யாழில் மிருகபலியிடலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், இவற்றை கட்டுப்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் வைத்தியர் நந்தகுமார், இல்லாத நீதிமன்ற தீர்ப்பை இருப்பதாக பொய்யுரைக்கின்றார் என வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் எஸ்.சுகிர்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், மிருகபலியிடல் வழிபாடுகளுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கமைய தெல்லிப்பளை பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.
ஆனால் மற்றைய பகுதிகளில் அவ்வாறான நிலை இல்லை. எனவே பொலிஸார் இந்த விடயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய வலி,வடக்கு பிரதேச சபை தலைவர் எஸ்.சுகிர்தன்,
நீதிமன்றம் அவ்வாறு எவ்வித தீர்ப்பையும் வழங்கவில்லை. வழங்காத தீர்ப்பை வழங்கியதாக பொய் கூறப்படுகின்றது. நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளதாவது, உரிய நடைமுறைகளுடன் பொறுப்பானவரின் ஒப்புதலுடன் அதாவது பிரதேச சபை தலைவரின் ஒப்புதலுடன் மக்கள் தங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என்பதே ஆகும்.
எனவே பிரதேச சபை தலைவரின் அனுமதியுடன் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, மக்கள் வழிபாடுகளை செய்யலாம். அதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் ஒத்துழைப்பு வழங்கி செயற்படவேண்டும். அதை செய்யாமல் பிரதேச சபை மீதும், பொலிஸார் மீதும் குற்றம் சுமத்தவேண்டாம்.
இதேவேளை வழிபாட்டின் போது அமைதியின்மை உருவாகினால் மாத்திரமே பொலிஸார் தலையிடலாம் எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
Geen opmerkingen:
Een reactie posten