தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 10 mei 2015

இனப்படுகொலையை விட கொடிய குற்றம் எது?

கெலும் மக்ரேவின் 'நோ பயர் சோன்' ஆவணப்படத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பது நண்பர்கள் பலருக்கும் புதிய செய்தியாக இருந்திருக்கிறது.
சிறப்புக் காட்சிகளின்போது அதைப் பார்த்தவர்கள் அவர்கள். சென்னை தாஜ் ஹோட்டலில் அம்னெஸ்டி (சர்வதேச பொது மன்னிப்பு சபை) நடத்திய சிறப்புக்காட்சியைப் பார்த்தவர்களும் அதில் அடக்கம்.
பரவலாக மக்களைப் போய்ச் சேர்ந்துவிடக் கூடாதே என்கிற நோக்கத்தில் தடை செய்திருந்தாலும், தனிப்பட்ட திரையிடல்களை, ஓரளவு கெடுபிடிகளுடன் அனுமதித்துவிடுகிறார்கள் ஆட்சியாளர்கள். அதையும் தடுத்து நிறுத்தினால், தமிழகத்தில் அது வேறுமாதிரியான விளைவுகளை ஏற்படுத்திவிடுமோ என்கிற அச்சம் அவர்களுக்கு!
நோ பயர் சோன் திரையிடப்படுகிற நாடுகளில் எல்லாம், தனது தூதரகங்கள் மூலம் அதைத் தடுக்க இலங்கை சகல வழிகளிலும் முயல்கிறது.
மலேசியாவில் அந்த ஆவணப்படத்தைத் திரையிட்ட மனித உரிமை ஆர்வலர்கள், அங்கிருந்த இலங்கைத் தூதரகம் கொடுத்த அழுத்தத்தால், கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
அப்போது இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர், கோத்தபாய ராஜபக்ச. 'மலேசியாவில் நோ பயர் சோன் ஆவணப்படத்தைத் திரையிட முயன்ற விடுதலைப்புலிகள் கைது' என்றுதான் மறுநாள் செய்தி வெளியிட்டது, கோத்தபாயவின் கட்டுப்பாட்டில் இருந்த பாதுகாப்புத் துறை வெப்சைட்.
நடந்தது இனப்படுகொலை என்கிற உண்மையை வெளிப்படையாகப் பேசிய சயீத் அன்வர் மலேசியாவின் பிரதமராகியிருந்தால், 'நோ பயர் சோன்' ஆவணப்படத்தை அந்த நாடு தடுத்து நிறுத்தியிருக்காது என்று நினைக்கிறேன் நான்.
மலேசியாவின் நிலைதான் இந்தியாவிலும்! நடந்த இனப்படுகொலையை மக்களவையில் அம்பலப்படுத்திய பாரதீய ஜனதாவின் யஷ்வந்த் சின்ஹா வெளியுறவு அமைச்சராகியிருந்தால், கெலும் மக்ரேவுக்கு இந்தியா இந்நேரம் ஒரு விருதுகூட வழங்கியிருக்கக் கூடும்.
நமது துரதிர்ஷ்டம், மோடியின் நாடிபிடித்துப் பார்த்த சின்ஹா, அரசியலிலிருந்தே ஒதுங்கி நிற்கிறார். நானே பிரதமர் - கனவில் மிதந்தபடியே ராஜபக்சவிடம் நினைவுப் பரிசு பெற்ற சுஷ்மா, வேறு வழியில்லாமல் வெளியுறத் துறைக்குள் பதுங்கியிருக்கிறார்.
நட்புநாட்டுடனான உறவை பாதித்துவிடும் - என்பதுதான் 'நோ பயர் சோன்' ஆவணப்படத்தை அனுமதிக்க மறுப்பதற்கு அரசு தெரிவித்திருக்கும் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய 'காற்றுக்கென்ன வேலி' திரைப்படத்துக்குத் தடை விதித்தபோது, சென்சார் போர்டு முன்வைத்த 5 குற்றச்சாட்டுகளில் அதுதான் முக்கியமானது. அந்த அடிப்படையில் சொல்கிறேன் இதை!
