்டிருக்கலாம் என்று யாழ்ப்பாணத்தில் கதைகள் உலாவுகின்றன.

யாழ். போராட்டம் தொடர்பில் கைதான சந்தேகநபர்களில் இந்திய சுற்றுலாப் பயணிகள்?
[ திங்கட்கிழமை, 25 மே 2015, 12:19.58 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இந்திய சுற்றுலாப் பயணிகளும் உள்ளடங்குகின்றனர்.
புங்குடுதீவு மாணவி கொலைக்கு எதிர்ப்பு வெளியிட்டு நடத்தப்பட்ட போராட்டம் கலகமாக வெடித்து யாழ்ப்பாண நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 130 பேரை பொலிஸார் கைது செய்து அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் மூன்று இந்திய சுற்றுலாப் பயணிகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண நூலகத்தை பார்வையிடச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய பிரஜைகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களுக்கும் வன்முறைகளுக்கும் தொடர்பில்லை என இந்திய தூதரக அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும், விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வார கால சுற்றுலா ஒற்றுக்காக கைது செய்யப்பட்ட இந்தியர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.


பிரபாகரனை ஒழித்து விட்டோம்? மஹிந்தவிடமிருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளோம்!: சரத்பொன்சேகா
[ ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2015, 09:18.11 PM GMT ]
எமது நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருந்து வந்த பிரபாகரனை ஒழித்து விட்டோம். அதற்கு பிறகு எமக்கு தடையாக இருந்தவர் மஹிந்த ராஜபக்சவிடமிருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளோம் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கேகாலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கடந்த ஆட்சியாளரை விமர்சித்து தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தவில்லை. எமது கட்சிக்கு பொதுவான கொள்கை திட்டம் உள்ளது. எனது அரசியலுக்கு 5 வருடம் ஆகின்றது.
அதில் இரண்டரை வருடம் சிறையில் கழித்தேன். சிறையிலிருந்து வெளியே வரும்போது புதிய அரசியலை முன்னெடுத்து செல்லும் கொள்கையில் வெளியே வந்த போது பசில் ராஜபக்ச சிறையில் உள்ளார்.
சிறையிலிருந்து வெளியே வந்த போது எமது கட்சி கூட்டங்கள் நடத்த கூட இடம் வழங்கப்படவில்லை. இதற்கு முன் கேகாலை நகரில் வாகனத்தின் மேல் ஏறி கூட்டம் நடத்தினோம்.
அந்நேரத்தில் இங்குள்ள பொலிஸ் பொறுப்பதிகாரி எம்மை வந்து மிரட்டினார். சுதந்திரமான அரசியல் நடத்த முடியாமல் இருந்தது. அவ்வாறான நிலைமையில் தான் மஹிந்த ராஜபக்ச ஆட்சி செய்து வந்தார்.
அவர்கள் செய்ததை இன்று அனுபவிக்கின்றனர். எமது நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருந்து வந்த பிரபாகரனை ஒழித்து விட்டோம். அதற்கு பிறகு எமக்கு தடையாக இருந்தவர் மஹிந்த ராஜபக்சவிடமிருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளோம்.
இன்று நாட்டில் ஒரு கட்சிக்கும் அரசியல் நடத்த சுதந்திரம் கிடைத்துள்ளது. அரச ஊழியர்களுக்கு தங்களது கடமையை செய்ய எந்தவொரு அரசியல் அழுத்தமும் இல்லை.
நல்லாட்சியில் நாட்டை வழி நடத்தி சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனக்குறிப்பிட்ட அவர்,
ஜனவரி மாதம் 8 ஆம் திகதியின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சியில் எந்தவொரு நன்மையும் கிடைக்கவில்லை. எனக்கு மறுக்கப்பட்ட ஓய்வூதியம் மட்டும் கிடைத்ததே தவிர அரசால் எனக்கு எரிபொருள் கூட கிடைக்கவில்லை எனவும், அரசிடம் எமக்கு எந்தவொரு விருப்பும் இல்லை எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyFRYSUhv7A.html


Geen opmerkingen:

Een reactie posten