திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்றுப் புகழ் பெற்ற கன்னியா வெந்நீர் ஊற்றுக் கிணறுகளுக்கு அருகில் பாரிய பௌத்த விகாரை ஒன்றை அமைக்க அரசாங்கம் காணி ஒதுக்கீடு செய்துள்ளது.
திருகோணமலை வில்கம் ரஜமஹா விகாரையின் பிரதான தேரர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக ஒரு ஏக்கர் காணி அரசாங்கத்தால் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.
அரச உயர்மட்டத்தின் பணிப்புரையை அடுத்து, சுமார் 0.4120 ஹெக்டர் காணியை வில்கம் விகாரை நிர்வாகத்துக்கு வழங்க கொழும்பு காணி ஆணையாளர் நாயகம், கிழக்கு மாகாண காணி ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியருந்தார். தற்போது மேற்படி காணியிலேயே பாரிய பௌத்த விகாரை ஒன்று நிறுவப்படவுள்ளது.
மேலும் இவ்விகாரை நிர்மாணிக்கப்பட்ட பின் அப்பகுதியில் நீண்டகாலமாக பாவனையில் உள்ள பாதையின் அமைப்பை மாற்றவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமுமம் வெந்நீருற்றுக்களை நேரடியாக சென்றடையும் வகையில் இருந்த பாதை மாற்றப்பட்டு, விகாரையைத் தரிசித்த பின்பே வெந்நீருற்றுக்களை அடையும் வகையில் புதிய பாதையொன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் தமிழ், முஸ்லிம் மக்களின் உணர்வுகளை நோகடிக்கும் நடவடிக்கையொன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இராவணேஷன் புகழ்கொண்டதும் இந்துக்களின் புராண இதிகாசங்களுடன் தொடர்பு கொண்டதுமான கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு நேரே பின்புறம், தொன்மைமிக்க சிவன் ஆலயமொன்று இருப்பதுடன், இதன் அருகே இந்துக்கள் தமது ஈமக்கிரியைகளை செய்யும் மடம் ஒன்றும் அமைந்துள்ளது.
மறுபுறத்தில் இங்கு இஸ்லாமியர்களை அடையாளப்படுத்தும் சமாதியொன்றும் இருக்கின்ற இந்நிலையிலேயே இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு இங்கு பாரிய விகாரையொன்றை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தொல்பொருள் ஆய்வு என்ற காரணங்கள் காட்டப்பட்டு இவ்வாறு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலென்றும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten