யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதியில் முத்திரைச் சந்தைக்குக் கிட்ட அம்பலவாணர் குமாரவேலு என்பவர் காலமாகிவிட்டார். அவரை நாட்டுப்பற்றாளராக அறிவிக்கவும் " இரு வாக்கியங்களில் அரசியல்துறை நடுவர் பணியகத்துக்கு செய்தியை அனுப்பினர்.
ஒரு போராளி இவரது சாவு தொடர்பாக பொட்டம்மானுக்கு அறிவித்தார். சமாதானம் நிலவிய காலப்பகுதி ஆதலால் அரசியற்துறை நடுவப்பணியகம் நல்லூர் வட்டப் பொறுப்பாளரிடம் காலமானவரின் விபரங்கள்- போராட்டப் பங்களிப்பு பற்றிய அறிக்கையினை அனுப்புமாறு கோரியிருந்தது.
ஏற்கனவே தனது பகுதியில் நிகழும் மரணச் சடங்கு என்ற வகையில் அங்கு போயிருந்தாலும் இம்முறை விபரங்களைப் பெறச் சென்றார் வட்டப் பொறுப்பாளர்.
திருமதி குமாரவேலுவைத் தனியாக அழைத்த அவர் தன்னை அறிமுகப்படுத்திய பின் திரு குமாரவேலுவின் போராட்டம் பங்களிப்புப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைக் கூறி உதவுங்கள் என வேண்டிக் கொண்டார்.
அதற்கு அவர் ' எனது கணவருக்குப் போராளிகளுடன் தொடர்பு இருந்தது என்பதே இப்போது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. உண்மையில் இது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது " என்று பதிலளித்தார்.நல்லூர் வட்டப் பொறுப்பாளர் குழம்பியே விட்டார்.
பெண்டாட்டிக்குத் தெரியாமல் கணவர் அப்படி என்ன பங்களிப்புச் செய்திருக்க முடியும். என்று சிந்தித்த அவர் நடுவப் பணியகத்துக்கு விடயத்தைத் தெரிவித்தார்.
அவர்கள் தலைவர் பிரபாகரனோடு தொடர்பு கொண்டு நாட்டுப்பற்றாளர் என்று அறிவிக்கக் கோரிய போராளியின் பெயரைக் குறிப்பிட்டு நடந்த விடயங்களையும் தெரிவித்தனர். அதற்குத் தலைவர் அளித்த பதில் ' அவர் சொன்ன மாதிரியே அறிவியுங்கள்.
விபரங்களைப் பிறகு பெற்றுக் கொள்ளலாம். அதனைப் பெற அவரை உங்களுடைய இடத்துக்கு அழைக்க வேண்டாம். முன் கூட்டியே அவருக்கு அறிவித்து அவருடைய இடத்தில் போய் விபரங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
இது மட்டுமல்ல அவர் இனிமேலும் யாரையாவது இது போன்று அறிவிக்க வேண்டுமெனக் கோரினாலும் இதே நடைமுறையினையே பின்பற்றுங்கள் " என்பதாகும்.
“காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது " என்ற வள்ளுவர் வாக்கை அவர் அறிந்திருந்ததாலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் உதவியவர்களை கட்டாயம் நன்;றியுடன் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் மதிப்பளிக்கப்பட வேண்டியவர்கள். எனவே இந்த விடயத்தில் காலதாமதம் ஆகிவிடக் கூடாது என்பதே அவரது நிலைப்பாடு.
1982--1983 காலப் பகுதியில் திரு குமாரவேலு என்னென்ன வகையில் பங்களிப்புச் செய்திருந்தார் என்பது குறித்து சங்கர் என்ற பெயரில் போராளியொருவர் ' வேரென வாழ்ந்தவர் " என்ற தலைப்பில் நமது ஈழநாடு பத்திரிகையில் நன்றியோடு ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
அதில் பொட்டம்மான்-- ஞானம் முதலான போராளிகள் போராட்டத்தில் முழு நேரமாக இணைந்த புதிதில் விசுவமடுவில் இருந்த தனது காணியில் அவர்களைப் பாதுகாத்த விடயமும் அடங்கும்.
இவ்வளவும் செய்தும் யாழ்ப்பாணத்தில் இருந்த தனது துணைவியாரோடு அவர் இது பற்றி எதுவுமே தெரிவித்திருக்கவில்லை என்பது அவரது சாவின் பின்பே புரியவந்தது.
மட்டுநகரில் ஒரு பெண்மணி இருந்தார். கல்லாறைப் பிறப்பிடமாகக் கொண்டவர் அவர். ஆண்டவனின் மறு பெயரால் அழைக்கப்பட்ட ஒரு போராளியின் சகோதரி. இவரது கணவர் கடமையின் நிமிர்த்தம் பிரபல பாடசாலை ஒன்றில் தங்கியிருந்தார்.
