தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 13 maart 2013

சிலாபத்தில் வைத்து வெள்ளைவானில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர் அம்பலாங்கொடையில் விடுவிப்பு


சிலாபம், ஆனமடு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட  தமிழ் இளைஞர்  ஒருவர், வெள்ளைவான் காரர்களினால் கடத்திச் செல்லப்பட்டு அம்பலாங்கொடையில் விடுவிக்கப்பட்டதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலிருந்து முந்தலிலுள்ள தனது வீட்டுக்கு காரில் சென்றுகொண்டிருந்த தமிழ் இளைஞரான சிவபாலசிங்கம் கஜந்தன் என்பவர் சிலாபம் சென்மேரிஸ் கல்லூரிக்கு அருகில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.
இவருடைய கார் முந்தல் பிரதேசத்தில் ஏற்கனவே பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.
இது குறித்து கடத்தப்பட்ட இளைஞரின் தாயார் ஆனமடுவ பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த இளைஞர் சட்டத்தரணியுடன் நேற்று முந்தல் பொலிஸில் சரணடைந்தார்.
தான் கடத்தப்பட்ட சம்பவம் குறித்தும் அவர் பொலிஸில் வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளார்.
தான் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து வாக்குமூலமளித்த இளைஞன் கூறியதாவது:
சிலாபம் சென்மேரிஸ் கல்லூரிக்கு அருகில் ரீஷேர்ட் அணிந்த சிலர் துப்பாக்கிகளுடன் எனது காரை மறித்து அதில் ஏறிக்கொண்டனர்.
இவர்கள் என்னை அச்சுறுத்தி காரை செலுத்துமாறு கூறினார்கள்.
முந்தல் பிரதேசத்தில் என்னைக் காரிலிருந்து இறக்கி வெள்ளைநிற வாகனத்தில் ஏற்றினார்கள். அதன் பின்னர் கண்களைக் கட்டி தலையில் துப்பாக்கியைப் பிடித்தவாறு பல கேள்விகளைக் கேட்டனர்.
சகோதரர்கள் கனடா மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ளனரா, அவர்களிடமிருந்து உனக்குப் பணம் வருகிறதா போன்ற கேள்விகளைக் கேட்டனர்.
அண்மையில் எனது வங்கிக் கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபா அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டமை குறித்தும் கடத்தல் காரர்கள் கேட்டனர்.
அவுஸ்திரேலியாவுக்கு என்னை அழைப்பதற்கான ஏற்பாடுகளுக்கு அப்பணத்தை அனுப்பியதாகப் பதிலளித்தேன்.
என்னை ஒரு இடத்தில் இறக்கிவிட்டு 200 ரூபா தந்தனர். கண்ணைத் திறந்து பார்த்தபோது அம்பலாங்கொடையில் நான் இருப்பதை அறிந்தேன்.
அதன் பின்னர் அங்கிருந்து திரும்பி, சட்டத்தரணியுடன் பொலிஸில் சரணடைந்ததாகவும் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten