தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 mei 2015

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல்: கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைக்கும்? கட்சி பொறுப்பிலிருந்து எட் மிலிபாண்ட் விலகல்?



வெளியான தேர்தல் முடிவுகளின்படி 329 ஆசனங்களை பெற்று ஆளும் கன்சர்வேடிவ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தொழில்கட்சி 228 ஆசனங்களைப் பெற்று இரண்டாம் நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தவிர ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி 56 ஆசனங்களைப் கைப்பற்றி மூன்றாம் இடத்தைப் பெறுள்ளது.  
தற்போதைய தேர்தல் முடிவுகளின் படி ஆளும் கொன்சவேட்டிவ் மற்றும் தொழில் கட்சிகளுக்கு இடையில் ஆசன எண்ணிக்கையில் வேறுபாடு சிறிதாக இருப்பினும் இறுதித் தேர்தல் முடிவுகளின் பின்னர் பெரும்பான்மை வாக்குகளால் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்குத் தேவையான ஆசனங்களை கைப்பற்றும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று இரவு வரை இம்முறை எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களை கைப்பற்றாது என்றும், தொங்கு பாராளுமன்றமே அமையும் என்றும் கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருந்த நிலையில் அதற்கு முற்றிலும் மாறானதாக முடிவுகள் வெளியாகி வருகின்றன.
பிரதமர் டேவிட் கமரூன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி இதுவரை வெளியான முடிவுகளுக்கு அமைய 308 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதேவேளை மேலும் 20 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சி முன்னிலையில் உள்ளது. இதற்கமைய கன்சவேடிவ் கட்சி 329 இடங்களை கைப்பற்றி தனித்து ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இறுதி முடிவு குறித்து கருத்துத் தெரிவிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் டேவிட் கமரூன், எவ்வாறாயினும் மீண்டும் கன்சர்வேடிவ் கட்சியே ஆட்சி அமைக்கும் என்பது உறுதி என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை பிரதான எதிர்கட்சியான தொழிற்கட்சி மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக ஸ்கொட்லாந்தில் தொழிற் கட்சி ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. எஸ்.என்.பி என்றழைக்கப்படும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சி ஸ்கொட்லாந்தின் 59 தொகுதிகளில் 56 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
சுயாட்சி அதிகாரமுடைய ஸ்கொட்லாந்தை வலியுறுத்திவரும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் இந்த மகத்தான வெற்றி பிரித்தானிய பாராளுமன்றத்தில் எதிர்வரும் நாட்களில் பாரிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் ஆளும் கூட்டணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்த லிபரல் ஜனநாயகக் கட்சி மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. லிபரல் ஜனநாயகக் கட்சியின் கோட்டைகளாக விளங்கிய பல தொகுதிகளில் அந்தக் கட்சி படு தோல்வியை சந்தித்துள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு மிகப் பரீட்சையமான லிபரல் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எட் டேவியும் தோல்வியைத் தழுவியுள்ளார்.
இதனைத் தவிர தொழிற் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நிழல் நிதி அமைச்சர் எட் போல் தோல்வியடைந்துள்ளார்.
இதேவேளை கடும்போக்கு வலதுசாரிக் கட்சியான யு.கே.ஐ.பி என்ற பிரித்தானிய சுதந்திரக் கட்சி ஒரு இடத்தில் வெற்றிபெற்றுள்ளது. எனினும் அந்தக் கட்சியின் தலைவர் நைஜல் பராஜ் தோல்வியடைந்துள்ளார்.

தேர்தலில் படுதோல்வியின் எதிரொலி: கட்சி பொறுப்பிலிருந்து எட் மிலிபாண்ட் விலகல்?
பிரித்தானிய பொது தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொண்ட எதிர்கட்சி தலைவரான எட் மிலிபாண்ட் கட்சி பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய பொது தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி, 650 தொகுதிகளில் 635 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது.
இவற்றில், கன்சர்வேடிவ் கட்சி பிரதம வேட்பாளரான டேவிட் கேமரூன் 320 தொகைதிகளை வெற்றி பெற்று தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். பிரதமர் கேமரூன் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தனது தோல்வியை எட் மிலிபாண்ட் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
தொழிலாளர் கட்சி தற்போது வரை 228 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 
நாட்டின் முக்கிய கட்சியான தொழிலாளர் கட்சி தோல்வியை சந்திப்பதற்கு காரணத்தை ஏற்றுக்கொண்டு, கட்சி பொறுப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எட் மிலிபாண்ட் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து எட் மிலிபாண்ட் இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பை வெளியிடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

http://www.tamilwin.com/show-RUmtyFTcSUit7A.html

Geen opmerkingen:

Een reactie posten