தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 5 mei 2015

பிரித்தானிய பாராளுமன்றம் செல்லப்போவது யார்? கைகொடுக்குமா தமிழர் வாக்கு?



பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் அதிகளவில் தமிழ்மக்களை பங்கெடுக்குமாறு அறைகூவல்!
[ செவ்வாய்க்கிழமை, 05 மே 2015, 01:18.46 PM GMT ]
பிரித்தானியாவில் இடம்பெறவிருக்கின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில், அதிகளவிலான தமிழ்மக்களது பங்கெடுப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு பரப்புரைகளை மேற்கொண்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியப் பிரதிநிதிகள், வாக்குரிமையினை தவறாது பயன்படுத்துமாறு அறைகூவல் விடுத்துள்ளனர்.
புலம்பெயர் தேசங்களில் இடம்பெறுகின்ற உள்நாட்டுத் தேர்தல்களில், அந்தந்த நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு வழங்கியுள்ள வாக்குரிமையினை பயன்படுத்துவதனை ஊக்குவிக்கும் தீர்மானமொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் ஏலவே நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் மே 7ம் நாள் வியாழக்கிழமை பிரித்தானியாவில் இடம்பெறவிருக்கின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அதிகளவிலான தமிழ்மக்களை பங்கெடுக்குமாறு நா.தமிழீழ அரசாங்கத்தின் பொதுசன விவகாரங்கள் அமைச்சு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சனநாய வழிமுறை தழுவிய இன்றைய ஈழ விடுதலைப் போராட்டத்தின் மென்வலுவில் புலம்பெயர் தேசங்களில் வாழுகின்ற ஈழத்தமிழ் மக்களின் வகிபாகம் முக்கியமான ஒன்றாகவுள்ள நிலையில் புலம்பெயர் தேசங்கள் தங்கள் குடிமக்களுக்கு வழங்கியுள்ள வாக்குரிமையினை உரியமுறையில் பயன்படுத்துவதன் ஊடாக தமிழ்மக்கள் அத்தேசங்களில் தங்களது சமூக அரசியல் இருப்பினை உறுதியாக அடையாளப்படுத்த முடியும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலில், ஈழத்தவர்களான செல்வி உமா குமரன் மற்றும் திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடதக்கது.

பிரித்தானிய பாராளுமன்றம் செல்லப்போவது யார்? கைகொடுக்குமா தமிழர் வாக்கு?
[ செவ்வாய்க்கிழமை, 05 மே 2015, 01:28.59 PM GMT ]
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல் அண்மித்துள்ள நிலையில், அங்கு புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம் சொக்கலிங்கம் யோகலிங்கம் மற்றும் உமா குமரன் ஆகிய இரு ஈழத்தமிழர்கள் பெரும் போட்டிக்கு மத்தியில் இத்தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.
இது தொடர்பாக இரு வேட்பாளர்களும் லங்காசிறி வானொலிக்கு சிறப்பு செவ்வியினை அளித்துள்ளனர்.
வென்றால் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என கூறுவேன்- சொக்கலிங்கம்
நான் பாராளுமன்றம் சென்று இலங்கையின் இனப்படுகொலைக்கு ஒரு நீதி நியாயம் வேண்டும் என்பதை எடுத்துக்கூறுவேன் என கரோ பகுதியில் வேட்பாளராக இருக்கும் சொக்கலிங்கம் யோகலிங்கம் தெரிவித்துள்ளார்.
தேசிய விடுதலைக் கட்சியில் Pinner, Northwood, Ruislip ஆகிய பகுதிகளுக்கான  வேட்பாளராக சொக்கலிங்கம் களமிறங்கியுள்ளார்.
மேற்படி பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் தேசிய விடுதலைக் கட்சி சார்பில் போட்டியிடும் எனக்கு வாக்குகளை அளித்து பாராளுமன்றத்துக்குள் நுழைய வைக்குமாறு யோகலிங்கம் சொக்கலிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நமது சமுதாயத்துக்கு ஒரு தமிழ்க் குரல் தேவை! உமா குமரன் 
லண்டனில் எதிர்வரும் 7ம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் களத்தில் ஹரோ பகுதியில் தமிழ்ப் பெண்ணான உமா குமரன் அவர்கள் இறங்கியுள்ளார்.
நமது தமிழ் சமுதாயத்திற்கென ஒரு தமிழ்க் குரல் லண்டன் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டுமாயின், ஹரோ பகுதியில் இருக்கும் அனைத்து தமிழ் மக்களும் தனக்கு வாக்களிக்குமாறு உமா குமரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரு வேட்பாளர்களும் தேர்தலில் வெற்றிபெற லங்காசிறி சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
http://www.tamilwin.com/show-RUmtyFTZSUiszE.html

Geen opmerkingen:

Een reactie posten