[ வீரகேசரி ]
கடினமான விவகாரங்கள் இப்போதும் தீர்வுகாணப்படாமல் இருக்கின்றபோதிலும் கூட ஐக்கியமான சமாதானமான இலங்கையே தங்களின் தூர நோக்கு என்பதை தமிழ் தலைவர்கள் பகிர்ந்து கொண்டிருந்தனர். அது ஆர்வமூட்டும் விடயமாக இருந்தது என்றும் ஜோன் கெரி கூறியுள்ளார்.
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தூதுக்குழுவினர் ஆகியோரை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை நைரோபி நோக்கி புறப்படுவதற்கு முன்னர் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே தமிழ் தலைவர்களது கருத்து தொடர்பான விடயங்களை கூறியிருக்கின்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை ஜோன்கெரி சந்தித்து பேசியிருந்தார்.
இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது இலங்கையில் ஏற்பட்டு வரும் புதிய அரசியல் சூழலை தமிழ் தரப்பினர் சரியாக பயன்படுத்த வேண்டும். நீண்டகாலமாக புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கு முறையான அதிகாரப்பகிர்வு அவசியமானதாகும்.
அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கு அமெரிக்கா பக்கத்துணையாக இருக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் ஜோன் கெரி எடுத்துக் கூறியிருந்தார்.
சந்திப்பின் போது தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூறிய கூட்டமைப்பினர் தமிழர்களின் பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வினைக் காண்பதற்கு அமெரிக்கா துணைநிற்க வேண்டும்.
ஐக்கிய இலங்கைக்குள் பிரிக்கப்படாத தேசத்தில் அதிகாரப்பகிர்வையே நாம் கோரி நிற்கின்றோம். அதிகாரப் பகிர்விற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுடன் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
கூட்டமைப்பினர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலேயே அமெரிக்க இராஜாங்க செயலாளர் தனது ஆர்வத்தை வெளியிட்டிருந்தார். தமிழ் தலைமைகள் ஐக்கியமானதும், சமாதானமானதுமான இலங்கையே தமது தொலைநோக்கு என்று கூறியுள்ளன. அது தனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது என்று ஜோன் கெரி கூறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் கருத்தே காரணமாக அமைந்திருந்தது.
உண்மையிலேயே தமிழ் தலைமைகள் நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதல் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை காண்பதற்கே முயன்று வந்தன. அமெரிக்க இராஜாங்க செயலாளர் கூறுவது போல் இதுவொன்றும் புதிய விடயமல்ல.
தந்தை செல்வநாயகம், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அஹிம்சா வழியில் முயற்சி மேற்கொண்டார். 1956ம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 1965ம் ஆண்டு டட்லி-–செல்வா ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.
இவ்வாறு பல ஒப்பந்தங்களும் புரிந்துணர்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் சிங்கள அரசியல் தலைமைகள் அந்த ஜனநாயக ரீதியிலான ஒப்பந்தங்கள் எதனையும் உரிய வகையில் நிறைவேற்ற முன்வரவில்லை.
ஜனநாயக வழியில் நடத்தப்பட்ட போராட்டங்கள் அனைத்தும் சிங்கள பேரினவாத அரசாங்கங்களினால் அடக்கி ஒடுக்கப்பட்டன. இவ்வாறான நிலையில் தான் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண்பதற்கு சிங்கள அரசியல் தலைமைகள் முன்வராமை காரணமாகவே ஈழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும், வன்முறைகள் அற்ற வகையிலேயே தமிழ் தலைமைகள் செயற்பட்டு வந்தன.
அதனையும் சிங்களத் தலைமைகள் கணக்கெடுக்காததுடன் தரப்படுத்தல் முறையினை அமுல்படுத்த முற்பட்டதுடன் ஆக்கிரமிப்புக்களிலும், ஈடுபட்டன. இதனால் தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி தனிநாட்டுக்காக போராடும் சூழல் உருவாகியது.
இவ்வாறு போராளிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் தமிழ் மிதவாத தலைமைகள் அவர்களது கோரிக்கைக்கு இணங்காது ஜனநாயக ரீதியில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வைக் காணுமாறே மாறி மாறி வந்த அரசாங்கத் தரப்பினரை வலியுறுத்தி வந்தன.
இத்தகைய நிலையில் தான் மிதவாத தமிழ் தலைமைகள் தமது உயிர்களைக்கூட துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது. பெருமளவான மிதவாத தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். போராட்ட காலத்திலும், அரசாங்கத்துடன் விடுதலைப் புலிகள் பேச்சுக்களை நடத்திய போதிலும், அந்த பேச்சுவார்த்தைகள் கூட வெற்றி பெறவில்லை.
பேச்சுவார்த்தைகள் குழப்பியடிக்கப்பட்டமைக்கு ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை சுமத்திவந்த நிலையில் தமிழ் மிதவாத தலைமைகள் தொடர்ந்தும் அரசியல் தீர்வை வலியுறுத்தியே வந்தன.
2001ம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து நோர்வேயின் அனுசரணையுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன.
இதன்போது ஒஸ்லோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கத் தரப்பினர் உடன்பட்டிருந்தனர். ஆனாலும், இறுதியில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததுடன் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமானது பொதுமக்களின் உயிரிழப்புக்களை கணக்கிலெடுக்காத நிலையில் கொடூர யுத்தத்தை நடத்தியது. இந்த யுத்தத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர்.
இவ்வாறு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அரசியல் தீர்வுக்கான அவசியத்தை வலியுறுத்தியே வந்தது.
விடுதலைப் புலிகள் தனிநாடு கோரி போராடியபோதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது தமிழ் கட்சிகளின் தலைமைகளோ ஒருபோதும் ஈழத்தைக் கோரவில்லை. ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பரவலாக்கல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே மிதவாத தமிழ் தலைமைகளின் கோரிக்கையாக இருந்து வந்திருக்கின்றது. தற்போதும் இருந்து வருகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வைக் காண்பதற்கு தாம் தயார் என்று பல தடவைகள் கூறியிருந்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கக் காலத்தில் 2011 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் 16 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது அரசியல் தீர்வுத் திட்டமொன்றையும் கூட்டமைப்பு சமர்ப்பித்திருந்தது. ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதிகாரங்களை பரவலாக்க வேண்டும் என்பதே கூட்டமைப்பின் கோரிக்கையாக இருந்தது.
ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து சமூகங்களும் சம உரிமையுடன் நடத்தப்பட்டால் சகல சமூகங்களினதும் உரிமைகள் மறுக்கப்படாவிட்டால் நாட்டை பிளவுபடுத்த வேண்டுமென்று யாருமே கோரப்போவதில்லை.
தற்போதைய நிலையில் தமிழ் தலைமைகள் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண முன்வந்துள்ளமை பாராட்டத்தக்கது என்ற தொனியில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் கருத்து தெரிவித்துள்ளமை தவறானதாகும்.
உண்மையிலேயே தமிழ் மிதவாதத் தலைவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே அன்று முதல் இன்று வரை உள்ளனர் என்பதை அமெரிக்கா உணர்ந்து கொள்ளவேண்டும்.
அதேபோல் தமிழ் மிதவாதத் தலைவர்களின் கோரிக்கைகளை மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கணக்கிலெடுக்கவில்லை. மூன்று தசாப்தகால யுத்தத்திற்குப் பின்னரும் நிலைமை இவ்வாறு தான் இருக்கின்றது என்பதை அமெரிக்க இராஜாங்க செயலாளர் உணர்ந்து கொள்வது நல்லது.
http://www.tamilwin.com/show-RUmtyFTaSUis5B.html
Geen opmerkingen:
Een reactie posten