சகோதரி ஜெ.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, இனப்படுகொலை செய்த ஒரு நாட்டை நட்பு நாடென்று கருதுவது எவ்வளவு பெரிய பிழை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இலங்கை இந்தியாவின் நட்பு நாடு இல்லை - என்று அறிவிக்கும்படி இந்திய அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். தமிழக முதல்வரின் வெளிப்படையான கோரிக்கையை ஏற்க மறுப்பதற்கான காரணத்தை இன்றுவரை ரகசியமாகவே வைத்திருக்கிறது இந்திய அரசு.
எம் இனத்தைக் கொன்று குவித்த ஒரு நாடு தான் இந்தியாவுக்கு நெருக்கமான நட்பு நாடாக இருக்க முடியுமென்றால், 8 கோடி தமிழர்கள் இருக்கும் தமிழ்நாடு எப்படி இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்கமுடியும்?
இந்த நியாயமான கேள்வியைத் தங்களுடைய அகில இந்தியத் தலைகளிடம் கேட்கிற துணிவு கமலாலயத்தில் எவருக்காவது இருக்கிறதா? பேட்டை ரவுடி மாதிரி 'வீட்டுக்குப் போயிடுவியா' என்று மற்றவர்களை மிரட்டிக்கொண்டிருக்கும் ராஜாவுக்கோ, மூத்த தலைவர் இல.கணேசனுக்கோ அது இல்லாமல் இருக்கலாம்.... தமிழிசைக்குக் கூடவா அந்தத் தார்மீக தைரியம் இல்லாமல் போய்விட்டது!
கொல்லப்பட்ட எம் ஒன்றரை லட்சம் உறவுகளுக்கு நீதிகிடைக்க எதுவெல்லாம் தடையாக இருக்கிறதோ, அதையெல்லாம் அடையாளம் காட்ட வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அந்த முட்டுக்கட்டைகளைத் தகர்க்க எதைப் பேச வேண்டுமோ அதைத்தான் பேசுகிறோம் நாங்கள்.
இந்தியா எம் இனத்துக்குச் செய்திருக்கும் துரோகத்தை வெளிப்படையாகப் பேசுகிற வைகோ முதலான அத்தனைப் பேர்மீதும் 'தேசத் துரோகி' என்று முத்திரை குத்தத் தயங்கமாட்டார்கள் - சு.சு.போன்ற வெற்று வேட்டுக்கள். மோடி அரசு சோனியாவின் பாதையில் நடக்கிறது என்றால், சோனியாவின் அம்பான ராஜபக்சேவின் பாதையில் நடப்பவர்கள் அவர்கள். அவர்களது பேத்துமாத்தையெல்லாம் நாங்கள் பொருட்படுத்த முடியாது.
தேசபக்தி - என்கிற சலங்கையைக் கட்டிக்கொண்டு ஆடிய இலங்கையிலேயே, அது செல்லாக்காசாகிவிட்டது இப்போது! 'தேசத் துரோக' பூச்சாண்டியைக் காட்டி அச்சுறுத்துவதெல்லாம் அங்கேயே மலையேறிவிட்டது.
கெலும் மக்ரேவின் 'நோ பயர் சோன்' ஆவணப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதித்தாக வேண்டும் - என்று வலியுறுத்தும் லால் விக்கிரமதுங்கவின் கடிதத்தைப் படித்த அனைவரும் இதைப் புரிந்துகொண்டிருப்பார்கள்.
"நோ பயர் சோன் - மூலம், உண்மையில் என்ன நடந்ததென்பதை மேக்ரே அம்பலப்படுத்தியுள்ளார். இந்த உண்மைகளைப் பேசியவர்களைத்தான் ராஜபக்ச அரசு 'தேசத் துரோகிகள்' என்றது. அதன்மூலம், உண்மைகளை மூடி மறைக்க முயன்றது. இப்படியெல்லாம் மூடிமறைத்ததுதான், இலங்கையின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இடைஞ்சலாக இருந்தது.
இவ்வளவுக்கும் பிறகாவது, என்ன நடந்ததென்கிற உண்மையை மக்கள் தெரிந்துகொள்ள வழிவிடவேண்டும். நோ பயர் சோன் ஆவணப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார் லால் விக்கிரமதுங்க.