வாரத்தில் ஓரிரு முறை பகலில் வந்து ஒரு நேர உணவு உண்டு விட்டு பிள்ளைகளுடன் அளவளாவி விட்டுச் செல்வார். குடும்பப் பொறுப்பு முழுவதும் இப் பெண்மணியே சுமந்து வந்தார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்த தனது தம்பி படிப்பை இடைநிறுத்தி இயக்கத்தில் இணைந்து கொண்டமை குறித்து சிறிது வருத்தம். இருந்தாலும் அவர் மீதான பாசம் குறையவில்லை. அதனால் தம்பியோடு வரும் போராளிகளை உபசரித்து வந்தார்.
நாளடைவில் அந்த வீட்டின் இன்னொரு பக்கமாக இருந்த கொட்டகை ஒன்றுக்குள் போராளிகள் தங்கிவந்தனர். தமது கடமையின் நிமித்தம் வெளியில் சென்று வரும் அவர்கள் எத்தனை மணிக்குத் திரும்பினாலும் அங்கே சாப்பாடு தயாராக இருக்கும். அவர்கள் குளிப்பது ஆடை தோய்ப்பது எல்லாம் அந்த வீட்டில் தான்.
ஒரு நாள் பகல் அப்பெண்மணியின் கணவர் வந்தார். கொடியில் பல சாறங்கள் காய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். ' இதென்ன கன சாறங்கள் காயுது. இவ்வளவு சாறம் நம்ம வீட்டில் இல்லையே. " என்று கேட்டார்.
உடனே அந்தப் பெண்மணி சேவையராக இருக்கும் தமது உறவினரின் பெயரைக் குறிப்பிட்டு அவன்ட லேபர் மார் வந்து தங்கினவங்க அவங்கள் தான் தோய்ச்சுக் காயவைச்சிட்டுப் போயிட்டாங்கள் " என்றாள். அந்தக் கொட்டகைக்குள் சேவையரின் சாமான்களும் இருந்தபடியால் இவரும் அதை முழுமையாக நம்பிவிட்டுப் போய்விட்டார்.( அந்தக் காலத்தில் போராளிகள் பெரும்பாலும் சாறத்துடனேயே திரிந்தார்கள்.)
இக் காலகட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இனர் தன்னாமுனைப் பகுதியில் ஒரு சிகரெட் வானைக் கொள்ளையடித்திருந்தனர். இது சம்பந்தமாக ஆராய்ந்த பொலிஸார் அச் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவரைக் கைது செய்தனர். சிங்களவர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த போது ஜே.வி.பி என்ற ஒரேயொரு இயக்கம் மட்டுமே இருந்தது.
தமிழரிலோ உருவாகியது-- காணாமற்போனது-- கரைந்தது-- கலந்தது-- உடைந்தது என 36 இயக்கங்கள் இருந்தன. ஆனால் எதைப் பிடித்தாலும் புலி எங்கே தான் என்று தான் பொலிஸார் கேட்பார்கள். அந்த வகையில் ஆரம்பித்த விசாரணை அந்த இளைஞரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
காசிஆனந்தனின் சகோதரி சிவமலரைக் காட்டிக் கொடுத்தான். தொடர்ந்து திருமணமாகி சில நாட்களே ஆகியிருந்தும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குச் சாரதியாக பங்காற்ற வந்த தனது சகோதரனை இனங்காட்டினார்.
அடுத்து இந்த வீட்டில் தான் புலிகள் தங்குவதுண்டு என இப் பெண்மணியின் வீட்டைக் காட்டிவிட்டார். அங்கே அச் சமயம் போராளிகள் எவரும் இருந்திருக்கவில்லை. அங்கே சென்ற பொலிஸார் ஏமாற்றமடைந்தனர்.
அப்போது அந்த இளைஞன் படுவான்கரையில் இன்னொரு வீடு இருக்கிறது என்று சொன்னார். உடனே வந்த பொலிஸாரில் இருவரை அங்கேயே இறக்கிவிட்டு ஏனையோர் படுவான்கரைக்குச் சென்றனர்.
வீட்டில் இருந்த பெண்மணியையும் பிள்ளைகளையும் அறையொன்றில் தள்ளி இருக்க வைத்துவிட்டு தாமும் உள்ளேயே இருந்தனர். சிறிது நேரத்தில் மட்டக்களப்பின் மூத்த போராளி அங்கே சென்றார். என்ன ஒருவரையும் காணவில்லை என எண்ணியவாறு அவர் உள்ளே செல்லவும் உள்ளே இருந்த பொலிஸார் அவரை இழுத்து அறைக்குள் தள்ளினர்.
