தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 maart 2013

யாழில் மீண்டும் குடும்ப விபரம் திரட்டும் படையினர்!- பீதியில் மக்கள் !


யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை திரட்டும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், பொது மக்களின் காணிகளின் விவரங்களையும் வீடு வீடாகச் சென்று திரட்டும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாள்களாக யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினர் குடும்பப் பதிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கரையோர கிராமங்களான குருநகர், பாசையூர் பகுதிகளில் நேற்று காலை முதல் படையினர் பதிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
படையினர் இராணுவச் சீருடையுடன் வந்து, குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, அடையாள அட்டை இலக்கம், அவர்களின் தொழில் விபரங்கள் என்பவற்றுடன் காணியின் அளவு, சொந்த வீடு, வாடகை வீடு பற்றிய விபரங்களையும் திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கடந்த 2000 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது மக்கள் தங்கியிருந்த இடங்கள் தொடர்பான விபரங்களையும் இராணுவத்தினர் திரட்டியுள்ளனர். கடந்த வாரம் மயிலிட்டி மக்கள் இடம்பெயர்ந்து உடுவிலில் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்று படையினர் விபரங்களை சேகரித்துள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டு காலப்பகுதியில் யாழில் இராணுவத்தினரால் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டன.அத்துடன் குடும்பப் படங்களும் படையினரால் எடுக்கப்பட்டன.
இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்ததுடன் நாடாளுமன்றில் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து இந்தக் குடும்ப ஒளிப்பதிவு நடவடிக்கைகளைப் படையினர் நிறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.net/show-RUmryDTcNYjq7.html

Geen opmerkingen:

Een reactie posten