தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 12 mei 2015

ஜெயலலிதா விடுதலை! வரவேற்கும் இலங்கைத் தமிழ் அரசியல் பிரமுகர்கள்


சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளது குறித்து, இலங்கைத் தமிழர் அரசியல் பிரமுகர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன், விரைவில் அவர் முதல்வர் பதவியை பொறுப்பேற்பார் என்றும் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன்,

“தமிழ்நாட்டில் வலுவானதொரு தலைவர் இருக்க வேண்டியது இலங்கைத் தமிழர்களுக்கு அவசியம். ஜெயலலிதா பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், எமது பிரச்சினைகளைப் பற்றி தமிழ்நாட்டில் பேசுவதற்கு அதிகாரம் கொண்டு யாரும் இருக்கவில்லை.

சென்னையில் வலுவானதொரு தலைவர் இருப்பதன் மூலம், மீனவர்களின் பிரச்சினைக்குக் கூட தீர்வு காண முடியும்.

ஆனால், நல்லாட்சியை எதிர்பார்க்கும் ஒருவர் என்ற வகையில், 18 ஆண்டுகளாக நீடித்த ஒரு வழக்கில் இருந்து இவ்வளவு விரைவாகவும் இலகுவாகவும் அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர், சி.வி.கே. சிவஞானம், கருத்து வெளியிடுகையில்,

“நீதிமன்றத் தீர்ப்புக் குறித்து கருத்து வெளியிடப் போவதில்லை. ஜெயலலிதா மீண்டும் அதிகாரத்துக்கு வருவது இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை தரும்.

எமது போராட்டத்துக்கு எப்போதும் ஆதரவளித்தவர் என்ற வகையில் அவரது விடுதலையை வரவேற்கிறோம். அவர் தொடர்ந்தும் எமது போராட்டத்துக்கு ஆதரவளிப்பார் என்று நம்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்து வெளியிடுகையில்,

“ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். இப்போது அவர் ஊழல் கறை இல்லாமல் ஆட்சிக்கு வர முடியும். சட்ட ரீதியாக அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் கடைசியாக அதிகாரத்தில் இருந்த போது இலங்கைத் தமிழர்களுக்கு நிறைய நன்மைகளைச் செய்துள்ளார்.

சிறிலங்காவுக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதிக்கக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்” என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பும், ஜெயலலிதாவின் விடுதலையை வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமை சபையில் சிறிலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றிய அறிக்கை வெளியாக உள்ள தருணத்தில், ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ள செய்தியானது தமிழர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்.

அவரின் குரல் மறுபடியும் தமிழ்மக்களுக்காக இந்தியாவில் ஓங்கி ஒலிக்கும் என்று அனைத்து தமிழ் மக்களும் மிகுந்த நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் உள்ளார்கள்.

விரைவில் தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு எமது வாழ்த்துக்கள்.” என்று ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா அம்மையாரின் விடுதலையால் ஈழமக்கள் மகிழ்ச்சி!- பா.உறுப்பினர் சி.சிறீதரன்


சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுர் நீதிமன்றால் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் சகல வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டதால் தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அம்மையாரின் விடுதலை தொடர்பாக ஈழத்தமிழ் மக்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளதுடன் மீண்டும் பதவியேற்கவிருக்கும் மாண்புமிகு ஜெயலலிதா ஜெயராம் அவர்களிடம் தங்கள் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பா.உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியிட்டுள்ள மடலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

அம்மா!

ஈழத்தமிழர்கள் மகிழ்கின்ற நாளொன்றை பெங்க@ர் நீதி மன்றால் நீங்கள் விடுதலை செய்யப்பட்ட செய்தி தந்திருக்கின்றது. தமிழ் நாட்டின் பலமும் எண்ணங்களும் ஆதரவும் எங்கள் மக்களின் வாழ்க்கையில் என்றும் இரத்த உறவாகிப் போயிருக்கின்றது.

மாண்புமிகு முன்னாள் தமிழக முதலவர் பொன்மனச்செம்மல் திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் இரக்கமும் ஆதரவும் உதவியும் புரிதலும் ஈழத்தமிழர்களை மெய்சிலிர்க்க வைக்கின்ற ஒன்றாக இன்றுவரை உணரப்படுகின்றது.