'சொந்த நாட்டின் மக்களை விமானத்திலிருந்து குண்டுவீசிக் கொல்கிற ஒரே நாடு எம் இலங்கைதான்' - என்று மனம் திறந்து பேசியதற்காக, கொழும்பு நகரில் பட்டப்பகலில் கோத்தபாயவின் கூலிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டானே லசந்த விக்கிரமதுங்க என்கிற மாமனிதன்.... அவனது சகோதரர்தான் இந்த லால் விக்கிரமதுங்க.
தனது சகோதரனின் கொலைக்காக மட்டுமில்லாமல், தமிழினப் படுகொலைக்காகவும் நீதி கேட்கிற லால் போன்ற உயர்ந்த மனிதர்களைப் பார்க்கிறபோதுதான், கமலாலயங்களும் அறிவாலயங்களும் மானுட வாடையே இல்லாத சூனியப் பிரதேசங்களாக மாறிவிட்டிருக்கிற கொடுமை உறைக்கிறது நமக்கு!
அளவுக்கதிகமான சோனியா பக்தியால், அன்னையின் அனுக்கிரகத்துடன் நடந்த இனப்படுகொலையைத் தடுக்கத் தயங்கியது ஒரு ஆலயம். சு.சு.க்களின் ஆலயத்திலோ மிதமிஞ்சிய ராஜபக்சே பக்தி... அதனால் இனப்படுகொலையை மூடிமறைக்க முயல்கிறது.
இந்த சோனியா பக்தியும் ராஜபக்ச பக்தியும் இரண்டறக் கலந்ததுதான் தேசபக்தி என்றால், அப்படியெல்லாம் வீணாய்ப் போன ஒரு பக்தி எங்களுக்கு இல்லாமல் போகக்கடவது!
நடந்தது இனப்படுகொலை - என்கிற உண்மையைப் பேசுபவர்கள் மீது இரண்டு முத்திரைகளைக் குத்துகிறது இலங்கை. ஒன்று, தேசத்துரோக முத்திரை. இன்னொன்று, புலி முத்திரை. (இங்கே மட்டும் என்ன வாழ்கிறது?) அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உண்மையைப் பேசுகிற மிகச்சிலரில் ஒருவர் - பாஷண அபயவர்தன.
ஜனநாயகத்துக்கான இலங்கை பத்திரிகையாளர்கள் அமைப்பின் பொறுப்பாளரான அபயவர்தன, பிறப்பால் சிங்களவர். உண்மையை உரைத்ததால் உயிராபத்து ஏற்பட, இலங்கையிலிருந்து வெளியேறி அயல்நாடு ஒன்றில் வசிக்கிறார். (அபயவர்தன போன்றவர்கள் புத்தருக்குப் பிறகுதான் இலங்கையிலிருந்து வெளியேறினார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது!)
நோ பயர் சோன் - ஆவணப்படம் சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட நிகழ்ச்சியில் அபயவர்தன நிகழ்த்திய உரை, ஒரு வரலாற்று ஆவணம். சுருக்கமான உரைதான் என்றாலும் பெருஞ்செய்திகள் அடங்கியிருந்தன அந்த உரையில்!
"சொந்த மக்கள் மீதே கொடிய வன்முறைகளை ஏவிவிட்டது எங்கள் அரசு. அது, மிக மிகக் கொடுமையான அரச பயங்கரவாதம். அதை நேரில்பார்த்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான்.....
1983ல், என்னுடைய இளம்பிராயத்தில், அரசின் நேரடி ஆதரவுடன் சிங்கள இன வெறிக் கும்பல்கள் தமிழர்களைக் கொன்றதையும், அவர்கள் உடைமைகளைச் சூறையாடியதையும் கொள்ளையடித்ததையும் பார்த்திருக்கிறேன்.....
