இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டும் எனவும் ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ள சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள், உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தாய்த் தமிழகமே ஒன்றாகத் திரண்டுள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அந்த வரிசையில் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள், கறுப்புச்சட்டை அணிந்து 8.3.2013 காலை 10.30 மணி அளவில் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே ஒன்று திரண்டு கையில் ஈழத்தில் நடைபெற்ற படுகொலைகளைச் சித்தரிக்கும் படங்கள் மற்றும் வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை கையிலே ஏந்தி, ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
அவர்கள் அங்கே பேசும்போது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழக மாணவர்கள் எந்த அளவிற்கு தீவிரம் காட்டினார்களோ, அதே தீவிரத்தை ஈழத் தமிழர் பிரச்சினையிலும் காட்டுவதாக இருக்கிறோம் என்றும், மத்திய அரசு கோரிக்கைக்கு இணங்கி வராவிட்டால், அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள எல்லா கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
லயோலா கல்லூரி மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக, லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் ஈழத் தமிழர் பிரச்சினையை முன்வைத்து 7.3.2013 காலை 10 மணி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் வந்துள்ளது.
ஈழத் தமிழர்களைக் காக்க தாய்த்தமிழகத்திலே உள்ள ஒவ்வொரு இளைஞர்களுடைய உயிரும் முக்கியம் என்பதை உணர்ந்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் என்பதை மாற்றிக் கொண்டு வேறு வகை அறப்போராட்டங்களில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது பிரச்சினைக்கு மேலும் ஆக்கத்தைத் தரும் என்பதால், உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் உடனடியாக அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மிக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
Geen opmerkingen:
Een reactie posten