உடனே அப் பெண்மணி ' என்ன வீடியோ கொப்பி வாங்கவா வந்தீங்க " என்றவாறு அவரின் அருகே வந்திருந்து அவரது இடுப்புப் பகுதியை பொலிஸாருக்குத் தெரியாமல் தடவிப் பார்த்தார். ஆயுதம் இல்லை என்பது உறுதியாகத் தெரிந்ததும் இப்போதைக்கு அசம்பாவிதம் எதுவும் நடக்காது என உணர்ந்து கொண்டாள்.
சுகமில்லாதவர் போல் நடித்த அப் போராளி சில தடவைகள் இருமி வெளியே சென்று துப்பினார். அடுத்த தடவை வாந்தி வருவது போல் நடித்து வெளியே வந்ததும் பாய்ந்தோடிவிட்டார்.
சிறிது நேரத்தில் அப் பெண்மணியின் கணவர் வந்தார். அவரையும் உள்ளே இருத்தி விட்டனர் பொலிஸார். அவருக்கோ எதுவும் புரியவில்லை. தமது வீட்டுக்குள் ஏன் பொலிஸார் வந்தனர் என்று பேந்தப் பேந்த முழித்தார். அடுத்து அந்தப் பெண்மணியின் போராளியான சகோதரன் துவிச்சக்கரவண்டியில் கேற்றைத் திறந்த படி வந்தார்.
அங்கே மூத்த போராளி கொண்டு வந்த துவிச்சக்கரவண்டி காணப்பட்டது. ஆனால் வெளியில் எவரையும் காணவில்லை. உள்ளே போகலாமா விடலாமா என்று சந்தேகம்.உள்ளே இருந்த பொலிஸார் அவரை உள்ளே கூப்பிடுமாறு வீட்டுக்காரரிடம் கூறினார்.
அதனால் அந்தப் பெண்மணியின் கணவர் ' உள்ளே வரட்டாம் " என்று கூறினார். என்ன உள்ள வரட்டாம் என்று கூறுகிறார் அத்தான். உள்ளே வா என்றே கூப்பிட்டிருக்கலாமே இதில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று யூகித்த அவர் துவிச்சக்கரவண்டியைப் போட்டுவிட்டு பாய்ந்தோடிவிட்டார்.
திரும்பி வந்த பொலிஸ் வாகனம் அனைவரையும் ஏற்றிச் சென்றது. விசாரணையின் போது விக்டர் பெரேரா என்ற எஸ்.பி.யும் பியசேனா என்ற பொலிஸ் உத்தியோகத்தரும் கடுமையாக நடந்து கொண்டனர்.
அப்போது சிறுமியாக இருந்த மகளின் தலையில் கைத்துப்பாக்கியை வைத்தபடி ' உண்மையைச் சொல் " என்று அப் பெண்மணியை மிரட்டினர். அவரோ எங்களுக்கு எதிலும் சம்பந்தமில்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தார்.
சிறுமியின் தலையில் துப்பாக்கியால் தாக்கினர். மண்டை உடைந்து இரத்தம் வழிந்தது. ஆனாலும் அப் பெண்மணி அசரவில்லை. இதற்குள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இளைஞர் கொஞ்சம் கூடுதலாகவே சொல்கிறார் என்றும் இப் பெண்மணியின் கணவர் எதுவுமே தெரியாத அப்பாவி எனவும் புரிந்து கொண்டனர்.
முடிவில் ஆண் பிள்ளைகளை மட்டும் வைத்துக் கொண்டு மூவரையும் விடுவித்தனர். தம்மால் இந்தக் குடும்பத்துக்கு இந்த நிலை ஏற்பட்டதே என போராளிகளுக்கு துக்கம். ஆனாலும் மாணவர்களான தமது பிள்ளைகளை எப்படியும் விடுவித்து விடுவர் என்றும் போராளிகள் தப்பியதே தனக்குத் திருப்தி என்றும் இப் பெண்மணி ஒருவர் மூலம் செய்தி அனுப்பினார்.
வடக்கே திரு குமாரவேலுவும் கிழக்கே இப்பெண்மணியும் மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்தவர்கள். விவிலியத்தில் எபேச்சியார் 5 அதிகாரம் 5 வசனங்கள் 21 முதல் 31 வரை வடக்கேயிருந்த போதகரும் கிழக்கே இருந்த போதகரும் திருமணங்களை நடத்தி வைத்த போது கூறியிருப்பார்கள். ' புருசர்களே தங்கள் மனைவிகளை தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து அவர்களில் அன்பு கூரவேண்டும்.