2009ல், ஒரு மிகச்சிறிய நிலப்பரப்புக்குள் தமிழர்களை வலுக்கட்டாயமாக விரட்டி, பட்டினி, பீரங்கித் தாக்குதல் மற்றும் விமானக் குண்டுவீச்சால் கொன்று குவித்தது எங்கள் அரசு. தப்பிப் பிழைத்தவர்கள், மிகக்கொடிய சித்ரவதைகளுக்கும் பாலியல் வன்முறைக்கும் உள்ளாக்கப்பட்டனர். எங்கள் மக்கள் எவ்வளவு ஈவிரக்கமற்றவர்கள் என்பதையும், எங்கள் அரசு எவ்வளவு கொடுமையான அரசு என்பதையும் கண்ணெதிரில் பார்த்தோம்......
சிங்கள இனத்தைச் சேர்ந்த நான், எம் அரசு செய்த குற்றம் எதையும் மறுப்பதற்காக இங்கே வரவில்லை. கற்பனை செய்துபார்க்கக்கூட முடியாத கொடும் குற்றங்கள், எங்களால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டிருப்பதைச் சொல்வதற்காகவே வந்தேன். சிங்கள இனத்தைச் சேர்ந்தவன் என்கிற முறையில் அந்தக் குற்றங்களுக்கு நானும் பொறுப்பேற்றாக வேண்டும்.....
நடந்த குற்றங்களை மூடி மறைத்தால்தான் தேச ஒருமைப்பாட்டைக் காப்பாற்றமுடியும் என்று எங்களில் சிலர் நம்புகின்றனர். செய்த குற்றத்தை மறுப்பதுதான் எங்களைப் பலப்படுத்தும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
செய்த கொடூரங்களையெல்லாம் மூடிமறைத்தால்தான் காப்பாற்ற முடியும் என்கிற நிலையில் இருக்கிற ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் என்ன அர்த்தம் இருக்க முடியும்?.......
என்னைப் போன்ற சிங்களவர்கள், ஆபத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வேறுமாதிரி சிந்திக்கிறோம். கொல்லப் பட்டவர்களை மறந்துவிட்டு, கொலைகாரர்களுடன் சேர்ந்து வாழவேண்டிய நிலையில் பல தலைமுறைகளாக நாங்கள் இருக்கிறோம். இதனால், எங்கள் தார்மீக பலத்தை அறவே இழந்து விட்டோம்.....
செய்த குற்றங்களையும் கொடூரங்களையும் மூடி மறைப்பதற்கு துணிவோ தைரியமோ தேவையில்லை. கொடிய செயல்களை எதிர்த்துப் பேசத்தான் அந்த இரண்டும் தேவைப்படுகிறது....
நாங்கள், நடந்த கொடுமைகளைத் தடுக்கத் தவறியவர்கள். அதற்கான கூட்டுப் பொறுப்புணர்வு எங்களுக்கும் இருக்கிறது. இதை ஏற்றுக்கொள்கிற மனத்துணிவுதான் மற்றெல்லாவற்றையும் காட்டிலும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்...."
அபயவர்தனவின் இந்த உரை, சிங்கள இனத்தின் மனசாட்சியை மட்டுமல்ல, மோடியின் மனச்சாட்சியையும் தட்டி எழுப்புகிற உரை.
இலங்கையின் அச்சு அசலான பயங்கரவாதிகள், சிங்கள ஆட்சியாளர்கள்தான். தமிழரின் பிணங்களின் மீது நடந்து சென்றாவது பதவிநாற்காலியில் அமர அவர்கள் தயங்குவதில்லை. தமிழரை எவன் அதிகமாகக் கொடுமைப்படுத்துகிறானோ, அவன்தான் ஹீரோ என்கிற தோற்றம் காலப்போக்கில் உருவாகி விட்டது. அதன் விளைவுகளில் ஒன்றுதான், ராஜபக்ச.
நவீன சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ சொன்னதைப்போல், ராஜபக்ச போன்றவர்கள்தான் மிகக் கொடிய பயங்கரவாதிகள். அந்த பயங்கரவாதிகளிடமிருந்து தங்கள் இனத்தைக் காப்பாற்றப் போராடிய பிரபாகரனும் அவனது தோழர்களும் விடுதலைப் போர் வீரர்கள். அன்று, லீ முன்மொழிந்ததைத்தான், அபயவர்தனவின் உரை வழிமொழிகிறது இன்று! 26 மைலில் இருக்கும் இந்தியா இன்னுமா இந்த நிதர்சனத்தை உணரவில்லை!
இனப்படுகொலை செய்த இலங்கையுடன் நட்பு பாராட்டாதே.... என்று தமிழகம் அழுத்தந்திருத்தமாக அறிவுறுத்தியும் பயங்கரவாத இலங்கையின் நட்பைத் துண்டிக்காத இந்தியா, விடுதலைப் புலிகள் என்கிற விடுதலைப் போராட்ட அமைப்பின் மீதான தடையை மட்டும் நீட்டித்துக் கொண்டே போகிறதென்றால் என்ன அர்த்தம்?
யாரை பயங்கரவாதி என்கிறார்கள் இவர்கள்! அடித்தவனையா, திருப்பி அடித்தவனையா? இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமலா ஆட்சி நடத்துகிறார்கள்!
உலகில் நடந்த வேறெந்த இனப்படுகொலைக்கும், ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை அம்பலப்படுத்தக் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் அளவுக்கு வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. தமிழினப் படுகொகொலைக்கு மட்டும் இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்திருக்கிறதென்றால், அதற்கு கெலும் மக்ரே ஒருவன்தான் காரணம். மக்ரே மூலம் கிடைத்த அந்த ஆதாரங்களை மூடிமறைப்பதற்காகவா பதவியிலிருக்கிறார் மோடி?
1944ம் ஆண்டுக்கு முன் இனப்படுகொலையைக் குறிப்பிடுகிற “ஜெனோ-சைடு” என்கிற வார்த்தையே சர்வதேச அகராதியில் இல்லை. போலந்து நாட்டைச் சேர்ந்த யூத சட்ட வல்லுநர் ராபேல் லெம்கின் தான், நாஜிக்களின் கொடுமையை உணர்த்த அந்த வார்த்தையை அறிமுகப்படுத்தினார்.
பன்னாட்டுக் கூட்டமைப்பில் அவர் படித்த “காட்டுமிராண்டித்தனமான குற்றம்” என்கிற கட்டுரையில் இந்த வார்த்தை இடம்பெற்றது. ஜெனோ - என்பது கிரேக்க வார்த்தை. ஒரு சமூகம் அல்லது இனத்தைக் குறிப்பது. சைடு - என்பது படுகொலையைக் குறிக்கிற லத்தீன் சொல்.
லெம்கினின் தொடர் முயற்சியால், 1948ல், இனப்படுகொலையை ஆகப்பெரிய குற்றமாக அறிவித்தது ஐ.நா. 2002ல், அது சர்வதேச நீதிமன்றத்தின் சட்டமாகியது.
உலகின் ஆகப்பெரிய குற்றமாக அதுதான் கருதப்படுகிறது இன்றுவரை. என்னைப் பொறுத்தவரை, இனப்படுகொலையைக் காட்டிலும், அதை மூடிமறைக்க முயற்சிப்பதுதான் கடுமையான குற்றம் என்று கருதுகிறேன்.
சோனியாகாந்தி செய்த அந்தக் கொடிதினும் கொடிய குற்றத்தை மோடியும் செய்கிறார் - என்பது எனது பகிரங்கமான குற்றஞ்சாட்டு. சோனியா செய்ததை மோடியும் செய்வது ஏன் - என்பதுதான் எனது கேள்வி.
இனப்படுகொலையை மூடி மறைப்பதன் மூலம்தான் இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற முடியும் என்று சோனியாவைப் போலவே நினைக்கிறாரா மோடியும்!
அபயவர்தனவின் உரையை மோடி படித்துப் பார்க்கட்டும். திட்டமிட்டு ஓர் இனம் அழிக்கப்படுவதை மூடிமறைக்க முயல்வது, இனப்படுகொலையைக் காட்டிலும் கடுமையான குற்றம் என்பதைப் புரிந்துகொள்ளட்டும்!
சோனியாவின் பாதையிலேயே போய்க் கொண்டிருந்தால், 3016ல் கூட தமிழிசையால் முதல்வராக முடியாது என்பதை உணர்ந்து, இனிமேலாவது திருந்தட்டும்!
புகழேந்தி தங்கராஜ்
mythrn@yahoo.com

Geen opmerkingen:

Een reactie posten