தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 11 maart 2013

மகிந்த ராஜபக்சவை தூக்கில் இடுமாறு மாணவர்கள் போராட்டம்! சுப்பிரமணியசுவாமியின் கொடும்பாவியும் எரிப்பு


ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கண்டித்து மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று ஒருநாள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் இன அழிப்புக்கு காரணமான ராஜபக்ச மீதும், அந்த அரசு மீதும் பன்னாட்டு போர் குற்ற விசாரணை நடத்த வேண்டும். மத்திய அரசு இலங்கை அரசுடன் வைத்திருக்கும் அனைத்து உறவுகளையும் நிறுத்த வேண்டும்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதங்கள் நடைபெற்று வருகிறது.
கடந்த 4 நாட்களாக சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். பொலிசார் நேற்று நள்ளிரவில் உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை கட்டாயப்படுத்தி சிகிச்சைக்காக இழுத்துச் சென்றனர்.
இந்த மாணவர்களுக்கு ஆதரவாகவும், ராஜபக்சவை தூக்கில் இடக்கோரியும் இன்று காலை மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 2,500 பேர் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
பின்னர் கல்லூரி வளாகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநில துணைச் செயலாளர் துரைஅருள்ராஜன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன், கல்லூரி மாணவர்கள் வினோத் குமார், மணிக்கண்டன், குருசேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுமார் 1 மணி நேரம் இப்போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. சமீபத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, ராஜபக்சவை சந்தித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்மை போராட்டத்தின் போது எரிக்கப்பட்டது.
இதேகோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறை தனியார் கல்லூரி மற்றும் பூம்புகாரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கல்லூரி மாணவ, மாணவிகளும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Geen opmerkingen:

Een reactie posten