தன் மனைவியில் அன்பு கூருபவன் தன்னில் அன்பு கூருகிறான். மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு தன் மனைவியுடன் இசைந்து ஒரே மாமிசமாக இருப்பார்கள் " என்று திரு குமாரவேலுவின் திருமணத்தில் வாசிக்கப்பட்டிருக்கும். அது போலவே ' தெய்வ பயத்தோடு ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள் மனைவிகளே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்திருக்கிறது போல உங்கள் சொந்தப் புருசருக்குக் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறது போல புருசனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறார். " என்று இப் பெண்மணியின் திருமணத்தின் போது வாசித்திருப்பார்கள். எதிலும் ஒழிவு மறைவில்லாமல் ஒருவருக்கொருவர் உண்மையாயிருக்க வேண்டும் என போதகர்கள் நிச்சயம் போதித்திருப்பார்கள்.
தமது போராட்டப் பங்களிப்பு குறித்த விடயங்களைத் தவிர ஏனைய விடயங்களில் இருவரும் தமது வாழ்க்கைத் துணைக்கு விசுவாசமாகவே இருந்திருக்கின்றனர். ' பிறப்பால் வந்த உறவுகளை விட பிணைப்பால் வந்த உறவுகளே வலிமையானவை. " என்ற கருத்துப்பட கண்ணதாசனும் எழுதியிருக்கிறார்.
ஆயினும் போராட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தான் இருவருக்குமிடையில் இருந்திருக்கிறது. பல குழந்தைகளைப் பெற்றுத்தந்து தன் குடும்ப பாரத்தைச் சுமந்த மனைவியிடம் கூட இரகசியத்தைப் பேணியிருக்கிறார் குமாரவேலு. பல குழந்தைகளுக்குத் தன்னை அன்னையாக்கி தன்னை முழுமையாக நம்பி ' என்ன கன சாறங்கள் காயுது " என்று கேட்ட தன் அப்பாவிக் கணவருக்குப் பொய் சொல்ல வேண்டி வந்ததே என்று அப் பெண்மணி நினைத்திருப்பார்.
தான் பொய் சொல்லி வாழ்ந்தாலும் தன் கணவருக்கும் இந்தப் போராட்டத்துக்கும் பொய்யாக வாழவில்லை என்ற மனநிறைவுடன் அவர் அண்மையில் கண்ணை மூடியுள்ளார்.
வடக்கே என்றாலும் கிழக்கே என்றாலும் எமது மக்கள் ஒரே உணர்வுடன் தான் இருந்துள்ளார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். ' ஆயிரம் முட்டையிட்ட ஆமை அசையாமல் போகும். ஒரு முட்டையிட்ட கோழி கொக்கரக்கோ என்று கூவுமாம். " என்று கூறுவார்கள். ' நாங்கள் தான் கிழக்கின் தேசியத்தை முதுகில் சுமந்தவர்கள். உராய்ந்து உராய்ந்து காயமேற்படுத்திய வடுவைப் பாருங்கள் " என்று தமது முதுகைக் காட்டும் பல பிரமுகர்களுக்கு இவையெல்லாம் தெரியாத சங்கதிகள்.
ஏனெனில் வண்ணை ஆனந்தன் கூறியது போல ' பழம் பழுத்தால் வெளவால் வரும் " என்ற மாதிரி நிலையில் வந்தவர்கள். அவர்களது நோக்கம் நிறைவேறிவிட்டது. இதில் போராட்டத்தையும் அதை வழி நடத்தியவர்களையும் கிண்டல் செய்து கொச்சைப்படுத்துகிறார்கள்.
தமிழ் அரசியல்வாதிகளும் அப்படித்தான். ஜே.வி.பி மற்றும் அதாவுல்லாவின் நிலைப்பாட்டில் உள்ளார்கள். வடக்கு வேறு கிழக்கு வேறு வடக்கில் எடுக்கும் தீர்மானங்கள் போல கிழக்கில் நாம் எடுக்கத் தேவையில்லை என கல்விமான்களும் சட்டத்தரணிகளும் நினைக்கிறார்கள்.
வடக்கே வந்து போராடிய போராளிகளின் குடும்பங்களும் கிழக்கே சென்று போராடிய போராளிகளின் குடும்பங்களும் கண்ணீர் வடிக்கின்றனர். குறைந்த பட்சம் எமது பிள்ளைகளைப் பயங்கரவாதிகள் என்றாவது சொல்லாமல் இருங்கள் என்று கூறுகின்றனர்.
ஆனால் அவர்கள் ஒலிவாங்கியைத் துடைத்துவிட்டு என்ன பாட்டைப் பாடி அடுத்த தேர்தலுக்கு வாக்கு கேட்பது என்று சிந்தித்த படி புறப்பட்டு விட்டார்கள்.பாவம் காசி ஆனந்தன் அவரது வரிகள் இவர்களது வாயில் புகுந்து தம் கற்பை இழக்கின்றன.
பகலவன்
sinnaththambypa@gmail.com
sinnaththambypa@gmail.com
Geen opmerkingen:
Een reactie posten