எம்.ஜி.ஆர் அவர்கள் நீண்ட ஆயுளுடன் இருந்திருந்தால் என்றோ எமது மக்களுக்கு சுபீட்சம் அமைதி சுதந்திரம் கிடைத்திருக்கும். முள்ளிவாய்க்காலில் ஒரு பெரும் இனப்படுகொலைக்குள் ஈழத்தமிழர்கள் சிக்குண்டு சிதைந்து அகதியாகி நிர்க்கதியாகும் நிலை ஏற்பட்டிருக்காது.

ஆனாலும் அவரின் எண்ணத்தில் எழுந்த அ.இ.அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்பு தங்களிடம் கொடுக்கப்பட்டதில் இருந்து தமிழர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஊற்று மீண்டும் கிளம்பியது. உங்களுக்கு கிடைக்கும் பொருத்தமான காலத்துக்காக ஈழத் தமிழினம் காத்திருந்தது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.

பெரும் இடர்களை கடந்து நீங்கள் மீண்டும் தமிழக முதல்வர் ஆனீர்கள். நீங்கள் பதவியேற்ற காலம் மிகமுக்கியமானது. தமிழகத்தை மட்டுமல்ல எல்லாம் இழந்து நிர்க்கதியாகி நிற்கும் ஈழத் தமிழர்களையும் கைதூக்கி விட்டு காப்பாற்ற வேண்டிய பாரிய பொறுப்பும் உங்கள் கையிலேயே தரப்பட்டது.அது மிகவும் பொருத்தமானதும் கூட.

தமிழக மக்களின் நம்பிக்கையையும் ஈழத்தமிழர்களின் நம்பிக்கையையும் காப்பாற்றும் வகையில் இலங்கையில் தமிழர்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் தமிழக சட்டசபையில் தீர்மானங்களை நிறைவேற்றி தமிழர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ளீர்கள்.

உங்கள் காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான சுபீட்சமான சுதந்திரமான வாழ்வு கிடைக்குமென்று தமிழ் மக்கள் மலையாக நம்புகின்றார்கள். ஈழத்தமிழர்களின் தொப்பூழ் கொடி உறவான தமிழகத்துக்கு நீங்கள் தலைவியாக இருப்பது. எங்கள் பலம்.

எங்களுக்கு வலி வருகின்ற போது காயங்கள் வருகின்ற போது துன்பங்கள் நேர்கின்ற போது எப்படி தமிழகம் துடிக்குமோ அதே வலி உங்களுக்கு துன்பங்கள் நேர்கின்ற போது உங்கள் மீது தடைகள் ஏவப்படுகின்ற பொழுது எங்கள் மக்களுக்கும் ஏற்படுகின்றது.

பெங்களுர் சிறையில் நீங்கள் இருந்த போது ஈழத் தமிழ் மக்கள் மிகவும் கவலை கொண்டிருந்தனர். உங்கள் விடுதலையை அவர்கள் வேண்டி நின்றனர். தமிழகம் வஞ்சகர் கையில் சென்று விடுமோ என்று அஞ்சினர். ஆனால் நீங்கள் மக்களுக்கு செய்த நல்ல காரியங்களில் இருந்த தர்மம் எங்களோடு இருந்ததால் நீங்கள் வென்றீர்கள் விடுதலை ஆனீர்கள்.

மாண்புமிகு அம்மா!

விடுதலையாகி மீண்டும் தமிழகத்தின் அரியணையில் ஏறி நீங்கள் நல்லாட்சி நடத்த இருக்கும் இந்தவேளையில் ஈழத்தமிழர்களின் சார்பில் எம் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எப்பொழுதும் உங்கள் பின்னே நிற்கப் போகும் தமிழ் மக்களுக்காக உங்கள் காலத்தில் உயர்ந்த ஆதரவை தந்து ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழ உங்கள் நல்லாட்சி அதிகாரம் பயன்பட வேண்டுமென உலகத் தமிழினம் எதிர்பார்க்கின்றது.

ஈழத் தமிழர்களுக்கு அருகிருக்கும் பலம் நீங்கள். எப்பொழுதும் ஆட்சிப்பீடம் ஏறும் நிகரற்ற வல்லமையை கொண்டுள்ளீர்கள் நீங்கள்.நீண்ட நெடும் ஆயுளுடன் தமிழ்மக்களுக்காக நீங்கள் வாழவேண்டும் ஆளவேண்டுமென வாழ்த்துகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 May 2015

Geen opmerkingen:

Een reactie posten